குற்றம் புதிது – திரை விமர்சனம்
உயர் போலீஸ் அதிகாரியின் மகள் அலுவலகம் முடிந்து நள்ளிரவில் வீட்டுக்கு கிளம்புகிறாள் ஆனால் அவள் வீடு வந்து சேரவில்லை. கடத்தப்பட்டாளா அல்லது கடத்திக் கொல்லப்பட்டாளா என்பதை கண்டுபிடிக்க காவல்துறை சீறிப் பாய்கிறது.
அதேநேரம் ஒரு இளம்பெண் உள்பட மூன்று பேரை கொலை செய்ததாகச் சொல்லி உணவு டெலிவரி இளைஞன் ஒருவன் போலீசில் சரணடைகிறான். அதைப் பற்றி விசாரித்தால் அவன் கொலை செய்ததாகச் சொன்ன மூவரில் இருவர் உயிருடன் இருக்கிறார்கள்.அப்படியானால் அந்த இளைஞன் ஏன் பொய் சொல்ல வேண்டும்? அந்தப் பெண் உயிருடன் இருக்கிறாளா, இல்லையா? கேள்விக்கான விடையே குற்றம் புதிது.
கதாநாயகனாக நடித்திருக்கும் தருண் விஜய், நடிப்புக்காக தன்னை முழுதாக தயார்படுத்தி இருக்கிறார். நீதிபதியையும் போலீஸ் அதிகாரியையும் அங்கிள் என்று சொல்லி கலகலப்பு ஏற்றுகிறார்.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்பாக நின்று கொண்டு அந்த வழியாக வரும் போலீஸ்காரரை அழைத்து, நான் ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டேன். அதற்காக சரண் அடைய வந்திருக்கிறேன் என்று சொல்கிற இடத்தில் அந்த அப்பாவி முகம் நடிப்பில் ஆயிரம் கதை சொல்கிறது. நாயகியாக சேஷ்விதா கனிமொழிக்கு வழக்கமான நாயகிகளைக் காட்டிலும் மாறுபட்ட கதாபாத்திரம். அதை அதை உணர்ந்து அந்த கேரக்டரில் முழுமையாக வெளிப்படுகிறார்.
நிழல்கள் ரவி, மதுசூதன ராவ்,பாய்ஸ் ராஜன்,ராம்ஸ் உள்ளிட்டோரின் பாத்திரப்படைப்புகளும் அதில் அவர்களுடைய நடிப்பும் நன்று. கரண் பி.கிருபா இசையில் பாடல்கள் இனிமை.
ஜேசன் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு காட்சிகளை திகிலுடனே நமக்கு கடத்துகிறது. எழுதி இயக்கியிருக்கிறார் நோஹா ஆம்ஸ்ட்ராங். காணாமல் போன போலீஸ் அதிகாரியின் மகள்… அவளை கொலை செய்தேன் என்று வம்படியாக வந்து சரணடையும் இளைஞன்… என்ற மைய முடிச்சுகளில் தெளிவாக கதை சொல்லி இருக்கிறார். அது நம்பும் படி இருக்கிறது என்பது இயக்குனருக்கான பிளஸ். கிளைமாக்ஸ்சில் அந்த எதிர்பாராத திருப்பம் இன்னொரு பிளஸ்.
