ஹரிஹர வீரமல்லு – திரை விமர்சனம்
பவன் கல்யாண் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக வந்திருப்பது இந்த வீரமல்லு.
இதில் முதல் பாகம் மட்டுமே தற்போது வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்திற்கு, Sword Vs Spirit என உபதலைப்பு வைத்துள்ளனர். வாளின் (Sword) முனையில் மதத்தைப் பரப்பும் ஒளரங்கசீப்பிற்கு எதிராக, கோயில்களையும் இந்து தர்மத்தையும் காக்கும் பொருட்டு மனவலிமை மிக்க (Spirit) ஹரிஹர வீரமல்லு புரட்சி செய்கிறார்.
இந்த ஹரிஹர வீரமல்லு ஒரு கற்பனையான கதாபாத்திரம். ஒளரங்கசீப்பை எதிர்த்து, அவர் வசமுள்ள கோகினூர் வைரத்தை, மீண்டும் கோல்கொண்டாவிற்கு ஹரிஹர வீரமல்லு கொண்டு வர நினைத்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையை, கற்பனைக்கும் எட்டாத விதத்தில் பிரம்மாண்டமாய் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஃபேன்டஸிக்கான அற்புதமான அடித்தளம் இந்த படத்தின் பலம். ஆனால் படத்தை ஒற்றை ஆளாக ஹரிஹர வீரமல்லுவை சுமக்க வைத்து நம்மை டயர்ட் ஆக்கி விட்டார்கள். வைரங்களைத் திருட ஒரு குழுவை உருவாக்குகிறார் வீரமல்லு. அவர்களில் ஒருவர் சித்து விளையாட்டுகளில் வல்லவரான விசான்னா.( நாசர்) ஆனால் அந்தத் திருட்டில் அவரது சித்து விளையாட்டுக்கு கதையில் இடமே இல்லை. அந்தக் குழுவில், ‘தூண்’ என கிண்டலாக அழைக்கப்படும் 7 அடி உயரமுள்ள ஓர் இஸ்லாமியக் கதாபாத்திரமும் இணைகிறது. திருட்டில் எந்தப் பங்களிப்பும் அவருக்கும் கொடுக்கப்படவில்லை. (இவர் நடிகை ஜெயசுதாவின் மகனான நிகார் கபூர். இவரையும் நாயகனுடன் போக்கும் வரத்துமாய் ஆக்கி விட்டார்கள்.)

தனது குருமார்களைக் காப்பாற்றவும், கோகினூர் வைரத்தை மீட்கவும் கோல்கொண்டாவில் இருந்து டெல்லியை நோக்கிப் பயணத்தைத் தொடங்குகிறார் வீரமல்லு. மதம் மாறாத இந்துக்களுக்கு ஜிசியா வரியை நடைமுறைப்படுத்த தக்காணப் பீடபூமி நோக்கி வருகிறார் ஒளரங்கசீப். அடுத்த பாகத்திற்கான உபதலைப்பு, ‘போர்க்களம்’ ஆகும். அதற்கேற்ப ஒரு பிரளயத்தில் ஒளரங்கசீப்பும், வீரமல்லுவும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். அடுத்து?, என்ற கேள்வியுடன் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கும் விதத்தில் முதல் பாகத்தை முடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா, அடுத்த பாகத்திலாவது நாயகனை புகழ்வதை குறைத்துக் கொண்டு கதையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நாயகன் பவன் கல்யாண் அதிரடிக்கென்று வார் க்கப்பட்ட இந்த கதைக்குள் அற்புதமாக பொருந்தி போகிறார். தன்னை ஏமாற்றிய நாயகி நிதி அகர்வாலை கண்டுபிடிக்கும் இடத்திலும் மன்னித்து தன் நாயக பிம்பத்தை உயர்த்திப் பிடிக்கிறார். மல்யுத்த வீரர்களிடம் அசால்ட் டாக மோதுமிடத்தில் நிஜமாகவே வீர தீர கம்பீரம். நாயகி நிதி அகர்வாலுக்கு அதிக வேலை இல்லை. கொடுத்த வேலையை குறைவின்றி செய்து இருக்கிறார்.
ஒளரங்கசீப்பாக பாபி தியோல். இந்து மத விரோதி பாத்திரத்தை வன்மம் நிறைந்த கண்கள் வழியே கடத்துவது நிஜமாகவே அச்சம் தருகிறது. (ஆனால் ஒளரங்கசீப்பின் அரசவையில் தான், மற்ற மொகலாய மன்னர் ஆட்சியில் இருந்ததை விட அதிக இந்துக்கள் முக்கிய பதவி வகித்தனர் என்பது வரலாற்றுத் தரவுகளில் உள்ளது. மேலும், அவர்கள் யாரும் மதம் மாறியாக வேண்டும் என வற்புறுத்தப்படவுமில்லை).
சண்டை இயக்குநர்களான ராம் – லக்ஷ்மண் இணையின் மல்யுத்த சண்டைக் காட்சிகள், நிதி அகர்வாலின் கவர்ச்சி என ஆங்காங்கே காட்சிகளில் ரசிகர்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறார்கள். பாடல்களை தாளம் போட வைக்கிறார் மரகதமணி. பின்னணி இசை இன்னும் சிறப்பு..
இயக்கிய ஜோதி கிருஷ்ணா வைரத்தை கைப்பற்றும் வீர தீர பயணத்தில் மத துவேஷத்தை வெகுவாக குறைத்துக் கொண்டிருக்கலாம். இரண்டாம் பாகத்திலாவது அதை எதிர்பார்ப்போம்.
