பேட் கேர்ள் – திரை விமர்சனம்
பிளஸ்- 1 படிக்கும் பள்ளி மாணவி அஞ்சலிக்கு உடன்படிக்கும் சக மாணவன் மீது ஈர்ப்பு, கண்மூடித்தனமான காதல் என்றும் சொல்லலாம். ஒரு கட்டத்தில் இது பள்ளி மூலமாக பெற்றோருக்கு தெரிய வர, கண்டிக்கிறார்கள். மகளோ பெற்றோரின் கண்டிப்புக்கு அடங்குவதாக இல்லை. நிலைமை கைமீறிப் போவது தெரிந்தவுடன் வேறு பள்ளிக்கு மாற்றுகிறார்கள். இதனால் பெற்றோர் மீது கோபமடையும் அஞ்சலி, வேண்டுமென்றே அத்துமீறுகிறார்.
அதுவும் எப்படி? ”நீங்கள் சொல்வதை எல்லாம் இந்த பள்ளி வரை தான் கேட்பேன், அதன் பிறகு , என் இஷ்டப்படி தான் வாழ்வேன் ” என்கிறார். அவர் சொன்னது போலவே கல்லூரிக் காலத்தில் வீட்டை விட்டு வெளியேறி விடுதியில் தங்கிப் படிக்கிறார். அங்கே சீனியர் மாணவருடன் காதல், உறவு என்று போகிறார்.அதன் மூலம் இந்த சமூகத்தைப் பழிவாங்குவதாகவும் நினைக்கிறார். ஒருகட்டத்தில் இந்த வாழ்க்கை போலி. காதல் என்ற பெயரில் ஏமாந்து விட்டேன் என்று உள்ளூர புழுங்குகிறார்.
வேலைக்குப் போகும் பருவத்தில் மனம் போன ஒரு வாழ்க்கை. அதிலும் சண்டை, பிரிவு என்று வருகிறது. இவ்வளவு நாள் தன்னால் உண்மையாக நேசிக்கப்பட்டவர்கள் வேறொரு பெண்ணுக்கு தாலி கட்டி குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதைப் பார்த்த பிறகு தான் தன்னை அனைவரும் ஏமாற்றி பயன்படுத்திக் கொண்டு விட்டார்கள் என்ற உண்மை உறை க்கிறது. இந்த குழப்பங்களுக்கு இடையே, தான் யார் ?தனக்கான பயணம் எது? என்பதை நாயகி அஞ்சலி தேடிச் செல்வது தான் ‘பேட்கேர்ள்’ படத்தின் மீதி கதைக்களம்.
பதின்ம பருவத்திலேயே பெற்றோரின் புத்தி மதியை அலட்சியம் செய்யும் மனதளவில் முதிர்ச்சி அடையாத பெண் பாத்திரத்தில் அஞ்சலி சிவராமன். அந்த கேரக்டருக்கு அத்தனை பொருத்தமாக இருக்கிறார். அம்மாவின் ஒவ்வொரு அட்வைஸுக்கும் எதிர்மறை பதில்களை அள்ளி வீசும் இடங்களில் அதை தனது மெச்சூரிட்டியாக எடுத்துக் கொள்ளும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ஊமை கண்ட கனவாக தனது ஒவ்வொரு செயல்பாடும் முரணாக முடியும் இடங்களில் தனது கேரக்டரின் இன்னொரு விதமான மனோபாவத்தை நமக்குள் அழகாக கடத்தி விடுகிறார். கட்டுப்படுத்தல் தொடர்ந்தால் அதை மீறியே ஆவது என்கிற இன்றைய ஒரு சில டீனேஜ் பெண்களின் மனநிலையை அப்பட்டமாக பிரதிபலிக்கிறார். தனக்கு எல்லாமுமாய் இருந்தவன் தன்னை ஏமாற்றி விட்டது பொறுக்காமல் அவனிடம் சண்டைக்கு மல்லுக்கட்டும் இடத்தில், வேடிக்கை பார்த்த அத்தனை கூட்டமும் தன்னையே குற்றவாளியாக பார்ப்பது உணர்ந்து மௌனமாகும் இடத்தில் நடிப்பில் புதுவித மேனரிசம். ( அஞ்சலி உனக்கு விருது காத்திருக்கு ) பொதுவாக பெண்களின் சுயம் பாதிக்கும் எத்தனையோ சம்பவங்கள் இருக்க, இந்தப் படத்தில் பாலியல் சுதந்திரம் பற்றி மட்டும் சொன்னால் போதும் என்று முடிவு கட்டி விட்டார்கள் போலும்.
பள்ளிப் பருவத்திலேயே இந்த வளர்ந்த குழந்தை பாதை மாறிச் செல்லும் காட்சிகள் அதிர்ச்சி அளிப்பவை . படத்தின் நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி சிவராமன், முழு படத்தையும் தன் நடிப்பால் சுமந்துள்ளார். பள்ளி மாணவியிலிருந்து, கல்லூரிமாணவி, வேலைக்கு போகும் பெண் என்று வெவ்வேறு தோற்ற மாற்றங்களை தோற்றத்திலும் உடல் மொழியிலும் அழகாக கொண்டு வந்து விடுகிறார். காட்சியமைப்புகள் மெல்ல நகர்ந்தாலும், அஞ்சலி சிவராமனின் நடிப்பு அதனை ஈடு செய்கிறது.
நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் சாந்தி பிரியாவின் கதாபாத்திரமும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் கச்சிதம். மகள் விஷயத்தில் தானொரு கையாலாகாத தாயாக அவர் தவிப்பது நல்ல நடிப்பு. நாயகியின் தோழியாக யாரது சரண்யா ரவிச்சந்திரனா… தோழிக்கு ஒன்று என்றால் துவண்டு போகும் அந்த கேரக்டரில் நடிப்பில் பல பரிமாணங்களை தொட்டுச் செல்கிறார், சரண்யா. ஹிர்து ஹரூன், டீஜே, சுஷாங் பொம்ம ரெட்டிபல்லி என மற்ற பாத்திரங்களில் நடித்தவர்களும் குறையில்லாமல் செய்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் ப்ரீதா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன் ஆகியோரது ஒளிப்பதிவில் காட்சிகள் இயல்பாக வந்துள்ளன.அமித் திரிவேதியின் இசை படத்தின் இன்னொரு தூணாக இருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் வர்ஷா பரத். பெற்றோரின் அக்கறையான கண்டிப்பை கூட வன்மமாக என்னும் இன்றைய தலைமுறையின் எண்ணங்களை காட்சிகளில் பிரதிபலித்திருக்கிறார். தானாக இதுவரை அமைத்தது வெறும் மண் கோபுரம் என்பதை நாயகி உணருமிடத்தில் அவளுக்கான வாழ்க்கை அவள் கையில் இல்லை என்கிற அந்த உண்மை நிஜமாகவே மனதை சுட்டுப் போட்டு விடுகிறது .
மொத்தத்தில் இந்த பேட் கேர்ள் சாக்கடையில் கால் வைக்கும் வரை அது சந்தனமாகவே தெரிகிற இன்றைய தலைமுறையின் அறியாமைக்கு சவுக்கடி கொடுக்கிற குட் கேர்ள்.
