சினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்

அனுஷ்கா அதே அழகோடு இருக்கிறார்- மாதவன்


ஹேமந்த் மதுகர் இயக்குநர் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிசப்தம்’. அக்டோபர் 2-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்தப் படம் குறித்து மாதவன் அளித்துள்ள பேட்டி:
14 ஆண்டுகள் கழித்து அனுஷ்காவுடன் நடித்த அனுபவம்?
‘இரண்டு’ படத்தில் அவ்வளவு அழகாக இருப்பார் அனுஷ்கா. சினிமாவுக்கு புதுசு. 14 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தில் தான் நடித்துள்ளேன். ஆனால், அதே அழகு தான். சினிமா மீது அக்கறை, அனுபவம், கதை சரியாக நகர்கிறதா என்று கேட்டுத் தெரிந்துக் கொள்வதை எல்லாம் பார்த்த போது ரொம்பவே பெருமைப்பட்டேன். ரொம்ப அற்புதமான நடிகையாகிவிட்டார். ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு பெரிய நடிகையாகிவிட்டார். எந்த பந்தாவும் இல்லாமல் இருக்கிறார்.
‘நிசப்தம்’ அனுபவங்கள்?
இந்தக் கதை என்னிடம் வரும் போது முதலில் வசனங்களே இல்லாத ஒரு படமாக வந்தது. த்ரில்லராக இருப்பதால் கொஞ்சம் கொஞ்சம் வசனங்கள் வைக்கலாம் என்று சேர்த்தோம். அதுவும் கொஞ்ச வசனங்களே இருக்கும். சலோ ப்ளேயராக நடித்துள்ளேன். அதற்காக சலோ கற்றுக் கொண்டேன். அதை வாசிக்க இல்லாமல், சரியாக நடிக்க கற்றுக் கொண்டேன்.
உங்களுடைய பட வரிசையைப் பார்க்கும் போது, எந்தளவுக்கு சந்தோஷப்படுகிறீர்கள்?
சோம்பேறி நடிகனாக இருக்கிறீர்கள். 3 வருடங்களுக்கு ஒரு படம் பண்ணுகிறீர்கள் என்று சொல்வார்கள். 3 வருடங்களுக்கு ஒரு சொதப்பல் படம் கொடுத்தேன் என்றால், அதை விட பேரழிவு எதுவுமே கிடையாது. இப்போது நிசப்தம், மாறா, ராக்கெடரி உள்ளிட்ட சில படங்கள் தயாராக இருக்கிறது. இந்த வரிசையாக சந்தோஷமாக இருக்கிறது. நிசப்தம் படத்தைத் தொடர்ந்து மாறா படமும் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.
சமீபத்திய படங்களின் கதைகள் எதுவுமே உங்களை மையப்படுத்தி இல்லை. இந்தப் படமே அனுஷ்காவின் நிசப்தம் என்று தான் போட்டிருந்தார்கள். கதையின் நாயகனாக எப்போது உங்களைப் பார்ப்பது?
நாயகனை விட கதைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் படத்தில் நடிப்பதோடு அப்படியான படங்களைத்தான் தயாரிக்கிறேன். ‘இறுதிச்சுற்று’ படத்தில் நாயகிக்கு உதவி செய்யும் கதாபாத்திரம் தான் நான். எப்போது நாயகனாக நடிக்க வேண்டும், எப்போது கூடாது என்பது எனக்குத் தெரியவேண்டும். இதை நான் ஆமிர்கான் போன்ற நடிகர்களிடம் கற்றுக் கொண்டேன். படம் ஒழுங்காக வர என்ன கதாபாத்திரமோ அதற்கு ஏற்றாற் போல் மட்டும் நடிப்பது என்பதைத் தெரிந்து கொண்டேன். எனவே எப்போது தேவையோ அப்போது அமைதியாக பின்னால் இருக்கும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என் நடிப்பைப் பற்றிச் சொல்ல நான் ஒரு விளம்பரப் படம் எடுத்தால் போதும். எனவே படத்தில் என் கதாபாத்திரத்தின் அளவு என்ன என்பதைப் பற்றி நான் கவலைப்பட்டதில்லை.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளராக இருக்கிறீர்கள். நாயகனாக நடிக்கும் படத்துக்கு உங்கள் யோசனைகளை சொல்வீர்களா?
