டீசல் – திரை விமர்சனம்
2014-க்கு முந்தைய காலகட்டத்தில் கதை நடக்கிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து, வட சென்னையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்ல அங்குள்ள மீனவ மக்களின் எதிர்ப்பை மீறி அமைக்கப்பட்ட ராட்சத குழாய், மீனவர்களின் மீன் தொழிலையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. அந்த திட்டத்திற்கு எதிராக போராடியும் பலன் என்னவோ பூஜ்யம் தான். இதனால் அந்த கிராமத்தை விட்டே வெளியேறும் மீனவர்களில் சிலர், அதே கச்சா எண்ணெயை திருடுவதை தொழிலாக்கிக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட கச்சா எண்ணெய் திருட்டை வளர்த்துவிடும் சில பண முதலைகளின் சதித் திட்டத்தால், வட சென்னை முழுவதும் உள்ள மீனவ கிராமங்களுக்கு பேராபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. இதனை அறிந்து கொள்ளும் நாயகன் அந்த சதிதிட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவர் வெற்றி பெற்றாரா? சதி திட்டத்தின் பின்னணியில் இருக்கும் தொழில் அதிபரால் ஏற்படப்போகும் பேராபத்து என்ன ? என்பதை சொல்வதே இந்த ‘டீசல்’.
ஹரிஷ் கல்யாணை முதல் முதலாக ஆக்ஷன் ஹீரோவாக்கி இருக்கும் படம். மீனவருக்கான உடல் மொழி உள்ளிட்ட சகலத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பில் புது மொழி வெளிப்படுத்தி இருக்கிறார் வளர்ப்பு தந்தைக்கும் அவருக்குமான அன்னியோன்யம், இறந்த அம்மாவுடன் பேசுவது என்று செண்டிமெண்ட் காட்சிகளில் முழுமையுடன் கூடிய ஹரிசை பார்க்க முடிகிறது. நடனத் த்திலும் பயங்கர தேர்ச்சி தெரிகிறது.
நாயகியாக நடித்திருக்கும் அதுல்யா ரவி, படம் முழுவதும் பயணித்தாலும், நாயகனிடம் ‘இப்பல்லாம் அந்த மீன்கன்னி கனவு வருவதே இல்லை’ என்று சொல்லும் இடத்தில் நாசூக்காக தன் காதலையும் வெளிப்படுத்தும் அவர் நடிப்பும் அழகு. அந்த காட்சியும் அழகு. வில்லனாக பார்வையாலே மிரட்டுகிறார் வினய் ராய். ஹரிஷ் கல்யாணின் வளர்ப்பு தந்தையாக சாய் குமார் பாசமும் அக்கறையும் நிறைந்த தந்தையை கண்முன் நிறு த்துகிறார்.
வினய் மனைவியாக கொஞ்ச நேரமே வந்தாலும் அந்த ஆஸ்பத்திரி சீனில்’நானும் இருக்கேன்யா’ என்கிறார் அனன்யா. குறிப்பிட்டு ஆக வேண்டிய இன்னொருவர் விவேக் பிரசன்னா. அந்த தாதா பாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி அவர் செய்யும் வில்லத்தனங்கள் அடப்பாவி ரகம். கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், சச்சின் கெடேகர், ஜாகிர் உசேன், தங்கதுரை, மாறன், கேபிஒய் தீனா என நடிகர்கள் பட்டியல் நீண்டாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.
திபு நினன் தாமஸ் இசையில் பாடல்கள் ரொம்பவே சூப்பர். குறிப்பாக பீர் சாங் ரசிகர்களின் கொண்டாட்ட பாடலாகி விடுகிறது. எம்.எஸ்.பிரபு, ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு படத்துக்கு பக்க பலம்.
மீனவ பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் படமாக பிரம்மாண்டமாகவே தந்திருக்கிறார் இயக்குநர் சண்முகம் முத்துசாமி. கச்சா எண்ணெய் பின்னணியில் கார்ப்பரேட் மாபி யாக்களின் ஊடுரு வல் கதைக்களமும் அதை சொன்ன விதமும் புதிது.
