என் நண்பன் எஸ்.பிபிக்காக நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனை வெற்றி வேண்டும் – பாரதிராஜா
ஒவ்வொரு திரைக் கலைஞர்களுக்கும் ஊடகம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன். ஒவ்வொரு கலைஞனின் வளர்ச்சிக்கும் ஊடகம் முக்கிய பங்கு வகுத்திருக்கிறது. கலைஞர்களின் திறமைகளை நேரம் காலம் பார்க்காமல் ஓடி ஓடி எழுதி, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு செய்து அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இப்போதும் பல ஊடக நண்பர்களுடன் ஆரம்பக் காலத்திலிருந்து இப்போது வரை பயணித்துக் கொண்டே இருக்கிறேன். பல கட்டங்களில் எனக்குப் பக்கபலமாக ஊடகங்கள் இருந்திருக்கிறது. ஆனால், இன்று நீங்கள் எனக்குப் பக்கபலமாக இருந்ததை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.
என் நண்பன் உடநலம் குன்றி பாதிக்கப்பட்டுள்ளான். அவன் குணமாக வேண்டி இன்று நடைபெறவுள்ள கூட்டுப் பிரார்த்தனை செய்தியை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர் நீங்கள். இன்று நாங்கள் (பாரதிராஜா, இளையராஜா, ரஜினி, கமல், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான்) விடுத்த வேண்டுகோளை ஏற்று அனைத்து தரப்பு மக்களும் இதற்கு ஆதரவு அளித்து மாலை 6 மணி கூட்டுப் பிரார்த்தனைக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதை உங்கள் (ஊடகங்கள்) மூலமாகவே அறிந்தேன். இந்தளவுக்குக் கொண்டு போய் சேர்த்ததிற்கு உங்களுக்கு என் கரம் கூப்பி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன் சேர்த்து உங்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைக்கிறேன். தாங்களும் தங்களுடைய ஊடகங்களில் மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிபரப்பி பிரார்த்தனையில் எங்களுடன் இணையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இந்த கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியதிருப்பதால், ஒவ்வொரு திரையுலகினர் வீட்டிற்கும் சென்றும் நீங்கள் ஒளிப்பதிவு செய்து கொள்வது என்பது முடியாத காரணமாகிறது. ஏனென்றால், நாம் அனைவருமே சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும்.
என் நண்பன் எஸ்.பிபிக்காக நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனை நல்லபடியாக நடந்து, வெற்றிகரமாக ‘பாடும் நிலா’ நலம்பெற வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் மக்களுடைய நோக்கம். இதில் எந்தவித இடைஞ்சலும் இடம்பெற்று விடக்கூடாது என்பதற்காகவே இந்த வேண்டுகோள்.
அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
உங்கள்
பாரதிராஜா