எல்லா படங்களுக்கும் நாம் நமது யோசனைகளைச் சொல்ல வேண்டும் என்ற தேவையில்லை. இந்தப் படத்தில் நமது ஈடுபாடு எந்த அளவு இருக்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். மணிரத்னம், ராஜ்குமார் ஹிரானி போன்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கு போது நடிகனாக மட்டும் என் வேலையை மகிழ்ச்சியுடன் செய்யும் ஆசை இருக்கும். அதை செய்வேன். படத்துக்கு உதவும் என்று தெரிந்தால் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வேன். பணம் வீணாகிறது என்று தெரிந்தால் ஒரு தயாரிப்பாளராகவும் என் யோசனைகளை சொல்லுவேன், புதிதாக வரும் இயக்குநருக்கு கதை சொல்வதின் நுணுக்கங்கள் தெரிய ஒரு இயக்குநராக எனது யோசனைகளைச் சொல்லுவேன், இந்தப் படம் தயாரிப்பாளருக்கு லாபம் தர வேண்டும் என்ற நிலையில் ஒரு வழிகாட்டியாக செயல்படுவேன். எனவே இது படப்பிடிப்பு, சூழலைப் பொருத்து. இப்படி நடிகனாக இருப்பதைத் தாண்டி மற்ற விஷயங்களிலும் ஈடுபட்டது பல சமயங்களில் என் திரைப்படம் நன்றாக வளர உதவியிருக்கிறது.
ஓடிடியில் படங்கள் வெளியாவது குறித்து உங்கள் கருத்து என்ன?
முதலில் நிசப்தம் திரையரங்க வெளியீட்டிற்காகவே பண்ணினோம். திரையரங்குகளில் படம் பார்க்கும் அனுபவமே தனி தான். அதற்கு தகுந்தாற் போல் படங்கள் வரவேண்டும். ப்ரீத் என்ற வெப் சீரிஸை படமாக பண்ண முடியாது. ஏனென்றால், அது பெரிய கதை. திரையரங்கிற்காக நடித்த படங்கள் ஓடிடியில் வெளியாகும் போது முதல் கொஞ்சம் வருத்தம், பயம் இருந்தது. நிசப்தம் ஓடிடி தளத்திலேயே இருக்கப் போகிறது. எத்தனை ஆண்டுகள் கழித்துனாலும், உங்களால் பார்த்துக் கொள்ள முடியும். கோவிட் பிரச்சினையால் ஓடிடி தளத்தில் படங்கள் வெளியானால், மக்கள் உடனே பார்த்துவிடுவார்கள்.
டிஜிட்டலில் வரும் விமர்சனங்களைப் பற்றி எப்படி பார்க்கிறீர்கள்?
ஒரு காலத்தில் ட்ரெய்லர் வெளியிட்டுவிட்டு, போன் காலுக்காக காத்திருப்போம். இப்போது படம் வெளியாக 1 நிமிடத்துக்கு முன்பே விமர்சனம் வந்துவிடுகிறது. இப்போது வரும் விமர்சனங்களை எல்லாம் ஏன் சொல்கிறார்கள், எதற்காக சொல்கிறார்கள் என்பதை எல்லாம் பார்க்க வேண்டியதுள்ளது.
‘அன்பே சிவம்’ படத்துக்குப் பிறகு ஒவ்வொரு கதையும் வித்தியசமாக தேர்ந்தெடுத்துள்ளீர்கள். சாக்லெட் பாய் இமேஜ்ஜை உடைக்க எடுத்த முடிவா?
மக்கள் பார்த்து சந்தோஷப்படணும் என்பதற்காகவே நிறைய வித்தியசமான கதைகளைத் தேர்ந்தெடுத்தேன். ஏதேனும் புதிதாக முயற்சிக்கும் போது அனைவருமே பொறாமைப்படுவார்கள். அதை எல்லாம் தாண்டி மக்கள் புதிய முயற்சிகளை வரவேற்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுடைய பார்வை மாறியிருப்பதால் தான், நாம் அதைத்தாண்டி ஒன்று யோசித்து படம் பண்ண வேண்டியதுள்ளது. நிறையப் பேர் என்னிடம் ஏன் எங்களுடன் படம் பண்ண மாட்டிக்கிறீர்கள் என்று சண்டையிட்டுள்ளார்கள். அவர்களிடம் நீங்கள் புதிதாக முயற்சிக்க மாட்டிக்கிறீர்கள் என்பதை எப்படிச் சொல்ல முடியும். ரன், தம்பி, இறுதிச்சுற்று போன்ற படங்களில் என்னை நம்பி பண முதலீடு செய்ததே ரிஸ்க் தான். மாதவனுக்கு ஆக்‌ஷன் பண்ணினால் ஒப்புக் கொள்வார்களா என்ற எண்ணம் தான்.
