நாளை நமதே – திரை விமர்சனம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைக்குள் அடங்கி ஒடுங்கி கிடக்கிறது
ஒடுக்கப்பட்ட சமூகம். ஆதிக்க சாதி வைத்தது தான் அந்த ஊரின் எழுதப்படாத சட்டம். அவர்களில் ஒருவரே பஞ்சாயத்து தலைவராகவும் இருப்பார். இந்நிலையில் இந்த தொகுதியை தனித்தொகுதியாக அறிவிக்கிறது அரசு. அக்கிராமத்தைச் சார்ந்த ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்பட்ட மக்களைச் சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிட்டால் நடப்பதே வேறு என மிரட்டி விட்டுச் செல்கிறார்கள். ஆனால் சுதந்திரப் போராட்ட தியாகியும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருமான தாத்தாவை தேர்தலில் நிற்கும்படி மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் அரசியல் கட்சியினரும் கேட்டுக் கொள்கிறார்கள். அவரும் அதை ஏற்று வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும் வழியில் ஆதிக்க சாதியினரால் கொல்லப்படுகிறார். அவருடன் சென்ற வர்களும் உயிர் இழக்கிறார்கள். அதோடு ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவரையும் கொன்று எரித்து, ஊர்க்கலவரமாக அதை மாற்றி விடுகிறார்கள். கொல்லப்பட்ட சுதந்திர போராட்ட தியாகியின் பேத்தி அமுதா அப்போது சிறுமி. கொண்ட குறிக்கோளை அடைய தொடர்ந்து பயமின்றி அறவழியில் போராட வேண்டும் என்ற தாத்தாவின் போதனையை அடிக்கடி கேட்டு வளர்ந்த அமுதா, தற்போது இளம் பெண்ணான நிலையில் மீண்டும் அவர்கள் தொகுதி தனித்தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் அமுதா போட்டியிடுகிறாள்.
அமுதாவை வாபஸ் வாங்க வைக்க, ஆதிக்க சக்தி பல்வேறு மிரட்டல் அம்புகளை ஏவுகிறார்கள். அடி, உதை, அவமானம் என சித்திரவதைகள் தொடர்ந்தாலும் போட்டியில் இருந்து விலக மறுத்து விடுகிறாள் அமுதா.
இந்நிலையில் தேர்தலுக்கு முதல் நாள் அமுதாவைக் கொல்ல ஆதிக்க சாதியினர் திட்டமிடுகிறார்கள். அவர்கள் வலையில் அமுதா சிக்கினாளா?, தேர்தல் நடந்ததா? என்பது பரபர கிளைமாக்ஸ்.
அமுதாவாக மதுமிதா. அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ற பொருத்தமான தேர்வு என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக்கிறார். அவமானங்களை வெகுமானங்களை ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொரு இடத்திலும் முத்தான நடிப்பு.
தேர்தலில் போட்டியிடும் தன்னை அம்மா முதற்கொண்டு அனைவருமே திட்டி வாபஸ் வாங்கச் சொல்ல, தன் நோக்கத்தில் உறுதியாக இருக்கும் அந்த மனோபாவம் அவரது உடல் மொழி வரை நடிப்பாக கொட்டுகிறது. வெல்டன் மதுமிதா.
போட்டியிலிருந்து விலகாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மகளைமிரட்டும் அமுதாவின் அம்மா, மகளுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுக்கும் தருணம் அரங்கை கைத்தட்டல்களால் நிறைக்கிறது.
சீரியஸான இந்த கதைக்குள் துணைத் தலைவர் பதவிக்கு ஆசைப்படும் கேரக்டரில் டைரக்டர் வேல்முருகன் அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார். மத பிரச்சாரத்துக்காக வந்து தேர்தல் நேரத்தில் அமுதாவுக்கு உதவும் அந்த பாதிரியார் நடிப்பும் நடனமும் கலகலப்புக்கு உத்தரவாதம். இவர் தவிர பஞ்சாயத்து தலைவர், தலைவராக துடிக்கும் அவரது உறவுக்காரர், கிராம மக்கள் என அத்தனை பேரும் திரைக்கு புதுமுகம் என்றாலும் நடிப்புக்கு பழகியவர்களாக திரை வலம் வருவது அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசனின் இயக்கத் திறமைக்கு சான்று.
‘உனக்கான அரசியலை நீ பேசாவிட்டால், நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்’ எனும் லெனினின் வாசகத்தை படத்தின் கருவாக்கிய வெண்பா கதிரேசன். இன்றளவும் ஒடுக்கப்பட்டவர்களின் நிலை இங்கு மாறவில்லை என்பதை ஒவ்வொரு காட்சியிலுமே ஆணியடித்து சொல்லி இருக்கிறார்.அதோடு சமத்துவம் என்பது சட்டரீதியான போராட்டத்தால் மட்டுமே சாத்தியமாகும் எனும் யதார்த்தத்தையும் பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் இந்த நாளை நமதே, நம்பிக்கையின் துவக்கம்.
