அதர்ஸ் – திரை விமர்சனம்
சாலையில் திட்டமிடப்பட்டு ஒரு விபத்து நடக்கிறது. தலை குப்புற விழுந்து நொறுங்கும் அந்த வாகனத்தில் வந்த நால்வரும் இறந்து போகிறார்கள். அவர்களில் மூன்று பேர் பெண்கள்.ஒருவர் ஆண் . காவல்துறை விசாரணையில் இறந்த அந்த மூன்று பெண்களும் பார்வையற்றவர்கள். அவர்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தவர்கள் என்பது தெரியவர, விசாரணை மேலும் சூடு பிடிக்கிறது. ஒரு கட்டத்தில்
இந்த விசாரணை கருத்தரிப்பு மையமாகச் செயல்பட்டு வரும் ஒரு மருத்துவமனை வரை நீள்கிறது. அங்கே ஐ வி எஃப் எனப்படும் In Vitro Fertilization முறையில் கருத்தரிப்பு செய்யப்படும் செயல்பாடுகளில் மோசடிகள் இருப்பது அம்பலமாகிறது.
அதன் மூலம் கருவைச் சுமக்கும் பெண்களும், கருவில் உள்ள குழந்தைகளும் அபாயத்தை நோக்கிச் செல்வது தெரிகிறது.
சட்டவிரோத ஸ்டீராய்டுகள், முறைகேடான கொடையாளர்கள் மற்றும் ஊழல் நிறைந்த கருவுறுதல் என்று போகிறது.
இதையெல்லாம் யார் செய்கிறார்கள்?இறந்துபோனவர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? போலீசின் நீள் விசாரணையில்
இந்த குற்றங்களின் மையப் புள்ளியாக வேறொரு உளவியல் பிரச்சினை வந்து நிற் கிறது. யாரும் எதிர்பார்க்காத ஒரு குற்றவாளி சிக்குகிறான். குற்றத்துக்கு அவன் சொல்லும் காரணம் நிஜமாகவே அதிர்ச்சிக்குரியது .
அவன் ஏன் அப்படிச் செய்தான்? அவனை அப்படி செய்யத் தூண்டிய பின்னணி என்ன? என்பது மீதிக் கதை.
கண் முன் நடக்கும் விபத்து போல் கச்சிதமாக அரங்கேறும் அந்த விபத்தில் தொடங்குகிறது திரைப்படம். காரணத்தை ஆராயும் நாயகன் ஆதித்யா மாதவன் தனது காவல் குழுவுடன் இணைந்து மேற்கொள்ளும் விசாரணையில் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.தொடர்ந்து வரும் காட்சிகளும் படத்தை விறுவிறுப்புடன் கொண்டு செல்கின்றன.
விசாரணை அதிகாரியாக வருகிறார் ஆதித்ய மாதவன். அறிமுகம் என்று எந்த ஒரு காட்சியிலும் சொல்ல முடியாத அளவுக்கு நடிப்பிலும் உடல் மொழியிலும் தன்னை நிலை நிறுத்தி விடுகிறார்.
அவரது ஜோடியாக கௌரி கிஷன். டாக்டர் கேரக்டரில் இவரது பங்களிப்பு கச்சிதம்.
துடிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக அஞ்சு குரியன் படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார்.
நண்டு ஜெகன் யாரும் எதிர்பாராத எதிர்மறை சாயல் கொண்ட பாத்திரத்தில் வருகிறார். சரியாக சொல்ல வேண்டும் என்றால் கதையின் நாயகன் இவர்தான். கதையின் வில்லனும் இவர் தான். குறிப்பாக வில்லனாக உருமாற்றம் பெறும் இடத்தில் இவரது நடிப்பு எந்த எல்லைக்குள்ளும் அடங்காத ஆவேசப் புயல். முண்டாசுப்பட்டி ராமதாஸ், ஆர்.சுந்தர் ராஜன், ஹரிஷ்
பெராடி தங்கள் கேரக்டர்களில் பளிச் சிடுகிறார்கள்.
‘அதர்ஸ்’ என்கிற தலைப்பு குறித்த விளக்கம் தெரியth தொடங்கியதிலிருந்து படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது. முடிவு வரை அதே வேகம். இயக்கிய அபின் ஹரிஹரன் பாராட்டுக்குரியவர். படத்தின் இன்னொரு நாயகனாக இசை நாயகனாக காட்சிகளில் வலம் வரும் ஜிப்ரானுக்கு ஸ்பெஷல் பொக்கே.
