திரை விமர்சனம்

உருட்டு உருட்டு – திரை விமர்சனம்

நாயகன் கஜேஷ் நாகேஷ் வேலை வெட்டி இல்லாமல் இருப்பவர். அவரையும் ஒரு பெண்
விரும்புகிறாள். காதல் கிடைத்த பிறகு காதல் போதை தானே வரவேண்டும் ஆனால் நாயகனுக்கு மது போதை தான் முன்நிற்கிறது.

காதல் நாயகி ரித்விகா ஸ்ரேயாவுக்கு காதலரின் குடிப் பழக்கம் கவலை தர, காதலனை திருத்த முயற்சி எடுக்கிறார். ஆனால், நாயகனோ குடிபோதையில் இன்னும் தீவிரமாகிறார். போதை இறங்குவதற்குள் மறுபடியும் குடித்துக் குடித்து காதலியை எரிச்சல் படுத்துகிறார். இதற்கிடையில் தன் அழகால் நாயகனை வசீகரிக்க நாயகி பல முயற்சிகள் செய்தாலும், மாது போதையை மது போதை வென்று விட… அதை தனக்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானமாக கருதுகிறார் நாயகி.

இந்நிலையில் காதலனை வெளியூரில் உள்ள தன் மாமா வீட்டுக்கு அழைத்து செல் கிறார். அங்கும் காதலன் குடியை விடுவதாக இல்லை. இதனால் காதலனை மதுவிடம் இருந்து பிரிக்க காதலி எடுக்கும் முடிவு, அதிர்ச்சிகரமான கிளைமாக்ஸ்.

நாயகனாக நடித்திருக்கும் கஜேஷ் நாகேஷ் ( நடிகர் நாகேஷின் பேரன் இவர்) மது அடிமை கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திப் போகிறார். காதலன் தன்னை அள்ளி அரவணைத்துக் கொள்ளப் போகிறான் என்று கவர்ச்சிக் கோலத்தில் நாயகி படுத்திருக்க, அவளை நெருங்கி வரும் நாயகனோ அவள் தலைமாட்டில் இருக்கும் மது பாட்டிலை மட்டும் எடுத்துச் செல்லும் இடத்தில் குடியின் காதலனாக நடிப்பில் முழுமை தந்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ரித்விகா ஸ்ரேயா அறிமுக நடிகை என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பில் ஈர்க்கிறார் தன்னை விட மதுவை தன் காதலன் அதிகம் நேசிக்கிறான் என்பதை தெரிந்து கொள்ளும் இடத்திலிருந்து தொடங்குகிறது இவரது நடிப்பு.
நாயகியின் மாமாவாக நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன், மூன்று பொண்டாட்டி முனுசாமியாக அந்த கேரக்டரை தனது நடிப்பால் குதூகலமாக்கி விடுகிறார் அவரது மூன்று மனைவிகளாக வரும் அஸ்மிதா, ஹேமா, சின்னாளம்பட்டி சுகி மூவருமே தங்கள் நடிப்பால் அரங்கை கலகலப்பாக்கி விடுகிறார்கள்.

நாயகியின் அப்பாவாக தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் வருகிறார்.
சேரன்ராஜ், பாவா லட்சுமணன் சின்ன கேரக்டர்களில் வந்தாலும் நிறைவு.
இசையமைப்பாளர் அருணகிரியின் இசையில் கானா பாட்டு ஆட்டம் போட வைக்கிறது. கார்த்திக் கிருஷ்ணாவின் பின்னணி இசையும் யுவராஜ் பால்ராஜின் ஒளிப்பதிவும் இந்த படத்தின் இரு பக்கத் தூண்கள்.

எழுதி இயக்கியிருக்கும் பாஸ்கர் சதாசிவம், தற்போதைய சமூக நடப்பை நகைச்சுவை
ட்ராக்கில் சொல்லியிருந்தாலும் எதிர்பார்க்காத அந்த கிளைமாக்ஸ் மனதை கலங்கடித்து விடுகிறது. தொடர்ந்து மதுவையே மையமாகக் கொண்டு இயங்கி வருபவர்கள் ஆண்மை இழக்கும் அவலத்தையும் காட்சி வாயிலாக சொல்லி மதுப் பிரியர்களுக்கு எச்சரிக்கை மணி
அடித்திருக்கிறார்.