திரை விமர்சனம்

லோகா அத்தியாயம் 1 சந்திரா – திரை விமர்சனம்

சூப்பர்மேன் டைப் திரைப்படங்கள் எப்போதாவது வந்து திரையை பரபரப்பாக்கும்.அப்படி ஒரு சூப்பர் மேன் கதை இது. சின்ன திருத்தம் சூப்பர் உமன் கதை. நாயகி சந்திராவின் சிறுவயது பாதிப்பு, அதன் மூலம் அவர் அதீத சக்தி படைத்த பெண்ணாக உருவெடுப்பது என தொடக்கம் முதலே வேகமெடுத்து விடுகிறது கதைக்களம்.

பெங்களூர் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன்.
இவர் தங்கி இருக்கும் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருப்பவர் தான் நாயகன் நஸ்லென். அடுத்தடுத்த தொடர் சந்திப்புகள் கல்யாணி மீது நஸ்லெனுக்குள் காதலை கொண்டு வருகிறது. கல்யாணியோ நஸ்லெனின் காதலை ஏற்கவும் இல்லை. மறுக் க்கவுமில்லை.
கண்டும் காணாதது போல் இருக்கிறார்.

இப்படி அவர் பின் தொடரும் ஒரு நாளில் ஒரு சட்ட விரோத கும்பலால் கல்யாணி கடத்தப்படுகிறார். நஸ்லென் அவரை காப்பாற்ற விரைகிறார். ஆனால் நடந்தது வேறு. கல்யாணி ‘காட்டேரி’யாக உருவெடுத்து அனைவரையும் கொடூரமாக கொல்கிறார். இதைக்கண்டு கடும் அதிர்ச்சியடைகிறார், நஸ்லென்.
கடத்தல் தொழிலில் ஈடுபடும் சட்ட விரோத கும்பலுக்கு ஆதரவு தரும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சாண்டி இது கல்யாணியின் வேலை தான் என்று புரிந்து கல்யாணியைத் தேடி வருகிறார். அப்போது அமானுஷ்ய சக்தி படைத்த பெண் என்பதை உணர்ந்து கொண்டவர், கல்யாணியை கைது செய்ய நடவடிக்கை எடுத்தாரா? இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘லோகா’ – அத்தியாயம் 1 சந்திரா.

கள்ளிக் காட்டு நீலி’யாக அமானுஷ்ய சக்தி படைத்த சந்திரா கேரக்டரில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் அதகளப்படுத்துகிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் வேங்கையின் பாய்ச்சல்.
தான் விரும்பும் காதலி சராசரி மனுஷி இல்லை என்று தெரிந்தும், காதலில் உறுதியாக இருக்கும் கேரக்டரில் நஸ்லின் பிரமாதப்படுத்துகிறார். அவர் நண்பர்களாக வரும் சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் இருவரும் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள்
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கவுடா கதாபாத்திரத்தில் நடன இயக்குநர் சாண்டி மிரட்டியிருக்கிறார்.
சந்திராவின் சிறுவயது பாதிப்பு, அதன் மூலம் அவர் அதீத சக்தி படைத்த பெண்ணாக உருவெடுப்பது என வரும் அந்த பிளாஷ் பேக் பிற்பகுதி கதைக்கான சரியான அடித்தளம் ஆகிவிடுகிறது.

சந்திரா கதாபாத்திரத்தின் அறிமுகம் மற்றும் அவரது நிஜ முகத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் கல்யாணியின் நடிப்பு சூப்பர்.
சந்திரா பெங்களூருக்கு ஏன் வருகிறார் ? அவருக்கு கொடுக்கப்பட்ட பணி என்ன ?, அவர் கூட்டணி யாருக்கு எதிராக போராடுகிறார்கள் ? என்பதற்கு முதல் பாகத்தில் விடை இல்லை. இரண்டாம் பாகத்தில் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

கல்யாணிக்கு உதவ திடீர் பிரவேசம் செய்யும் நட்சத்திர நடிகர் டொவினோ தாமஸ் வந்து போகும் அந்த கொஞ்ச நேரத்திலும் திரையரங்கை பரபரப்பாக வைத்துக் கொள்கிறார். படத்தை தயாரித்திருக்கும் துல்கர் சல்மான் கிளைமாக்சில் தோன்றுவது நிஜமாகவே இன்ப அதிர்ச்சி. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் கேமரா பணத்தின் இன்னொரு நாயனாகவே வலம் வருகிறது.

ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்குக் கூடுதல் பலம். எழுதி இயக்கிஇருக்கிறார், டொமினிக் அருண். ஒரு சாமானிய பெண் தோற்றத்தில் வந்தவள் சராசரி பெண்ணில்லை என்று உணர வைக்கும் காட்சி தொடங்கி முடிவு வரை நிஜமாகவே இயக்குனர் முத்திரை.