திரை விமர்சனம்

மதராஸி – திரை விமர்சனம்

அமைதியே வடிவான தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரத்தை ஏற்படுத்தி அமைதியை குலை க்க திட்டமிடுகிறது, ஒரு தீவிரவாத கும்பல். அதற்காக துப்பாக்கிகளைப் புழக்கத்தில் விட்டு, அதை வணிகமாக்க அந்த சட்ட விரோதக் கும்பல் முயற்சி செய்கிறது. அதன் முதல் கட்டமாக துப்பாக்கிகளை கன்டெய்னர்களில் கடத்திக் கொண்டு ஆந்திர எல்லை கடந்து தமிழகத்தில் நுழைய முயல்கிறது.

இதே நேரத்தில் சிறிய அளவில் தமிழகப் பகுதிகளில் துப்பாக்கிகளை ரகசியமாக புழக்கத்தில் விடுபவர்கள் மூலம் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கின்றன.
இந்த கும்பலை பிடிப்பதற்கு காவல்துறை வியூகம் அமைக்கிறது.ஆனால் குற்றவாளிகளின் நெட்வொர்க் அந்த வியூகத்தை தவிடு பொடியாக்குகிறது. நாசக்கார கும்பலை கூண்டோடு பிடிக்க சிறப்பு காவல் படை தயாராகிறது.

இப்போது நாயகன் அறிமுகம். நாயகன் சிவகார்த்திகேயன் உயரமான இடத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். தன் காதலி தன்னைக் கைவிட்டு விட்டதாகக் கூறிக்கொண்டு மேலிருந்து குதித்தும் விடுகிறார். காயங்களோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.ஆயுதக் கடத்தல் நடவடிக்கையில் காயமடைந்த போலீஸ் உயர் அதிகாரி பிஜுமேனனும் அதேஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அப்போது இருவரிடையே அறிமுகம் ஏற்படுகிறது. அதுவே நட்பாகவும் மாறுகிறது. அப்போதும் கூட நான் செத்தே ஆக வேண்டும் என்கிறார் சிவகார்த்திகேயன்.அப்போது பிஜு மேனன் ‘ஒரு மூன்று நாள் உன் சாவைத் தள்ளிப் போடு ‘என்று அவரைத் தனது வேட்டை திட்டத்தில் சேர்த்துக்கொள்கிறார்.அவரை இணைத்துக் கொண்டு திட்டங்கள் தீட்டுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் சாதாரண மனநிலை கொண்டவர் அல்ல, 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கு பிறகு அவர் ஒரு Fregoli Delusion பிரச்சினை கொண்ட மன நோயாளி என்பது தெரிய வர…
இந்த நோயின் சிறப்பு அம்சம், பாதிக்கப்படும் எல்லாரையுமே தனக்குத் தெரிந்தவர்களாக நினைத்துக் கொள்வார்கள்.
அது அவரது பெற்றோரை இழந்த விபத்துக்குப் பிறகு ஏற்பட்டுவிட்ட மனச்சிக்கல் என்பது காவல்துறைக்குத் தெரிகிறது.இருந்தாலும் அவரை இணைத்துக்கொண்டு களத்தில் இறங்குகிறார்கள். அந்தத் துப்பாக்கி கடத்தல்காரர்களைப் பிடித்தார்களா? சிவகார்த்திகேயன் தனது காதலி ருக்மிணி வசந்த்துடன் சேர்ந்தாரா என்பது அடி தடி இடி முழக்கங்களுடன் கூடிய திரைக்கதை.

முதல் 10 நிமிடங்களிலேயே கார் துரத்தல் காட்சிகள் படத்தின் தீவிரத் தன்மையை உணர்த்தி விடுகின்றன.
முதல் பாதியில் ஆயுதக் கடத்தல் கும்பல்களின் கொடூர திட்டங்கள், போலீஸ் வியூகங்கள், மோதல்கள், சிவகார்த்திகேயன் ருக்மிணி வசந்த் காதல் என்று படம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பறக்கிறது. .இரண்டாம் பாதியோ இன்னும் வேகம்.வேகம்… இரண்டாம் பாதியில் வில்லன் வித்யுத் ஜாம்வல்- சிவகார்த்திகேயன் மோதும் காட்சிகள் அதிரடியாக கண் முன் விரிகின்றன.

சிவகார்த்திகேயன் ரகுராம் பாத்திரத்தில் வருகிறார். தன் உயிர் காதலிக்காக தீவிரவாதிகளை வேட்டையாடும் இடத்தில் ஆக்சன் ஹீரோவாக மனதில் நிறைகிறார் .
அவரது காதலி மாலதி கேரக்டரில் வரும் ருக்மிணி வசந்த்தின் நிஜமான அன்பை உணர்ந்த தருணத்தில் அந்தக் காதலிக்காக அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு உயிரனைய போராட்டமும் கதைக்களத்தின் முழு ஜீவனாகி விடுகிறது. பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் தனக்குத் தெரிந்தவர்களாக நினைத்துச் செயல்படுவதும், காப்பாற்றுவதும் அந்த அந்த கேரக்டரை வீரியமுள்ளதாக்கி விடுகிறது.

மாலதியாக வரும் ருக்மிணி வசந்த் தன் கேரக்டரோடு நடிப்பில் அழகாக பொருந்தி போகிறார். காதலனிடம் செல்ல கோபத்தில் லூசு என்று சொல்லிவிட்டு, சட்டென்று இது வழக்கமா எல்லோரும் சொல் வோமே அந்த லூசு என்று சமாதானப்படுத்தும் இடத்தில் நடிப்பும் உடல் மொழியும் ஆஹா சொல்ல வைக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் வித்யுத் ஜமால் நடிப்பில் மிரட்டுகிறார். அவரது அறிமுகக் காட்சியே இவர் சாதாரண வில்லன் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறது.

தேசிய புலனாவு முகமையின் முக்கியஸ்தராக நடித்திருக்கும் பிஜூ மேனனின் அனுபவ நடிப்பும் அவர் மக்னாக துடிப்புடன் நடமாடும் விக்ராந்த் மற்றும் அந்தக் குழுவினர் நடிப்பும் அத்தனை இயல்பு.

இன்னொரு வில்லனாக இருக்கும் சபீர், மருத்துவர் தலைவாசல் விஜய், சில காட்சிகளில் வரும் லிவிங்ஸ்டன், ஆடுகளம் நரேன் ஆகியோரும் நிறைவு.

சுதீப் இளமான் ஒளிப்பதிவில் சண்டைக் காட்சிகள் அதிரடி மிரட்டல்.
அனிருத்தின் இசையில் ஒரு பாடல் தேறுகிறது. பின்னணி இசையின் உருட்டல்களில் செவிப்பறை கிழிந்து போகுமோ என்ற அச்சம் நிச்சயம்.
எழுதி இயக்கியிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு தீவிரவாத கதையை ஒரு அழகான காதலுடன் இணைத்து முள்ளில் ரோஜாவாக திரைக்கதையை மணக்கச் செய்திருக்கிறார். நல்ல கதையை அதன் பொருத்தமான பாத்திரத்தேர்வுகள் இன்னும் அழகு படுத்தும் என்பதை அவரது இந்த மதராஸி உறுதி செய்கிறது. அடுத்தவன் கஷ்டத்தை தன் கஷ்டமாக எவன் ஒருவன் நினைக்கிறானோ, அவன்தான் மனிதன் என்ற அந்த கிளைமாக்ஸ் வசனம் தான் மொத்த படமும்.
மதராஸி , மக்களின் மகராசன்.