டியூட் – திரை விமர்சனம்
காதலுக்கும் அதை போற்றும் அன்புக்கும் நடுவே போடப்பட்ட மெல்லிய முடிச்சு தான் இந்த படம்.
நாயகனின் மாமா அமைச்சராக இருக்கிறார். அவரது அழகு மகள் நம் நாயகனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். நாயகனோ, சிறு வயது முதல் நாம் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம். எனவே உன் மேல் எனக்கு காதல் வராது’ என்கிறார். இதை ஏற்றுக்கொண்ட நாயகியும் கடந்து போகிறாள். ஆறு மாதம் கடந்து போன நிலையில் தன் மீது உயிராக இருக்கும் மாமா பெண்ணை மணந்தால் என்ன என்கிற எண்ணம் நாயகனுக்குள் எட்டிப் பார்க்க, மாமாவிடம் தன் விருப்பம் சொல்கிறான். அவருக்கும் தங்கை மகனுக்கு தன் பெண்ணை கொடுப்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
திருமண ஏற்பாடுகள் தடபுடலாக தொடங்க, இப்போது மாமா பெண் புதுசாக ஒரு கட்டையை போடுகிறாள். இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்கிறாள். அதிர்ந்து போகும் நாயகன் காரணம் கேட்க, கடந்த ஆறு மாத இடைவெளிக்குள் தனது கல்லூரிக் கால நண்பனுடன் காதல் வயப்பட்ட கதையை சொல்கிறாள். அப்படியே காதலனை வரவழைத்து அறிமுகமும் செய்கிறாள்.
இப்போது தனக்கும் மாமா பெண்ணுக்கும் நடக்கும் திருமணத்தை நிறுத்த வேண்டும். அமைச்சர் வீட்டு திருமணம் என்பதால் அது அத்தனை சாத்தியம் இல்லை.
விடிந்தால் திருமணம் என்ற நிலையில் மணப்பெண் தன் தந்தையிடம் சென்று தன் காதல் பற்றி கூறுகிறாள்.
அதிர்ச்சியாக இருந்தாலும் மகளின் காதலை ஏற்றுக்கொண்ட தந்தை, மாப்பிள்ளை நம்ம சாதி பையன் தானா? என்று கேட்க, மகளோ இல்லை என்கிறாள். வேற்று சாதி நம் பரம்பரைக்கே ஆகாது. இப்படித்தான் வேற்று சாதிக்காரனை மணமுடிப்பேன் என்று அடம்பிடித்த என் தங்கையை
கிணற்றில் தள்ளிக் கொன்றேன். நீ அடம் பிடித்தால் உன்னையும் கொல்லத் தயங்க மாட்டேன் என்றபடி மகனின் கழுத்தை நெரிக்க பாய்கிறார்.
தந்தையின் அமைச்சர் செல்வாக்குக்கு முன் மகளால் எதுவும் செய்ய முடியாமல் போக, திட்டமிட்ட திருமணம் நடைபெறுகிறது. இரண்டு மாதத்தில் உன் காதலனுடன் உன்னை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பேன் என்று உறுதி கூrறும் நாயகன், சொன்னபடியே அதற்கான ஏற்பாடுகளை செய்கிறான். ஆனால் அத்தை மகள் இரண்டு மாத கர்ப்பம் என்ற மருத்துவ அறிக்கை வெளிநாட்டு பயணத்துக்கு தடையாக அமைந்து விடுகிறது. இதில்
இன்னொரு அதிர்ச்சியான திருப்பம் என்னவென்றால், அது காதலனின் குழந்தை.
இதற்கிடையே மகள் கர்ப்பம் என்று தெரியவந்ததும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார் தந்தை. குழந்தை பிறக்கிறது. ஏற்கனவே வாக்கு கொடுத்தபடி காதல் ஜோடியை வெளிநாட்டுக்கு அனுப்பும் முயற்சியை தொடங்குகிறான் நாயகன். ஆனால் அதற்கு முன்னதாக மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும். அதற்கான முயற்சியின் போது தான் மாமாவிடம் மாட்டிக்கொள்கிறான்
உண்மை தெரிந்த மாமா ருத்ர மூர்த்தி ஆகிறார். அவரது ஆவேசம் காதல் ஜோடி மீது பாய்கிறது.
