ஒரு கொள்ளையடிக்கும் ஹீரோ, அவர் ஏன் கொள்ளையடிப்பவனாக மாறினார் என்பதை கண்டுபிடிக்கிற ஹீரோயின் என்பதை இரண்டு மணி நேரத்தில் அசுர வேகத்தில் சொல்ல முயற்சித்தால் அதுதான் அசுரகுரு.

போலீஸை நண்பனாகப் பெற்ற விக்ரம் பிரபு அடிக்கும் கொள்ளையில் லாஜிக் இல்லாவிட்டாலும் மேஜிக் இருக்கிறது. முதல் காட்சியிலே படத்தின் கதைக்குள் சென்று விடுவதால் தேவையில்லாத இழுவைகள் படத்தில் இல்லை. விக்ரம் பிரபு ஏன் கொள்ளையடிக்கிறார் என்ற காரணத்தை சிறிய ப்ளாஸ்பேக்கில் க்ளேஷே இல்லாமல் சொல்லி முடித்தது சிறப்பு. நிறைய காட்சிகளை தன் எதார்த்த நடிப்பால் கடக்க வைக்கிறார் விக்ரம் பிரபு. மகாமுனி படத்திற்குப் பின் இந்தப்படம் மஹிமா நம்பியாருக்கு நல்ல அடையாளம். டிடெக்வாக பக்காவாகப் பொருந்துகிறார். விக்ரம் பிரபு நண்பனாக வரும் ஜெகன் சரியான அட்டென்ஷன் கொடுக்கிறார். சில காட்சிகள் யோகிபாபுவால் கலகலப்பை அடைகின்றன. வில்லன்கள் விசயத்தில் இயக்குநர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். இடம் இருந்தும் காதல் காட்சிகளைக் குறைத்து கதைக்கான காட்சிகளில் கவனம் செலுத்தியது பாராட்டுக்குரியது.

பின்னணி இசையில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. ஒளிப்பதிவும் தரமாக இருப்பதால் கதையோடு ஒன்றிப்போவதில் பெரிய சிரமம் இல்லை.

இடைவேளை வரை பெரிய ட்விஸ்ட் இல்லாமல் நகரும் கதை இடைவேளைக்குப் பிறகு ட்விஸ்ட் மேல் ட்விஸ்டாக வைத்து பரபரப்பை ஏற்படுத்துகிறது. சின்ன சின்ன லாஜிக் பிழைகளை களைந்திருந்தால் அசுரகுரு இன்னும் அசாத்தியப் பாய்ச்சல் பாயும். இப்போதும் அது பாய்ச்சலில் குறை இருக்காது என்று நம்பலாம்!