தலைவன் தலைவி -திரை விமர்சனம்
காதலில் கட்டுண்டு அன்பில் சிக்குண்ட இளம் தம்பதிகள் குடும்ப சூழல் காரணமாக விவாகரத்து வரை போனால்… மதுரையில் பரோட்டா கடை வைத்திருக்கும் ஆகாசவீரன், பக்கத்து ஊர் பேரரசியை விரும்பி திருமணம் செய்து கொள்கிறான். பெண் வீட்டுக்கு இந்த திருமணத்தில் முழு சம்மதம் இல்லை. மாமியார் வீட்டில் நாத்தனார் மாமியாரும் மணப்பெண்ணுக்கு எதிரான மன நிலையில் இருக்கிறார்கள். ஆனால் தம்பதிகள் இதையெல்லாம் தாண்டி தங்களுக்குள் பிரியத்தை கொட்டவே செய்கிறார்கள். வாரிசாக ஒரு பெண் மகவும் பிறக்கிறாள்.
ஆனாலும் ஒரு கட்டத்தில் இரு குடும்பத்தில் இருந்தும் வீசப்பட்ட கோபக்கணைகள் தம்பதிகளை பதம் பார்க்க… தாய் வீட்டுக்கு கோபத்தில் வரும் மனைவியை பார்க்க பாசமிகு கணவன் வராமல் போக… இந்தப் பிரிவை நிரந்தரமாக்க சிற்சில உள்ளடி வேலைகள் நடந்ததில் விவாகரத்து என்ற பெயரில் பிரிவு நிரந்தரம் ஆகிறது. பிரிவுக்குப் பின்னான மூன்றாம் மாதம் குழந்தைக்கு மொட்டை போட குலதெய்வம் கோயிலுக்கு பெற்றோருடன் வந்திருக்கும் பேரரசியிடம் இருந்து கதையை தொடங்குகிறார்கள். விஷயம் ஆகாச வீரனின் காதுக்கு போக, என்னிடம் சொல்லாமல் என் மகளுக்கு மொட்டை போடுவதா?, என வம்படியாக அங்கே வந்து நிற்கிறான் ஆகாச வீரன். குழந்தைக்கு மொட்டை போடத் தொடங்கிய சென்ராயன் துரத்தப்பட…
முழுசாக மொட்டை போட்டார்களா?பிரிந்த குடும்பம் ஒன்றாக இணைந்ததா என்பது கூச்சல் கும்மாளத்துடன் கூடிய கதைக்களம்.
ஒரு சீரியஸ் கதையை எடுத்துக்கொண்டு அதை சிரிப்பு வரம்புக்குள் கொண்டு வருவதெல்லாம் தமிழ் சினிமா தவிர்க்கப் பார்க்கும் ஒரு விஷயம். அதை அப்படியே தலைகீழாக புரட்டிப்போட்டு சிரிக்க சிரிக்க ஒரு சீரியஸ் கதையை கொடுத்திருக்கிறார் இயக்கிய பாண்டிராஜ்.
ஆகாச வீரனாக விஜய் சேதுபதி, அவர் மனைவி பேரரசியாக நித்யா மேனன் இருவரும் தங்கள் கேரக்டர்களில் வாழ்ந்து
இருக்கிறார்கள். தம்பதிகளுக்குள் சண்டை தொடங்கும் போதே நம்மையும் ரசிக்கும் மனநிலைக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். சதா சண்டை. அந்த சண்டைக்குள்ளும் பொங்கி வழியும் காதல்.. இப்படி எந்த ஒரு தம்பதியையும் இதுவரை திரையில் பார்த்ததில்லை. மனைவியை கணவன் மேடம் என்பதும், கணவனை மனைவி சார் என்பதும் அவர்கள் உக்கிரமாக சண்டை போட்டுக் கொள்ளும் போது பயன்படுத்தும் வார்த்தைகள். அது கூட ரசிக்க வைக்கிறது என்பதுதான் இந்த ஜோடிகளை நடிப்பில் தனித்து காட்டுகிறது.
அடி தடிக்கு கொஞ்சமும் அஞ்சாத விஜய் சேதுபதி, ஆத்திரமான மனைவியை சமாதானப்படுத்த கெஞ்சுவதும் கொஞ்சுவதுமாய் மாறும் இடத்தில் இந்த கேரக்டருக்கு இன்னொரு நடிகரை யோசிக்கவும் முடியவில்லை.மாமியார், நாத்தனார் தரும் மறைமுக இம்சைகளால் ஆவேசமாகும் இடங்களில் நடிப்பில் நானும் பேரரசி என்பதை நிரூபிக்கிறார் நித்யா மேனன். இந்த இருவருக்கும் அடுத்தபடியாக படம் முழுக்க ஸ்கோர் செய்பவர் நாயகனின் அம்மாவாக வரும் தீபா சங்கர். குறி பார்த்து அஸ்திரங்களை வீசும் இந்த கிராமத்து மாமியாருக்கு இனி இம்மாதிரியான கேரக்டர்கள் குவியும்.
சரவணன், செம்பன் வினோத், ஆர்.கே.சுரேஷ், ஜானகி சுரேஷ், ரோஷினி, காளி வெங்கட், மைனா நந்தினி, யோகி பாபு, சென்றாயன் என படத்தில் வரும் அத்தனை நட்சத்திரங்களும் கேரக்டர்களாகவே களமாடுகிறார்கள். குறிப்பாக ஆகாச வீரன்-பேரரசி காதலுக்கு தூது போன பரோட்டாவைக் கூட படத்தில் ஒரு கேரக்டராகவே ரசிக்க முடிகிறது. படத்தில் யோகி பாபுவின் காமெடி ஒவ்வொன்றும் சிரிப்பு வெடி.. அவர் சோகத்தில் ஏதாவது சொன்னாலும் அது கூட காமெடியாக மாறி திரையரங்கு அதிர்கிறது.
மகன் பிறந்த நாளுக்காக சாமி கும்பிட வரும் தம்பதிகளாக காளி வெங்கட்- மைனா நந்தினி தம்பதிகள் கிராமத்து எதார்த்த தம்பதிகளாக மனதில் நின்று போகிறார்கள். , நித்யா மேனனும் விஜய் சேதுபதியும் சண்டை போடும் காட்சிகளில் இருவரும் மாறி மாறி கத்திக் கொண்டே இருப்பது காது ஜவ்வுகளை பதம் பார்க்கின்றன. அதேபோல இரண்டாம் பாதியில் எம்எல்ஏவின் ஆட்கள் இரு குடும்பத்துக்கும் இடையே பஞ்சாயத்து செய்வதாக வரும் காட்சிகள் ரசிகரு க்கான சோதனை நேரம். விவாகரத்து தொடர்பாக விஜய் சேதுபதி செய்யும் அட்வைஸ் பிரிவில் இருக்கும் எல்லா தம்பதிகளுக்கும் பொருந்தாது. சிலருக்கு தீர்வுக்கெட்டாத சில காரணங்கள் இருக்கக்கூடும்.
சந்தோஷ் நாராயணின் பாடல்களில் ‘பொட்டல முட்டாயே’ திரையரங்கை குதூகலகமாக வைத்திருக்கிறது. எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு பிளஸ். பாண்டிராஜ் எங்கே இருக்கிறார். அற்ப காரணங்களுக்காக தெரிந்து போகும் தம்பதிகளுக்கு பிரிவை அன்பால் வெல்லுங்கள் என்று உபதேசம் செய்திருக்கிறார்.சொன்ன விதத்தில் கொத்து பரோட்டாவாய் ருசிக்கிறது.
