சினிமா செய்திகள்நடிகர்கள்

கமல் வெள்ளித்திரைக்கு வந்து 61 வருசமாச்சாக்கும்!

அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே அப்படீன்னு 1959ஆம் வருசம் களத்தூர் கண்ணம்மா படத்தில் தக்கனூண்டு பாலகனாக அறிமுகமாகி பாடி அசத்தி முதல் படத்திலேயே நேஷனல் அவார்ட் வாங்கி இன்னிவரைக்கும் உலக நாயகனாக உயர்ந்து சினிமாதுறையில் தொடர்ந்து சாதித்துக்கொண்டிருக்கும் கமல்ஹாசனின் திரைப்பயணம் தொடங்கி 61 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த சீனிவாசன், ராஜலட்சுமி அம்மையாருக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள். அதில் கடைக்குட்டி சிங்கம் தான் நமது உலக நாயகன் நம்மவர் பத்மஸ்ரீ, டாக்டர் கமலஹாசன். அவரின் திரையுலக பிரவேசம் மிகவும் எதேச்சையாக நடந்த ஒன்று.

லீவில் சென்னை வந்த பொழுது குடும்ப டாக்டர் ஒருவருடன் ஏவிஎம் ஸ்டூடியோவிற்கு ஷூட்டிங் பார்க்க சென்ற இடத்தில் கமலின் துறுதுறுப்பை பார்த்த ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்கள், கமலை குழந்தை நட்சத்திரமாக தனது தயாரிப்பில் உருவான களத்தூர் கண்ணம்மா படத்தில் அறிமுகம் செஞ்சார் அந்த க. க படம் இதே ஆகஸ்ட் 12ல்தான் ரிலீஸாச்சு

இதையொட்டி அந்தப் படத்தில் துணை இயக்குநராக அறிமுகம் ஆன எஸ்.பி. முத்துராமனுக்கு நம்ம கட்டிங் கண்ணையா போன் போட்டு பேசினப்போ கிடைச்ச தகவலிதோ:

“யார் பையன்’ என்ற படத்தில் பிரமாதமாக நடித்த டெய்ஸி ராணி என்ற பெண் குழந்தைக்கு 10 ஆயிரம் ரூபா சம்பளம் பேசி முன்பணமும் கொடுத்தார்கள். ஹிந்தியில் பெயரும் புகழும் பெற்ற டெய்ஸி ராணியின் நடிப்பு அவர்களை கவர்ந்ததனால் பணத்தைப் பற்றிக் கவலைப்படாது ஒப்பந்தம் செய்தார்கள். சிறுவனான கமலைக் கண்ட ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் ஒரு நிமிடத்தில் கமலின் திறமையை இனம் கண்டு கமலுக்கு மேக் அப் டெஸ்ட் செய்யும்படி கூறினார். இயக்குனர் பிரகாஷ்ராவ்,ஜெமினி, சாவித்திரி ஆகியோருக்கும் கமலை மிகவும் பிடித்து விட்டது.

ஏ.வி.எம். சரவணனுடன் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குச் வந்தான் சிறுவன் கமல். அப்போது “”கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ” என்ற பாடலின் ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருந்துச்சு. கமல் முதன் முதலில் பார்த்த ஷூட்டிங் அது தான். ஏற்கனவே எடுக்கப்பட்ட அப்பாடலின் சில காட்சிகள் மீண்டும் அன்று படமாக்கப்பட்டன. மாங்காய் சீஸனில் அப்பாடல் காட்சி முதலில் படமாக்கப்பட்டது. இரண்டாவது முறையாக அப்பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது மாமரத்தில் மாங்காய்களைக் காணோம். ஆகையினால் டூப் மாங்காய்களை தொங்க விட்டு படப்பிடிப்பை நடத்தினார்கள்.

மாங்காயைக் கண்டதும் சிறுவன் கமலின் நாவில் எச்சில் ஊறியது. தனக்கு ஒரு மாங்காய் பிடுங்கித் தரும் படி ஜெமினி கணேசனிடம் கேட்டான். குறும்புக்கார ஜெமினி கணேசன் மாமரத்தில் ஏறி டூப் மாங்காயை பறித்துக் கொடுத்தார். மாங்காயைக் கடித்ததும் டூப் மாங்காய் என்றதனை எறிந்தான் சிறுவன் கமல். படப்பிடிப்பு நடந்த வீட்டை உண்மையான வீடு என்றே கமல் முதலில் நினைத்தார். அது செட் என்று தெரிந்ததும் “”ஐயையோ டூப் வீடு” என்று சத்தமிட்டான் சிறுவன் கமல்.

இதனிடையே சாவித்திரி உப்புமாவை ஊட்டி விடும் காட்சியில்தான் சிறுவன் கமல் முதன்முதல் நடித்தார். சாவித்திரி ஊட்டிய உப்புமாவை வாயில் அடக்கி வைத்திருந்துவிட்டு படப்பிடிப்பு முடிந்ததும் துப்பி விட்டு “”ஐயையோ டூப் உப்புமா” என்றார். அது உண்மையான உப்புமாதான் என்பதை நிரூபிப்பதற்காக உதவி இயக்குனரான் இருந்த நான் எல்லோரும் சாப்பிட்டுக் காட்டினோம். அதன் பின்னர்தான் அது உண்மையான உப்புமா என்ற உண்மை சிறுவன் கமலுக்குத் தெரிந்தது. (கட்டிங் கண்ணையா)

“களத்தூர் கண்ணம்மா’ மிகவும் சிறப்பான படமானது. எட்டாயிரம் அடி எடுக்கப்பட்டபோது படத்தைப் போட்டும் பார்த்தார்கள். ஏ.வி.மெய்யப்பச் செட்டியாருக்கு திருப்தி இல்லை, சிறுவன் கமலின் நடிப்பில் உருவான “”அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” பாடல் ஒன்றரை நிமிடங்கள் படமாக்கப்பட்டு இருந்தது. அக்காட்சியை இன்னும் அதிகமாக்கி மூன்று நிமிடங்களுக்குள் படமாக்குமாறு கூறினார். அதேபோன்று வேறு சில காட்சிகளையும் மீண்டும் படமாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆனால் இயக்குநர் பிரகாஷ்ராவுக்கும் மற்றவர்களுக்கும் இதில் உடன்பாடு இல்லை. பிரகாஷ்ராவ் புதிய வீடு கட்டி, கிரகப் பிரவேசம் செய்வதற்கு நாள் குறித்து விட்டார். களத்தூர் கண்ணம்மாவை மீண்டும் படமாக்கினால் அவருடைய கிரகப்பிரவேசம் தள்ளிப் போய்விடும். ஆகையால் அவர் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அவரை தடுத்து நிறுத்த ஏ.வி.எம். விரும்பவில்லை. அவருக்குப் பதிலாக பீம்சிங்கை இயக்குனராக ஒப்பந்தம் செய்தது.

இந்த களத்தூர் கண்ணம்மா தயாரான அதே சமயம் கடவுளின் குழந்தை என்ற படத்தை சின்ன அண்ணாமலை தயாரித்தார். கல்யாண்குமார், ஜமுனா ஆகியோர் நடித்த கடவுளின் குழந்தை, களத்தூர் கண்ணம்மா ஆகிய இரண்டு படங்களும் நோபொடீஸ் சைல்ட் என்ற ஆங்கிலப் படத்தின் மூலக் கதையில் இருந்து உருவானவை. “கடவுளின் குழந்தை’ வெளியானதன் பின்னர் களத்தூர் கண்ணம்மா வெளியானால் படம் வெற்றி பெறாது என்று ஏ.வி.எம். சரவணனும் மற்றவர்களும் நினைத்தனர். அதனால் பல காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும் என்று ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் கூறினார். களத்தூர் கண்ணம்மா படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் கடவுளின் குழந்தை வெளியாகி சிறந்த படம் என்ற விமர்சனத்தைப் பெற்றது.

அந்தக் கடவுளின் குழந்தைக்குப்பின்னர் களத்தூர் கண்ணம்மா வெளியாகி பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இரண்டு படங்களும் ஒரே கதை என்று தெரியாத வகையில் படமாக்கப்பட்டிருந்தன. சிறுவன் கமலின் நடிப்பு சகலரையும் கவர்ந்தது. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல் அனைவரின் மனதையும் கவர்ந்தது. அப்பாடலின் முதல் வரி அம்மையும் நீயே அப்பனும் நீயே என்றுதான் இருந்தது. ஏ.வி.எம். சரவணனின் மூத்த சகோதரியின் கணவரான அருண் வீரப்பன்தான் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே எளிமையாக உள்ளது என்று யோசனை கூறினார். கல்யாணப் பரிசு போன்ற வெற்றிப் படங்களின் வசூலை முறியடித்து புகழையும் பெற்றது “களத்தூர் கண்ணம்மா’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *