அருண் விஜய்யின் பாக்ஸர் படத்தில் நடிகராக அறிமுகமாகும் தயாரிப்பாளர் எக்ஸெட்ரா என்ட்டர்டெயின்மெண்ட் மதியழகன்
சில மாதங்களுக்கு முன் அருண் விஜய்யின் பாக்ஸர் திரைப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானபோது, அப்படம் குறித்து மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் உருவானது. தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருவதால் அருண் விஜய் படங்களுக்கு இயல்பாகவே இந்த எதிர்பார்ப்புகள் பெருகி வரும் நிலையில், சிந்திக்கத் தூண்டும் வகையில்அமைந்த பாக்ஸர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது, இது இன்னும் அதிகமானது. அருண் விஜய் ரித்விகா சிங் பிரதான வேடங்களில் நடிக்கும் பாக்ஸர் படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பது யார் என்பதை அறியும் ஆவல் எல்லோருடைய மனதிலும் எழுந்தது. சரியான நபரைத் தேர்ந்தெடுக்கும் நீண்ட தேடல் இப்போது முடிவுக்கு வந்து விட்டது. ஆம்…தயாரிப்பாளர் மதியழகனே இந்த வேடத்துக்கு பொருத்தமானவர் என்று ஒட்டு மொத்த படக்குழுவும் முடிவு செய்து ஏகமனதாக அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது…
இது குறித்த விவரித்த எக்ஸெட்ரா என்ட்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் வி.மதியழகன் தெரிவித்ததாவது…
இது எனக்கு எதிர்பாராத ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், பாக்ஸர் படத்தைத் தொடங்கியபோது, இது போன்ற திட்டம் எதுவுமில்லை. பலம் மிக்க எதிர்மறை வேடத்திற்கு உயிரூட்டக்கூடிய சரியான நபரைத் தேர்வு செய்யும் பணியில் இயக்குநர் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து நானும் ஈடுபட்டேன். இறுதியில் இயக்குநர் விவேக் அந்த வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று சொல்லியபோது, அதை ஏற்க நான் தயங்கினேன். பரிட்சார்த்த முறையில் என்னை வைத்து சில காட்சிகளைப் படமாக்கியதைப் பார்த்த பின் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆயினும் அருண் விஜய், ரித்விகா சிங் மற்றும் பல சீனியர் நட்சத்திரங்களுடன் இணைந்து நடிப்பதில் எனக்குத் தயக்கம் இருந்தது. மேலும், பலம் பொருந்திய நபருடன் குத்துச் சண்டை போடுவது போலல்ல இந்த வேடம். தன் இலக்கை அடையத் துடிக்கும் நாயகனுக்கு தடை போட்டு, குறுக்கே நிற்கும் வேடம் என்பதால் படக்குழுவினரின் விருப்பத்துக்கு மறுப்பு சொல்லாமல் நடிக்கிறேன் என்றார்.
தயாரிப்பில் இருக்கும் பாக்ஸர் படத்தின் தற்போதைய நிலை குறித்து மதியழகன் தெரிவித்ததாவது….
மூன்று வெவ்வேறு தோற்றங்களில் திரையில் தோன்றும் காரணத்தால் உடல் எடையைக் கூட்ட சற்றே கால அவகாசம் தேவைப்படும் என்பதை பாக்ஸர் படத்தின் படப்பிடிப்பு துவங்கும்போதே அருண் விஜய் சார் முன்கூட்டியே என்னிடம் தெரிவித்தார். எனவே கோவிட் 19 பெருந்தொற்று பிரச்னைகள் முடிவுக்கு வந்ததும், முழு வீச்சில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.
நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படத்தைத் தயாரித்த வி.மதியழகன், தற்போது ஹன்சிகா மோத்வானி நடிக்கும் மகா படத்தைத் தயாரித்து வருகிறார். மேலும் எக்ஸெட்ரா என்ட்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில், ராஜா மந்திரி, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, செமை போதே ஆகாதே, மற்றும் அப்பா ஆகிய படங்களையும் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.