ஓடிடி தளத்தில் இயக்குநராக, கதாசிரியராக உங்களை காண முடியுமா?
ஓடிடி தளங்கள் புதிய மாற்றமாக வரப் போகிறது என்பது 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். அதற்கான நடவடிக்கைகள் இருந்தோம். சுதா கொங்கராவிடம் சொன்ன போது முதலில் நம்பவே இல்லை. இப்போது எப்படிடா சொன்ன என்று கேட்கிறாள். ஓடிடி தளத்தில் அனைவருமே பணிபுரிய தொடங்கிவிட்டார்கள். மணி சாரே ஓடிடிக்கு வந்துவிட்டார். இப்போதுள்ள நடிகர்கள் வெறும் நடிகர்களாக அல்லாமல் சிறந்த பிசினஸ்மேனாக இருக்க வேண்டும். அதே போல் இயக்குநராக ஆகக் கூடிய திறமை எனக்கு இருக்கா என்று தெரியவில்லை. ராக்கெடரி படமே இறுதிகட்ட கட்டாயத்தால் இயக்கியிருக்கிறேன். அந்தப் படம் எப்படி வந்துள்ளது என்பது கடவுளுக்குத் தான் தெரியும். ஆனால், நினைத்த படமாக எடுத்துவிட்டேன் என்பது தெரியும். ஆகையால் இப்போதைக்கு ஓடிடியில் இயக்குநராக மாட்டேன் என்று மட்டும் சொல்லலாம்.
அன்பே சிவம் இப்போது வரவேற்பு இல்லையே என்று நினைத்ததுண்டா?
கண்டிப்பாக. எனது பல படங்கள் ரிலீஸின் போது ஓடாமல், பின்பு கல்ட் படமாக மாறிக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்பே சிவம், நலதமயந்தி, தம்பி என வரிசையாகச் சொல்லலாம்.
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உங்களுடைய பேச்சு சமீபத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. 2030-ம் ஆண்டு எப்படி இருப்பேன் என்று பேசியிருப்பீர்கள். உண்மையில் 2030-ல் எப்படி இருக்க விருப்பம்?
ஒரே நிலையில் இருப்பது என்பது கடினம். தொடர்ந்து ஒரு விஷயத்தை விடுத்து இன்னொரு விஷயத்தில் பொருந்திப் போக ஒருவர் தயாராக இருக்க வேண்டும். அலெக்ஸாண்டராக இருப்பதிலிருந்து அரிஸ்டாடிலாக மாற முடியாமல் போகும்போதுதான் பிரச்சினைகள் வருகின்றன. இது இருக்கும் இடத்தை விட்டு நகர மனமில்லாமல் பழைய தலைமுறையே ஆதிக்கம் செலுத்த நினைக்கும் எல்லா துறைகளிலும் நடக்கிறது. நான் அப்படி ஒரு நபராக இருக்க விரும்பவில்லை. ஒரு கட்டம் வரைக்கும் நான் முன்னே செல்லலாம். அதன் பிறகு இளைய தலைமுறை பல புதிய சிந்தனைகளோடு என்னை வழிநடத்தும். அப்படி ஒரு நிலை வரும்போது அதற்கேற்றாற் போல மாறிக் கொள்ளும் நல்லறிவு எனக்கு இருக்கும் என நம்புகிறேன். அமிதாப் பச்சன் இந்த காலத்துக்கும் பொருந்திப் போகிறார் போல. அவர் செய்யும் பணிக்கும் இன்றும் அவர் மீது மரியாதை இருக்கிறது.
இன்னும் சிலர் இருக்கின்றார்கள் இல்லையா, அவர்கள் செய்யும் படத்தைப் பார்த்து, அய்யோ இவர் இப்படியெல்லாம் செய்யக்கூடாதே என்று நாம் நெளிவோம். அப்படி ஒரு எண்ணம் என்னைப் பற்றி வருவதற்கு முன்பே நான் விலகிவிட வேண்டும். ஹார்வர்ட் சந்திப்பு ஒன்றில் 2030ல் கூட திரையில் காதல் செய்ய விருப்பம் என்று சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள். அது தவறாகப் புரிந்து கொண்ட பிறகே நான் சொன்னதில் இருக்கும் தவறு எனக்குப் புரிந்தது. நான் சொல்ல வந்தது, அப்போது நான் காதல் படத்தில் நடித்தால் கூட அந்த கட்டத்தில் என் வயதுக்கு ஏற்றார் போல இருக்க வேண்டும் என்பதே. ஆனால் அப்படியான படங்கள் எடுக்கக்கூடிய திறமைகள் வேண்டும். அந்த வயதில் என்னால் அலைபாயுதே நடிக்க முடியாது.
