Latest:
திரை விமர்சனம்

பாம் – திரை விமர்சனம்

மலையோரத்தில் இயற்கையின் கொடையாய் காளக்கம்மாய்ப்பட்டி கிராமம். ஒரு காலத்தில் அங்கே மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். மலை யுச்சியில் மயில் அகவும் ஓசையும் அதைத்தொடர்ந்து வானில் தெரியும் ஜோதியும் அவர்கள் தெய்வ நம்பிக்கையாக இருந்தது. இந்த அடையாளங்களுக்கு பிறகு தான் தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு திருவிழா நடத்துவார்கள்.

ஆனால் சோதனையாக இந்த அறிகுறிகள் ஒரு காலத்தில் வராமல் போகவே, தங்களின் யார் தெய்வ குற்றம் செய்திருப்பார்கள் என்று அவர்களுக்குள் இரு பிரிவாக பிரிந்து அடித்துக் கொள்கிறார்கள். இதற்கிடையே இயற்கைச் சீரழிவால் மலையில் இருந்து உருண்டு விழுந்த பெரிய கல் இரண்டாக உடைந்து கிடக்க… பெரிய கல்லை ஒரு கூட்டமும் சிறிய கல்லை இன்னொரு கூட்டமும் எடுத்துக் கொண்டு தெய்வமாக வழிபடத் தொடங்குகிறது.இதன் பிறகு காளக்கம்மாய்ப்பட்டி என்ற அந்த ஊர் காளப்பட்டியாகவும் கம்மாய்ப் பட்டியாகவும் இரண்டாக பிரிகிறது. ஒரு பிரிவினரிடம் இன்னொரு பிரிவினர் பேச்சு வார்த்தை கூட வைத்துக் கொள்வதில்லை. சின்ன விஷயத்துக்குக் கூட அடித்துக் கொள் கிறார்கள்.

இதை பயன்படுத்தி ஒரு அரசியல் கூட்டம் அந்த ஊரின் வளத்தை சூறையாட திட்டமிடுகிறது. இந்நிலையில் இரு பிரிவினர் இடையே எழும் மோதல்கள் தொடர்பாக அரசுத் தரப்பில் எவ்வளவோ சமாதான முயற்சிகள் மேற்கொண்டும் அனைத்துமே தோல்வியில் முடிகின்றன. இந்த சூழலில் அங்கே வாழும் கதிர் என்ற இளைஞன் (காளிவெங்கட்) இரு கூட்டத்தையும் ஒன்று சேர்க்க முயற்சி செய்கிறார். ஆனால் இரு ஊர் மக்களும் கதிரின் முயற்சியை அலட்சியப்படுத்துகிறார்கள்.

ஒரு நாள் குடித்து விட்டு வீடு வந்த கதிர் இறந்து போகிறார். கதிரி ன் மரணத்தை இயல்பாக எடுத்துக் கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போகிறது கிராமம். இரண்டு ஊருக்கும் மத்தியில் உள்ள ஆலமரத்தடியில் காளி வெங்கட்டின் உடலை ஒரு நாற்காலியில் அமர்த்தி வைக்கிறார் அவரது நண்பர் அர்ஜுன் தாஸ். அப்போது வாயு வெளியேறும் காளி வெங்கட் உடல் அதிர்கிறது. இதைப் பார்த்த அந்த ஊர் பூசாரி ஊருக்கு சாமி வந்திருப்பதாகக் கூறுகிறார். இதனால் வேற்றுமைகளை மறந்து சாமியாக கதிரை அந்த ஊர் நினைக்கிறது.

அதற்குப் பிறகு அந்த ஊரில் பல அதிசயங்கள் நடக்க, அதை தங்கள் தெய்வத்தின் செயலாக இரு ஊராரும் நம்புகிறார்கள். இதன் மூலம் இரு பிரிவினரும் ஒன்று சேர்கிறார்கள். அவர்களை சேர்த்து வைத்ததில் மணிமுத்துவின் ( அர்ஜுன் தாஸ் ) பங்கு என்ன என்பது மீதிக் கதை.

கதையின் நாயகன் மணி முத்துவாக அர்ஜுன் தாஸ். அந்த வித்தியாசமான கிராமத்து கதைக் கேற்ப கிராமத்து நாயகனாகவே வந்து இயற்கை நடிப்பில் மனதில் தடம் பதி க்கிறார். மண்மணம் சார்ந்த அந்த மணிமுத்துபாத்திரத்தில் தன்னை மாற்றிக் கொண்டு தனது கேரக்டருக்கு என்ன தேவையோ அதை தனது நடிப்பில் முழுமையாக கொடுத்திருக்கிறார்.கதிரின் மரணத்திற்குப் பிறகு பிற்பகுதி கதை முழுக்க அவரை சுற்றியே நகர்கிறது. அவரும் அதை உணர்ந்து எல்லை தாண்டாத நடிப்பை தந்திருக்கிறார். சினிமாத்தனமும் ஹீரோயிசமும் இல்லாத அந்தப் பாத்திரத்தில் எங்குமே அர்ஜுன் தாசை பார்க்க முடியவில்லை. அவரை மணி முத்துவாகத்தான் உணர முடிந்தது.

கதிர் கேரக்டரில் காளி வெங்கட். ஊர் மக்களின் நன்மைக்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியத்திலும் ஊராரின் எதிர்ப்பே அவருக்கு அவமானத்தைக் கொண்டு வருகிறது. ஆனாலும் அதற்காக கலங்காமல் தான் உண்டு தன் மக்கள் சேவை உண்டு என்று தொடருகிறார். இறந்து பிணமாக ஊர் மக்களின் முன்னிலையில் நாற்காலியில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தாலும் அந்த கேரக்டர் கடைசிவரை ஜீவனுடன் இருக்கிறது.
அவரின் தங்கையாக ஷிவாத்மிகா ராஜசேகர் கிராமத்து யதார்த்த இளம்பெண்ணை கண் முன் நிறுத்துகிறார்.

மாவட்ட ஆட்சித் தலைவராக வரும் அபிராமி தனது கம்பீர தோற்றம் மூலமே படத்திற்குப் பலம் சேர்த்துள்ளார். கடவுள் நம்பிக்கை பற்றி தனது உதவியாளரிடம் அவர் கூறும் இடத்தில் அரங்கம் அதிர கரகோஷம்.

வில்லங்கமான அரசியல் தலைவராக நாசர், ஊர்த் தலைவராக சிங்கம் புலி, யூடியூப் நிருபராக பால சரவணன், கிராமத்து நல்ல பாட்டியாக குலப்புளி லீலா கிடைத்த கேரக்டர்களில் தங்கள் அனுபவ நடிப்பை பதிவு செய்து இருக்கிறார்கள்.இசை
அமைப்பாளர் டி, இமானின் இசையில் பாடல்கள் அத்தனையும் சுகராகம்.
ஒளிப்பதிவாளர் பி. எம். ராஜ்குமாரின் கேமரா இந்த கிராமத்து கதையின் இன்னொரு ஜீவனாகவே மாறி இருக்கிறது.

சிக்கலான ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதை சிக்கலின்றி காட்சிப்படுத்திய விதத்தில் தேர்ந்த இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு விடுகிறார் விஷால் வெங்கட்.