இப்போது காதல் ஜோடிகளின் நிலை என்ன? சட்டப்படி காதல் ஜோடிகள் இணைவதற்கான நகர்வு தொடர்ந்ததா? அல்லது அமைச்சரின் கோபத்தில் அந்த காதல் சமாதி ஆனதா என்பதே இந்த டியூட். படத்தில் அகன் என்கிற பாத்திரத்தில் அமைச்சரின் அத்தை மகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.எப்போதும் கலகலப்பாக இருக்கும் அவர், படத்தில் மாமா மகள் மீதான காதல் சுகமாக நடந்து கொள்ளும் இடங்கள் அத்தனையும் படத்தையும் அழகாக்கி விடு கின்றன.
நாயகியாக வரும் மமிதா பைஜூ வழக்கமான கதாநாயகிகளைப் போல் இல்லாமல் படத்தின் பாதி எடையை தனது நடிப்பில் தூக்கிச் சுமந்துள்ளார். நாயகனின் அமைச்சர் மாமாவாக வரும் சரத்குமார், தனது நடிப்பு மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு மட்டுமல்ல, படத்திற்கும் பெரும் பலமாக அமைந்துள்ளார்.
மமிதாவின் காதலனாக பயந்தாங்கொள்ளி போல் வந்து காரியத்தைச் சாதிக்கும் ஹிரித்து ஹாரூண் , அந்தப் பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு என்பதை நடிப்பில் நிரூபிக்கிறார்.
நாயகனின் அம்மாவாக வரும் ரோகிணி, பிரதீப் நண்பனாக வரும் டிராவிட் செல்வம் தங்கள் கேரக்டர்களில் தனித்து பளிச்சிடு கிறார்கள்.
பிரதீப்பின் முன்னாள் காதலியாக வரும் நேகா ஷெட்டி, அவரது கணவராக வரும் சத்தியா, கர்நாடக அமைச்சராக வரும் ‘கருடா’ ராம் தங்கள் இருப்பை மனதில் பதிய வைக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மியின் கேமரா, காட்சிகளை இளமைத் துள்ளல்களுடன் படம் பிடித்திருக்கிறது இசையமைத்த சாய் அபயங்கர் இன்னிசை ராகங்களால் காதுகளை குளிர வைக்கிறார்.
படத்தில் முடிச்சு மேல் முடிச்சு போட்டுக் கொண்டே செல்லும் திரைக்கதையில் ஒவ்வொன்றாக முடிச்சுகள் அவிழ அவிழ, புதுப்புது முடிச்சுகள் விழுகின்றன. இப்படித் திரைக்கதையில் இயக்குநர் அமைத்துள்ள சுவாரஸ்யப் பின்னல்கள் படத்தின் அடுத்தடுத்த காட்சிகளோடு ரசிகர்களை சுலபத்தில் இணைத்துக் கொள்கின்றன.
தன் மனைவி இன்னொருவனின் காதலி என்பது கூட பல திரைப்படங்களில் சொல்லப்பட்டு விட்டது. அதேநேரம் தாலி கட்டிய மனைவிக்கு வயிற்றில் இரண்டு மாத கரு. அது தனது மனைவியின் காதலனின் குழந்தை. இது தெரிய வந்ததும் மனைவியை அவள் காதலனுடன் இணைத்து வைக்க நாயகன் மேற்கொள்ளும் அடுத்தடுத்த முயற்சிகள் அது தொடர்பான கதை அடுக்குகள் ஒவ்வொன்றும் கணவனின் உண்மைக் காதல் மீதான நம்பிக்கைக்கு மகுடம் சூட்டுகிறது. கத்தி முனையில் நடக்கும் கதைக்களம் என்றாலும், காயம் படாத விதத்தில் வித்தியாச விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன்.
க்யூட்டான பாத்திரப்படைப்புகள் மூலம் பளிச்சிடுகிறது இந்த டியூட்.
