சினி நிகழ்வுகள்திரை விமர்சனம்

சியான்கள்’ சினிமா விமர்சனம்

பிள்ளைகளால் அலட்சியப்படுத்தப்படும் பெற்றோர் பற்றிய அதிகாலத்துக் கதை. சற்றே வேறு கோணத்தில் அணுகியிருப்பதில் பெரிதாய் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் வைகறை பாலன்.

அந்த கிராமத்தில் ஏழு பெரியவர்கள், உயிருக்குயிரான தோஸ்துகள். ஊரே சியான், சியான் என்றழைக்கிற பெருசுகள்.

அதில் ஒருவருக்கு ஏரோப்ளேனில் பறக்க வேண்டும் என்பது வாழ்நாள் ஆசை. அதற்காக உண்டியலில் பணம் சேர்த்து வருகிறார். அவரது ஆசையை நிறைவேறற மற்ற சீயான்களும் உதவ முன்வருகிறார்கள். அந்த நேரமாகப் பார்த்து ஒருவர் பின் ஒருவராக இரண்டு தாத்தாக்கள் போய்ச் சேர்கிறார்கள். அவர்களுக்கு நேர்கிற மரணம் மனதை ரணமாக்குவதாக இருக்கிறது.

அடுத்ததாக, ஏரோப்ளேனில் பறக்க நினைத்த தாத்தா விபத்தில் சிக்கி, காப்பாற்ற 10 லட்சத்துக்கும் அதிகம் செலவாகும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார். சிகிச்சைக்காக அத்தனை பெரிய தொகையைப் புரட்ட முடிந்ததா? தாத்தா உயிர் பிழைத்தாரா? அவரது பறக்கும் ஆசை நிறைவேறியதா?

அத்தனை கேள்விகளுக்கும் பதற வைக்கிற, நெகிழ வைக்கிற, அழ வைக்கிற காட்சிகளால் பதில் சொல்கிறது திரைக்கதை!

சியான்களாக ஏழு தாத்தாக்கள். அத்தனை பேரும் ஆசை நரைக்காத மீசை நரைத்தவர்கள். தங்கள் தலைமுடியைப் போலவே மனதும் வெளுத்தவர்கள். சீருடைபோல் வெள்ளை வேட்டி, வெள்ளை முழுக்கைச் சட்டையில் ஊர்சுற்றித் திரிபவர்கள். கறி சமைத்துச் சாப்பிடுவதென்றால் கொள்ளை இஷ்டம். அதற்காக எந்த லெவலுக்கும் இறங்கத் தயாரான மனநிலையில் இருப்பவர்கள். இப்படியான மனிதர்களை கதையின் பிரதான கதாபாத்திரங்களாக உருவாக்கியது வித்தியாசமான முயற்சி என்றால் அதற்கேற்ற நபர்களைக் கண்டுபிடித்து நடிக்க வைத்தது தனித்துவம்! அதற்காகவே இயக்குநரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்!

வயதானவர்களுக்கு சம்பாத்தியம், சொத்து பத்து இல்லாவிட்டால் பிள்ளைகள், மருமகள்கள் ஊதாசீனப்படுத்தப்படுவதையும், சொத்து பத்து இருந்தால் அதனால் பெரியவர்களுக்கு நேரும் ஆபத்தையும் காட்சிப்படுத்தியிருப்பதும் கவனிக்க வைக்கிறது.

சடையன் (நளினிகாந்த்), ஓண்டிக்கட்டை (பசுபதிராஜ்), மிலிட்டரி (ஈஸ்வர் தியாகராஜன்), செவ்வால (துரை. சுந்தரம்), மணியாட்டி சமுத்திரசீனி), ரஷ்யா (சக்திவேல்), செவனாண்டி (நாராயணசாமி) என தாத்தாக்களாக வருகிற ஏழு பேரின் தோற்றமும், அவர்களின் அலப்பறையும், அவர்களின் ஊற்சாகமும் ரசிக்க வைக்கிறதென்றால் அவர்களின் நட்பு நெகிழ வைக்கிறது. சடையனாக வருகிற நளினிகாந்த் ஏரோப்ளேன் மீது குழந்தை போல் ஆசை வைத்து பொம்மை பிளேனை ஒளித்து வைத்து விளையாடுவதாகட்டும் மனைவியுடன் ஜாலிகேலி கலாட்டாவில் ஈடுபடுவதாகட்டும் இயல்பான நடிப்பால் கவர்கிறார்.

தாத்தாக்களை மையப்படுத்திய சீரியஸாக கதையில் தென்றல் உரசுவதுபோல் கரிகாலன் – நிஷா ஹரிதாஸ் இளம் ஜோடியின் மெல்லிய காதல் எபிசோடும் அடிக்கடி எட்டிப் பார்க்கிறது.

இன்னபிற பாத்திரங்களும் கதையோடு நகமும் சதையுமாய் பின்னிப் பிணைந்திருப்பதும் புதுமுக நடிகர் நடிகைகள் பாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருப்பதும் பாராட்ட வேண்டிய அம்சம்!

கதையோட்டத்துக்குப் பொருத்தமான பாடல் வரிகளை எழுதியிருப்பதோடு, தானே இசையமைப்பாளராகி அவற்றுக்கு உயிரூட்டியிருக்கிறார்.

பாபு குமாரின் ஒளிப்பதிவு நேர்த்தி.

கிராமத்து மனிதர்களை அவர்களின் இயல்புகளோடு சித்திரித்து, காட்சிகளை மண்மணம் மாறாமல் பதிவு செய்திருப்பது படத்தின் பலம்!

சிலபல சினிமாத்தனங்கள், குறிப்பிட்டுச் சொல்ல சிலபல குறைகள் இருந்தாலும், பெற்றோரை அவர்களின் வயதான காலத்தில் உடன் வைத்து கவனிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை என்பதை வலியுறுத்தியிருப்பதோடு, வயதானவர்களுக்கு இருக்கும் ஆசைகளை எடுத்துக் காட்டியிருப்பது பெற்றோரை ஊதாசினப்படுத்தும் பிள்ளைகளுக்கு மனமாற்றத்தை உருவாக்கலாம் என்பதை மனதில் வைத்து சியான்களை வரவேற்கலாம்!