இன்னிக்கு செய்தியாளர்களிடம் ஆர்.கே. செல்வமணி பேசியது
எங்களுடைய திரைப்படத் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் நலவாரியம் மூலமாக அரசு ரூ. 1000 அளித்துள்ளது. மீண்டும் ரூ. 1000 நிதி உதவி அறிவித்துள்ளார்கள்.
திரைப்படக் கலைஞர்கள் மூலமாக நாங்கள் ரூ. 3.50 கோடி நிதி திரட்டினோம். எல்லா உறுப்பினர்களுக்கும் 25 கிலோ கொண்ட அரிசி மூட்டையும் ரூ. 500 பணமும் முதலில் அளித்தோம். பிறகு, அமிதாப் பச்சன் மூலமாக முயற்சி செய்ததில், 18,000 உறுப்பினர்களுக்கு தலா ரூ. 1500 மதிப்புள்ள பிக் பஸார் கூப்பன்களை இரு நிறுவனங்கள் அளித்துள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 2.70 கோடி. அந்த கூப்பன்களைக் கொண்டு தேவையான பொருள்களை உறுப்பினர்கள் வாங்கிக் கொள்ளலாம். இன்னும் சிறிது நிதி திரட்டியுள்ளோம். அதைக் கொண்டு எல்லா உறுப்பினர்களுக்கும் ரூ. 500 மதிப்புள்ள மளிகைப் பொருள்களும் 10 அல்லது 5 கிலோ அரிசியும் 3-வது முறையாக வழங்கவுள்ளோம். இரண்டு மாதங்களாக 25,000 தொழிலாளர்களுக்கு உதவி செய்தோம். ஆனால் மேலும் இதைத் தொடர்வது கடினமாக உள்ளதால் படப்பிடிப்புகள் தொடர்ந்தால் சுலபமாக இருக்கும் என்றார்.
இதேபோல தெலுங்குத் திரையுலகுக்கும் ரூ. 1.80 கோடி மதிப்புள்ள 12,000 பிக் பஸார் கரோனா நிவாரண கூப்பன்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளார் அமிதாப் பச்சன். இத்தகவலைக் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார். பாலிவுட் திரையுலகில் ரூ. 15 கோடி மதிப்பு கொண்ட 1 லட்சம் கரோனா நிவாரண கூப்பன்களைத் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளார் அமிதாப் பச்சன். சோனி டிவி மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுடன் இணைந்து இந்த உதவியை அவர் மேற்கொண்டுள்ளார்.