திரை விமர்சனம்

பரிசு – திரை விமர்சனம்

சாதிக்க துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் அளவு என்பார்கள். இங்கே நம் கதையின் நாயகி அந்த எல்லையை கூட தாண்டி விடுகிறார். லட்சியத்தை நோக்கிய அவரது பயணத்தில் அவரது முயற்சிகள் அனைத்தும் முத்துக்கள் ஆனதா என்பதை சொல்லும் படம் இது.
நாயகி ஜான்விகா பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவி. படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் அதிகம். அவளது தந்தை ஒரு ராணுவ வீரர் என்பதால் எதிர்காலத்தில் ராணுவத்தில் சேர்ந்த பணியாற்றுவதை லட்சியமாக வைத்திருக்கிறார்.
அறிவோடு அழகு, அழகோடு அறிவு. இதுதான் ஜான்விகா என்னும் போது அவர் மீது காதல் அம்புகள் வீசப்படாமல் இருக்குமா…
வீசுகிறார்கள். பூங்கொத்தை வழங்கி காதல் சொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால் எந்த
சலனமும் இல்லாமல் அவர்களின் காதல் வீச்சுகளை கடந்து செல்கிறார் ஜான்விகா.
விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் ஜான்விகா, தந்தையிடம் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுகிறார்.
எகிப்தில், கெய்ரோவில் நடக்கும் ஆசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசும் பெறுகிறார்.

இந்நிலையில் தனது உறவினர் சென்ட்ராயன் வீட்டு நிகழ்ச்சிக்கு ஜான்விகா சென்றபோது அங்கே நிகழ்ச்சியைப் புகைப்படம் எடுக்க வந்த புகைப்படக்காரர் ராஜேஷின் அறிமுகம் கிடைக்கிறது. அவர்களுக்குள் ஒரு புரிதல் உண்டாகிறது. ஒரு கட்டத்தில் ராஜேஷ் அவரைக் காதலிப்பதாகக் கூற, .ஆனால் தனது லட்சியத்திற்குப் பிறகு தான் எல்லாமே என்று காதலை தள்ளி வைக்கிறார் ஜான்விகா.

இந்த சந்தர்ப்பத்தில் ஒரு கார் மீது லாரி மோதி விட்டு தப்பிச்செல்லும் விபத்தைக் கண்ணெதிரே பார்க்கும் ஜான்விகா, காருக்குள் அடிபட்டு கிடந்தவரை காப்பாற்றியதுடன் குற்றவாளியைப் பிடிக்க போலீசுக்கும் உதவுகிறார்.
இது தெரிய வந்த சதிகாரர்கள் ஜான்விகாவை கடத்துகிறார்கள். கொல்லவும் துணிகிறார்கள் அந்த எதிரிகளை எவ்வாறு ஜான்விகா எதிர்கொள்கிறார்? அவரது ராணுவக் கனவு நிறைவேறி யதா ? என்பது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதை .
படத்தின் பிரதான ஜான்வி பாத்திரத்தில் ஜான்விகா நடித்துள்ளார். அந்தப் பாத்திரத்தில் குடும்பப் பாங்கான தோற்றத்தில் துடிப்பான கல்லூரி மாணவியாகவும் ,பிறருக்கு உதவும் இரக்க குணம் கொண்ட பெண்ணாகவும், துப்பாக்கி சுடுதலில் துடிப்புள்ளவராகவும், தந்தையின் கனவை நிறைவேற்றப் பாடுபடும் ஒரு மகளாகவும் , விவசாயியாகவும், ராணுவ வீரராகவும் பல்வேறு பரிமாணங்களில் ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் ஜொலிக்கிறார். படம் முழுக்க புன்னகை ததும்பும் முகத்துடன் வரும் அவரை இரு கரம் நீட்டி தமிழ் சினிமா வரவேற்கும்.

எதையும் புன்னகையுடன் எதிர்கொள்ளும் நிதானமானகுணம் கொண்டவராக இருந்தாலும் சண்டைக் காட்சிகளில் எதிரிகளைப் பந்தாடும்போது வேறொரு அவதாரமாகத் தோன்றுகிறார்.

ஜான் ஜான் என்று கதாநாயகியை வளைய வளைய கல்லூரியில் சுற்றி வரும் மாணவன் பாத்திரத்தில் கிரண் பிரதாப் நடித்துள்ளார். பூக்கள் விடு தூது மூலம் அவர் ஜான்வியிடம் தனது காதலை சொல்லும் காட்சிகளில் தனது உடல் மொழியாலும் நடவடிக்கைகளாலும்சிரிக்க வைக்கிறார்.
புகைப்படக் கலைஞர் ராஜேஷ் பாத்திரத்தில் வரும் ஜெய் பாலா ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் கவர்கிறார்.

மனோபாலா, சின்னப்பொண்ணு ஜோடிக்கு மகனாக வரும் சென்ட்ராயன் இணைந்த கூட்டணி சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலும் பேசும் வசனங்கள் உருவக்கேலி தொடர்பானவை. அந்த காட்சிகளை தவித்திருக்கலாம்.

ஜான்விகாவின் தந்தையாக முன்னாள் ராணுவ வீரராக வரும் ஆடுகளம் நரேன், அன்பு மகளிடம் கனவுகளை வளர்த்தெடுக்கும் பாசமுள்ள தந்தையாக வருகிறார்.

மருத்துவமனை நடத்திக் கொண்டு உடல் உறுப்பு திருட்டு செய்யும் தொழிலதிபர் பாத்திரத்தில் சுதாகர் சைலன்ட் வில்லத்தனத்தில் கவனிக்க வைக்கிறார்.
படத்தில் ஐந்து பாடல் கள். ஒவ்வொன்றும் இனிமை கலந்து இதயம் சேர்கிறது. குறிப்பாக ரொம்ப நல்லா இருக்கு அந்த நன்னாரி பாட்டு.

படத்துக்குத் தெளிவான முறையில் ஒளிப்பதிவு செய்துள்ளார் சங்கர் செல்வராஜ்.
ஆர்ப்பாட்டம் இல்லாத ஹமரா வின் பின்னணி இசை, படத்திற்குப் பக்க பலம்.

ஸ்டண்ட் இயக்குநர்கள் கோட்டி மற்றும் இளங்கோ இருவரும் கதாநாயகி டூப் இல்லாமல் போடும் சண்டைக் காட்சிகளை மனம் தடதடக்க காட்சிப் படுத்தி இருக்கிறார்கள். பெண்களுக்கு நம்பிக்கையையும் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் அளிக்கும் வகையில் படத்தை இயக்கி இருக்கிறார் கலா
அல்லூரி.
பெண்ணின் பெருமை பேசும் இந்த படம் ரசிகர்களுக்கான கலைப் பரிசு