காத்து வாக்குல ஒரு காதல் -திரை விமர்சனம்
காதல் படம். அதை வெட்டு குத்து கத்தி வகையறாக்களுடன் சொல்லி இருக்கிறார்கள்.
மாஸ் ரவியும், நாயகி லட்சுமி பிரியாவும் உருகி உருகி காதலிக்கிறார்கள். இந்நிலையில், நாயகன் மாஸ் ரவி திடீரென்று காணாமல் போய் விடுகிறார். அவரைத் தேடி அலைகிறார் நாயகி. மாஸ் ரவியை மீண்டும் லட்சுமி பிரியா பார்க்கும்போது அவர் ஒரு மாஸ் ரவுடியாக இருக்கிறார். காதலியைத் தெரியாதவர் போல் கடந்து போகிறார்.
நாயகனின் இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னணி என்ன? நாயகியின் காதல் என்னவானது? கேள்விகளுக்கான விடை, எதிர்பாராத கிளைமாக்ஸ்.
நாயகனாக நடித்திருக்கும் மாஸ் ரவி, உருகி வழியும் காதலன், அடிதடிக்கு அஞ்சாத காதகன் என இரண்டு மாறுபட்ட நிலைகளிலும் நடிப்பில் தனித்தனி கொடியேற்றி இருக்கிறார். படத்தை இயக்கியவரும் இவர் தான். இயக்கத்தில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. ஆனால் நடிப்பில் தேர்ந்த அனுபவம் தெரிகிறது. அறிமுக நடிகர் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் லட்சுமி பிரியா, ஆளும் அழகு. நடிப்பும் அழகு.
காணாமல் போன காதலனை தேடி தவிக்கும் இடங்களில் தவிப்பும் துடிப்புமான நடிப்பில் தனித்துவம் பெறுகிறார்.
இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் மஞ்சுவும் குறைவில்லை. மாஸ் ரவியை துரத்தி துரத்தி காதல் சொல்ல இவர் முயலும் ஒவ்வொரு இடங்களும் ரசனைக் களஞ்சியம்.
சண்டைப்பயிற்சி இயக்குநர் சூப்பர் சுப்பராயன் வில்லனாக வருகிறார்.முதன்மை வில்லனாக சாய் தீனாவுக்கு ப்ரோமோஷன். நடிப்பில் அதற்கான நியாயம் செய்திருக்கிறார். ஆதித்யா பாஸ்கர், தங்கதுரை அவ்வப்போது சிரிப்பு வெடிகளை வீசுகிறார்கள். கல்லூரி வினோத், பாஸ்கர், பவர் ஸ்டார், மேனாக்ஸா, மிப்பு கதையோட்டத்தில் பொருத்தமான பாத்திரங்களாக வந்து போகிறார்கள்.
இசைமைப்பாளர்கள் ஜிகேவி மற்றும் மிக்கின் அருள்தேவ் இசையில் பாடல்கள் சுக ராகம் .பின்னணி இசையில் மொத்த திறமையையும் கொட்டி இருக்கிறார் ராஜதுரை, சுபாஷ் மணியன் ஒளிப்பதிவு அரிவாள் வீச்சுக்களை பயமுறுத்தும் விதத்தில் படம் பிடித்திருக்கிறது. மாஸ் ரவி எழுதி இயக்கியிருக்கிறார்.இன்றைய இளைய தலைமுறையினர் ரவுடித்தனத்தில் ஈடுபடக்கூடாது என்பதை வெட்டுகுத்து மூலம் கொஞ்சம் பயமுறுத்தும் விதத்திலேயே சொல்லியிருக்கிறார். காதலை துணைக்கு வைத்துக் கொண்டு சொல்லியிருக்கிறார் என்பது சிறப்பு . நாயகன் தனது காதலை நாயகியிடம் வெளிப்படுத்தும் அந்த கிளைமாக்ஸ், காதல் பொதிந்தது.
-காத்து வாக்குல ஒரு காதல், அடி தடி புயலுக்கு நடுவே ஜில்லுனு ஒரு பூங்காற்று.
