திரை விமர்சனம்

பிளாக் மெயில் – திரைப்பட விமர்சனம்

ஒரு குழந்தை கடத்தல் தான் கதையின் கரு. அதை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தந்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்த்-பிந்து மாதவி தம்பதிகளின் பெண் குழந்தை கடத்தப்
பட்டதிலிருந்து படத்தை தொடங்குகிறார்கள். இன்னொரு புறம் கொரியர் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் நாயகன் ஜி.வி.பிரகாஷ் தனது பாஸ் கொடுத்த பார்சல் ஒன்றை உரியவரிடம் சேர்க்கப் போகும் இடத்தில் திருடர்களிடம் பார்சலோடு சேர்த்து வேனையும் பறி கொடுக்கிறார்.

அந்த பார்சலில் விலையுயர்ந்த போதைப்பொருள் இருந்ததை ஜிவி தான் திருடியிருக்க வேண்டும் என சந்தேகப்படும் உரிமையாளர், ஜிவியின் காதலியை கடத்துகிறார். பார்சலை கொடுத்துவிட்டு காதலியை மீட்டுப் போ என்கிறார்.
அந்தக் குழந்தையைக் கடத்தியது யார்? கடத்தப்பட்ட குழந்தை ஜிவியுடன் எந்த விதத்தில் சம்பந்தப்படுகிறது? ஜிவி தன் காதலியை மீட்டாரா? கேள்விகளுக்கு
விடை அதிரடி திருப்பங்களுடன் கூடிய சஸ்பென்ஸ் கதை.

இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே படங்களை இயக்கிய மாறனுக்கு இது மூன்றாவது படம். இதிலும் அவரது வழக்கமான சஸ்பென்ஸ் திரில்லர்
இறக்கை கட்டிப் பறக்கிறது.
நாயகனாக வரும் ஜி.வி.பிரகாஷ் நேர்மையான நடுத்தர குடும்ப இளைஞராக மனதில் பதிகிறார்.

முதலாளி அனுப்பிய பார்சல் தொலைந்ததும் பதறுவது, பார்சல் அல்லது பணத்தை கொடுத்து விட்டு உன் காதலியை மீட்டுப் போ என்று முதலாளி சொல்ல உள்ளூர உடைந்து போவது, காதலியை மீட்பதற்காக குழந்தை கடத்தலுக்கு சம்மதிப்பது என அந்த கேரக்டரை சரியாக உள்வாங்கி நடிப்பில் தனது கேரக்டருக்குரிய நியாயம் செய்து விடுகிறார். கடைசியில் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று முதலாளியிடம் அவர் பேசும் டயலாக், செம.

நாயகியாக வரும் தேஜூ அஸ்வினி திரையில் வரும் குறைந்தபட்ச நேரத்திலும் தனது கேரக்டரில் அழுத்தம் பதித்து விடுகிறார். இன்னொரு நாயகனாக ஸ்ரீகாந்த் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பில் கவrகிறார். கடத்தப்பட்ட குழந்தையை மீட்க போராடும் காட்சிகளில் பொறுப்புள்ள தந்தையாக காட்சிகளில் வியாபிக்கிறார்

அவரது ஜோடியாக வரும் பிந்து மாதவி நடிப்பில் எல்லோரையும் முந்தி செல்கிறார். கதையின் நாயகியே இவர் தான் எனலாம். கடத்தப்பட்ட தனது குழந்தைக்கான பரிதவிப்பு ஒரு பக்கம். முன்னாள் காதலனின் டார்ச்சரால் உடைந்து போவது இன்னொரு பக்கம். இந்த இரு வேறு நிலைகளிலும் நடிப்பில் அழகாக ஸ்கோர் செய்கிறார். குழந்தை கிடைக்கவிருக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அது கை நழுவி இன்னொரு கடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் இடங்களில் இவரது பதற்றம் பார்க்க வேண்டுமே…

ஜி.வி.பிரகாஷ் நண்பராக வரும் ரமேஷ் திலக், வில்லனாக வரும் லிங்கா, ஓணர் முத்துகுமார் ஆகியோரும் தங்கள் கேரக்டர்களை செவ்வனே செய்திருக்கிறார்கள். ரெடின் கிங்ஸ்லி வரும் போதெல்லாம் சிரிப்பையும் சேர்த்துக் கொண்டு வந்து விடுகிறார். கோகுல் பினாயின் கேமரா கோவையை அழகுற சுற்றிக் காட்டுகிறது.

சாம் சி.எஸ்.சின் பின்னணி இசை திரில்லர் காட்சிகளுக்கு உயிரோட்டம் தருகிறது.
குழந்தை கடத்தலை மையமாக வைத்து கதை சொன்ன இயக்குனர்
மு.மாறன், தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸ் குறையாமல் காட்சிகளை ஜெட் வேகத்தில் கடத்துகிறார். மனைவியின் முன் கதை தெரிந்த பின்பு ஸ்ரீகாந்த் எடுக்கும் முடிவு திரைக்கதை யின் ராஜமகுடம்.