நடிகர் மாதவன், இயக்குநர் மாதவனை யாரைப் பிடிக்கும்?
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நடிகர் மாதவனை விட இயக்குநர் மாதவனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவன் திறமையானவன் என நான் நினைக்கிறேன். நடிகர்களுக்கு ஏற்ற ஒரு இயக்குநன். ராக்கெட்ரி திரைப்படத்தில் மற்ற நடிகர்களை நான் நடிக்க வைத்த விதத்துக்கு கண்டிப்பாக பாராட்டுகள் பெறுவேன்.
ஊரடங்கு முடிந்ததும் என்ன செய்வீர்கள்?
ஊரடங்கு ஆரம்பமானபோது 10 நாட்கள் என்றார்கள். குடும்பத்துடன் செலவிட நேரம் கிடைத்ததே என்று அனைவரும் சந்தோஷப்பட்டோம். 3 மாதங்களுக்குப் பிறகு எப்போது அந்த குடும்பத்தை விட்டு வெளியே வருவோம் என்கிற அளவு பலருக்கு வெறுத்துவிட்டது. இப்போது மக்கள் வீட்டிலேயே அடங்கியிருப்பதால் பலவிதமான உணர்வுகளை அனுபவித்து, அவர்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு வருகின்றனர்.
கடந்த 7 மாதங்களில் நான் என்னைப் பற்றி சில விஷயங்கள் உணர்ந்து கொண்டேன். நான் நினைத்த அளவு நான் உன்னதமானவன் கிடையாது, நான் நினைத்த அளவு உறுதியானவன் கிடையாது, நான் நினைத்த அளவு படைப்பாற்றல் எனக்கில்லை என்பதெல்லாம் தெரிந்தது.
இது போன ஒரு காலகட்டம் நம்மை திடீரென உலுக்கு, வாழ்க்கையில் உண்மையில் எது முக்கியம் என்பதைக் காட்டுகிறது. அது மாறிக்கொண்டும் இருக்கிறது. 4 மாதங்களுக்கு முன் எது முக்கியம் என்று நினைத்தேனோ அதற்கு இப்போது அர்த்தமில்லை. எனவே எல்லோரும் ஒருவித அழுத்தத்தில் இருக்கின்றனர் என்பதை உணர்ந்தேன். எனவே என்னால் முடிந்த குறைந்தபட்ச உதவி, மற்றவர்களின் வாழ்க்கையை சற்று லேசாக்குவதுதான்.
நான் இருக்கும் இடங்களில், சமூக வலைதளங்களில் நேர்மறையாக இருக்கிறேன். பயம், எதிர்காலம் எப்படி இருக்கும் என்கிற கேள்வி எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால் துணிச்சலுடன் இருந்து அனைத்தையும் கையாள வேண்டும். இவ்வளவு மன அழுத்தத்தில் இருக்கும் சமூகத்துக்கு எது பிடிக்கும் என்பது தெரியாது. ஆனால் அதை யோசித்து அதற்கேற்றார் போல படம் நடிப்பது தான் வெற்றியைத் தரும் என்று நினைக்கிறேன்.
என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஊரடங்கு ஆரம்பித்த காலத்தில் எல்லா திரைப்படங்களையும் பார்த்துவிட வேண்டும், த்ரில்லர், திகில், ஆக்‌ஷன், மர்மம் என எல்லா வகையான படமும் பார்ப்போம் என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் நாட்கள் ஆக ஆக, உங்களுக்கு சந்தோஷத்தைத் தரும், ஏற்கனவே நீங்கள் பார்த்த மைக்கேல் மதன காமராஜன் போன்ற நகைச்சுவைப் படங்களைப், மாயாஜாலப் படங்களைப் பார்க்க வேண்டும் என்றே விரும்பியிருப்பீர்கள். எல்லா குடும்பங்களிலும் இது நடந்திருக்கிறது.
எனவே ஊரடங்கு முடிந்து ஆக்‌ஷன் படமோ, சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய படமோ நான் கொடுக்க விரும்பவில்லை. அது போன்ற படங்கள் வரும், ஆனால் நான் நகைச்சுவையான, மக்களை மகிழ்விக்கும் படத்தையே தர விரும்புகிறேன். இண்டியானா ஜோன்ஸ் போல குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு படமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *