அமிதாப்-அபிஷேக் இருவருக்கும் கொரோனா
பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் அமிதாப் பச்சனுக்கு நேற்றிரவு திடீரென லேசான காய்ச்சலும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், தமக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால் மருத்துவமனை செல்வதாகவும், கடந்த பத்து நாட்களாக தம்முடன் நெருங்கியிருந்த அனைவரும் தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமிதாப்பின் குடும்பத்தினரான ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ராய், ஜெயா பச்சன் உள்ளிட்டோருக்கு பாதிப்பு இல்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் அவர்கள் இருவருக்கும் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இதனால் ஐஸ்வர்யா ராய், ஜெயா பச்சன் ஆகிய இருவரும் தங்கள் இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இதனிடையே அமிதாப் பச்சன் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு மூச்சு விடுவதற்காக வெண்டிலேட்டர் உதவி தேவைப்படவில்லை என்றும் மும்பை நானாவதி மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .
தமது உடல்நிலையும் சீராக இருப்பதாக டிவிட்டிரில் குறிப்பிட்டுள்ள அபிஷேக் பச்சன், யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் அபிஷேக் பச்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமிதாப் பச்சனுக்கு மிகவும் லேசான பாதிப்புதான் என்றும் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்றும் மகாராஷ்ட்ரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.
பல லட்சம் ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வரதன் தெரிவித்துள்ளார்.