காவல்துறை
ஒரு நாகரீக சமூகத்தின் பிடிமானமாக இருக்க வேண்டும். இன்றோ காவல்துறை ஒரு சமூகத்தின் அவமானம் என்ற நிலைக்கு போய் கொண்டு உள்ளது. திருடர்களையும் கொலைகாரர்களையும் கண்டு வெறுப்பதை விட காவலர்களை வெறுக்கும் அளவுக்கு போலீஸ் துறையின் செயல்பாடு உள்ளது. ஊரடங்கு காலத்தில் தூத்துக்குடி சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் அரசு, நீதித்துறை, காவல்துறை என இந்த நாட்டு அச்சாணிகளின் மேல் நான் கொண்டு இருந்த மிச்ச சொச்ச நம்பிக்கையையும் தகர்த்து எறிந்து விட்டது. இறந்து போன தந்தை, மகனின் கதறல்கள்…”இன்று நாங்கள், நாளை நீங்கள்”  என்று நம்மை நோக்கி எழுப்பப்படும் கூக்குரலாகவே நான் கருதுகிறேன்.

ஒரு இயக்குனராக சமூக யதார்த்தங்களையும், அவலங்களையும் திரையில் பதிவு செய்யும் எனக்கு இந்த சமூகம் நடக்கும் விபரீதத்தை புரிந்து தக்க எதிர்வினை ஆற்ற வேண்டுமே என்ற பதட்டம் என்னை தூங்க விடவில்லை. வேட்டியை காண வில்லை என்று போனால் கோவணத்தையும் உருவி விடுகிறார்களே என்று இனிமேலும் நகைச்சுவை பேசி, இதை நாம் கடக்க முடியாது என்பதை உணர்ந்தேன். இங்கு ” சட்டத்திற்காக நாமா, இல்லை நமக்காக சட்டமா ?” என்ற ஆற்றாமையின் விளைவே என்னை எழுத தூண்டியது.

கொஞ்சம் யோசித்து பாருங்கள். இறந்து போன இருவரும் என்ன கொலை குற்றவாளிகளா? இல்லை. சரி, திருட்டு வழக்கிற்காக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்களா? அதுவும் இல்லை. சரி, செய்த குற்றம்தான் என்ன? முதலில் குற்றம் என்ற வார்த்தையை இங்கு நான் பயன்படுத்தலாமா? தன் சொந்த கடைக்கு வெளியில் நின்று பேசியதற்கு மரண தண்டனையா!!!

காவல்துறையின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவுக்கு தந்தையும் மகனும் ஏதேனும் செய்து விட்டார்களா? இல்லையே! தந்தை முன் மகனையும், மகனின் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்தி கொல்லும் அளவுக்கு என்னதான் நடந்து விட்டது? சக மனிதர்களின் மேல் எவ்வளவு வெறுப்பு இருந்தால் இந்த செயலை காவல்துறையினர் செய்து இருக்க வேண்டும்!

இது சுதந்திர நாடு என்ற வார்த்தையை கேட்டாலே எனக்கு ஆயாசமாக உள்ளது. எங்கு சுதந்திரம் உள்ளது என்று சத்தியமாக தெரியவில்லை. இதற்காகவா நம் முன்னோர்கள் பிரிட்டிஷாரிடம் போராடினார்கள்? பேச்சுரிமையும், எழுத்துரிமையும் பெற்று மகிழ்ச்சியுடன் அடுத்த தலைமுறையாவது வாழட்டும் என்றுதானே நம் முன்னோர்கள் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தும் கொடுத்து நமக்கு சுதந்திரத்தை வாங்கி அளித்தார்கள்!! 75 ஆண்டுகள் கூட ஆக வில்லை. அனைத்தையும் பறிகொடுத்து விட்டோம்.

நடப்பதை எல்லாம் காணும் போது ஆங்கிலேயர்களே பரவாயில்லை என்று யோசிக்கும் நிலைக்கு வந்து விட்டேன்.மன்னியுங்கள், நாம் அந்த இடத்தில்தான் இருக்கிறோம்!

தூத்துக்குடி சம்பவம் ஒரு சமூகமாக நாம் மீண்டும் நம் உரிமையை மீட்டு எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் சாதாரண மக்களே. அவர்களுக்கு சட்டத்தின் பெயரால் அநீதி நடந்தால் ஒட்டுமொத்த கட்டமைப்பே உருக்குலைந்து விடும். நீதித்துறையும் காவல்துறையும் சரிவர இயங்கா விட்டால்  ஒரு குடியுரிமை சமூகமாக நாம் எவ்வாறு வாழ முடியும்? மக்களின் பொதுப்புத்தியில் காவல்துறை மீது உருவாக்கப்பட்டிருக்கும் போலி பிம்பத்தின் மீது இந்த மரணங்கள் கேள்வி எழுப்புகின்றன. அதற்கு நாம் பதில் அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இந்த கொடூரத்தை வேறு எப்படிச் சகித்துக்கொள்வது? சொல்லுங்கள்.

சிலர் இதற்கு பொறுப்பை அந்த காவலர்கள் மேல் மட்டும் சுமத்துகிறார்கள். ஒட்டுமொத்தமாக காவல்துறையை குற்றம் சாட்ட கூடாது என்கிறார்கள். இது சரியா? ஒரு ஜனநாயக நாடு, பொறுப்புள்ள சமுதாயம் ஒவ்வொரு உயிரும் அவரவர் பொறுப்பு என்று கருதுமேயானால் அது வெட்கக்கேடு இல்லையா? எந்த தவறும் செய்யாத இரு அப்பாவிகளின் படுகொலைக்கு பிறகும் இதற்கு யார் பொறுப்பு என்று மாற்றி மாற்றி அடுத்தவரை கைகாட்டுவது நியாயமா? “அரசா, காவல்துறையா, நீதித்துறையா இல்லை அந்த காவலர்கள் மட்டும்தான்” என்று வெறும் விவாதமாக இதை கடந்து போக முடியுமா?

சமூகத்தை எதிர்கொள்ளும் ஒரு அமைப்பு அது காவல்துறையாக இருந்தாலும் சரி, நீதித்துறையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு பொறுப்புணர்வோடும் நேர்மையோடும் செயல்பட வேண்டும் என்பதன் அவசியத்தை நாம் இப்போதாவது உணர வேண்டும். ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணங்களுக்காக சமூக ஊடகங்களில், நேரடியாக தூத்துக்குடியில் போராடும் ஒவ்வொருவரின் அக்கறையும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியன. அதே நேரத்தில் இது இந்த நேர அக்கறையாக மட்டும் ஆகி விட கூடாது.  தனிமனிதரின் பிரச்சினையை எப்படி சமூகத்தினுடைய பிரச்சினையாகக் கருதி நாம் எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதை பொறுத்தே இந்த அரசு அமைப்புகள் நமக்கான மரியாதையை, உரிமையை தருகின்றன. இது மிகவும் முக்கியம். எளிய மக்களின் உயிர் துச்சம் அல்ல என்பதை அப்போதுதான் நம் சேவைக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த அரசு அமைப்புகள் உணர்ந்து கொள்ளும்.

நன்றி.

கே எஸ் தங்கசாமி
இயக்குனர்