90 களின் இளைஞர்களின் கனவுகன்னி நடிகை நதியா

90 களின் இளைஞர்களின் கனவுகன்னியாக வல்ம் வந்தவர் நடிகை நதியா. 80-களில் வெளியான படங்களின் மூலம் அனைவரின் மனதையும் ஆட்கொண்டவர். நதியா
200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்துக்கு பிறகு நீண்ட இடைவெளிவிட்டு, ஜெயம் ரவியின் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தின் மூலமாக தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்தார். இதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்
இந்த நதியா நாயகியாக இருந்த போது எதை அணிந்தாலும் அது பாணியாகிப்போனது. நதியா உச்சரித்த வார்த்தைகளை ஆண்களை விடப் பெண்கள் மனனம் செய்தார்கள். நதியா கொண்டை முதல் நதியா நகப்பூச்சு வரை சந்தையில் விற்றுத்தீர்ந்தது. எங்கும் நதியா, எதிலும் நதியா என தமிழ் மக்களின் குடும்பங்களில் ஒருவராக நினைக்கப்பட்டார் நதியா. இந்த வாக்கியங்களில் ஏதேனும் மிகை இருக்கலாம். ஆனால் நிச்சயம் குறை இருக்காது.
அந்த அளவுக்கு ஒரு காலகட்டத்தை தன்பிடியிலேயே வைத்திருந்த நடிகை நதியா.
நிலவே மலரே, அன்புள்ள அப்பா, உயிரே உனக்காக, பூக்களைப் பறிக்காதீர்கள், கண்ணே கலைமானே, பாடு நிலாவே, பூ மழை பொழியுது, சின்ன தம்பி பெரிய தம்பி, உனக்காகவே வாழ்கிறேன், பூவே இளம் பூவே, பவழமல்லிகை, மந்திரப் புன்னகை என தமிழிலும், நோக்கத்த தூரத்து கண்ணும் நட்டு, கண்டு கண்டறிஞ்சு, கூடும் தேடி, பஞ்சாக்னி, ஷ்யாமா போன்ற மலையாளப்படங்களிலும் நடித்த நதியா ஒரு பதினைந்து ஆண்டுகாலம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்த நாயகியாக இருந்தார் என்பது உண்மையான ஒன்று.
தம் குழந்தைகளுக்கு நதியா எனப் பேர் சூட்டி மகிழ்ந்தனர் தமிழ்மக்கள். நதியாவுக்கு நடிகர்களுக்கு நிகரான ரசிகர்மன்றங்கள் இருந்தது. இத்தனைக்கும் நதியா திரைப்படங்களில் தோன்றிய அனைத்துப் படங்களிலும் சின்னப்பெண்ணாக, துள்ளல் நாயகியாக, காதலியாக, சோகம் ததும்பும் பிரிவுகொண்ட இளம்பெண்ணாக என எல்லா படங்களிலும் மிகச் சாதாரணமான வேடங்களிலேயே நடித்தார் என்பது கவனத்திற்குரியது. நதியா என்ற ஒரு நாயகி திரையில் தோன்றியதுமே தாங்கள் வசீகரிக்கப்படுவதை ஒவ்வொரு ரசிகனும் விரும்பியே நம்புமளவுக்கு தான் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களில் தன் துள்ளலை, இயல்பான நடிப்பை கலந்தே தந்தார் நதியா.
அவரது நடிப்பில் மறக்க முடியாத படங்கள் என்றால் கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே சொல்லலாம். வெற்றிக்குதிரை நாயகர்களிடம் இருந்து விலகியே இருந்தார் நதியா. கார்த்திக் உடனும் கமல் உடனும் நடிக்கவே இல்லை. கிட்டத்தட்ட தன் திருமண முடிவை எடுத்த காலகட்டத்தில் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் ராஜாதிராஜா படத்தில் ரஜினி உடன் இணை சேர்ந்தார் நதியா. அந்தப் படத்தில் ராதா இன்னுமொரு நாயகி. ஆனால் படம் பார்த்த அத்தனை பேருக்கும் அப்படத்தில் வண்ணமயமான பகுதியாக நதியா, ரஜினி இணைத்தோற்ற காட்சிகளைத் தான் குறிப்பிடப் பிடிக்கும்.
பத்மினி உடன் பூவே பூச்சூடவாவிலும், சிவாஜி கணேசனுடன் அன்புள்ள அப்பாவிலும், ரஜினி உடன் ராஜாதிராஜாவிலும், விஜயகாந்த் உடன் பூமழை பொழியுது படத்திலும் நடித்தார் நதியா. அத்தனை படங்களும் அவரவர்க்கு வித்தியாசமான படங்களாக அமைந்தன. அத்தனை படங்களையும் தனதாக்கிக் கொண்டார் நதியா. அவர் நடித்த பாத்திரங்கள் கல்லூரிப்பெண், சூட்டிகையான பெண், காதலிக்கிற பருவ வயது பெண் என்றாலும் தானணிகிற ஆடைகள் பேசுகிற வசனங்கள், தனது அசைவுகள் என ஒவ்வொன்றிலும் படு கவனமாகவும் நேர்த்தியாகவும் இருந்தவர் நதியா. அவரளவுக்கு தன் பாத்திரங்கள் தேர்வில் கடுமையைக் கடைப்பிடித்த இன்னுமொரு நடிகையாக ரேவதியை மட்டுமே குறிப்பிட இயலும்
அது சரி.. அதுக்கென்ன இப்போ என்கிறீர்களா?
நதியாவுக்கு தற்போது இவருக்கு 53 வயது ஆனாலும் இளமையாகவே தோற்றமளிக்கிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
அவர்களின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் நதியாவைப் போலவே அவரது மகள்களும் மிக அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.
அதை நம்ம கட்டிங் கண்ணையா தன் பாணியில் சொல்ல ட்ரை பண்ணி இருக்கார்
அம்புட்டுதேன்👇
