யாதும் அறியான் – திரை விமர்சனம்
இரண்டு நண்பர்கள் தங்கள் காதலிகளுடன் வனப்பகுதியில் உள்ள காட்டேஜூக்கு வருகிறார்கள். நண்பர்களில் ஒருவரான நாயகன் தினேஷுக்கு தன் காதலி சுத்த கட்டுப்பெட்டியாக இருப்பது பிடிக்கவில்லை. இதை தங்கள் சக நண்பனிடம் புலம்ப, அந்த நண்பன் தான் இந்த டூரை ஏற்பாடு செய்கிறான். நண்பனின் காதலி ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ எந்த மனநிலை கொண்டவர். தினேஷின் காதலியோ எல்லாமே கல்யாணத்துக்கு அப்புறம் தான் என்பதில் உறுதியாக இருப்பவர்.
ஆனால் தினேஷோ இந்த டூரில் தனிமை இரவில் காதலியை எப்படியாவது அந்த விஷயத்தில் சரிக் கட்டி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
விடுதி அறையில் பிரானாவை தினேஷ் அந்த நோக்கத்துடன் நெருங்கும்போது காதலி அதற்கு சம்மதிக்க மறுக்க… கெஞ்சி கூத்தாடி கடைசியில் காதலியின் சம்மதம் கிடைத்து எல்லாம் முடிகிறது. ஆனால் தினேஷின் சந்தோஷம் நீடிக்க வில்லை. நடந்து முடிந்த நிகழ்வில் பிரானா உயிர் இழக்க, அதிர்ந்து போகிறார் தினேஷ். பக்கத்து அறையில் இருந்த தனது நண்பனையும் அவன் காதலியையும் அழைத்து விவரம் சொல்ல, நண்பன் போலீசுக்கு தெரிவிக்க முயல… தினேஷ் அதற்கு தடை போட, இப்போது நண்பர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள். இந்த அடியேனுக்குள் நண்பனின் காதலியும் உள்ளே வர… இதில் நண்பனோடு அவன் காதலியும் கொல்லப்படுகிறாள். விடிவதற்குள் மூன்று கொலை. பிணங்களுக்கு நடுவே நாயகன். இப்போது நாயகனி ன் அடுத்த கட்ட நிலை என்ன? என்பது பரபரப்பான கிளைமாக்ஸ்.
அறிமுக நாயகன் தினேஷுக்கு முதல் படம். முதல் பாதியில் அப்பாவி, மறு பாதியில் அடப்பாவி என்ற இரு வேறு நிலைகளையும் நடிப்பில் ரசித்து செய்திருக்கிறார்.
குறிப்பாக நடந்ததை தெரிந்து கொண்டு விட்ட விடுதி காவலாளி அப்பு க்குட்டியை அழைத்து ரூமை கிளீன் பண்ணச் சொல்கிற இடத்தில் அப்புகுட்டியை என்ன பண்ணித் தொலைப்பாரோ என்கிற பயம் நமக்கே வந்து விடுகிறது. அறிமுக நாயகனின் நடிப்பு முழுமையாக வெளிப்படுவது
இந்த இடத்தில் தான்.
நாயகியாக பிரானா , நாயகனின் நண்பராக ஆனந்த் பாண்டி, அவரது காதலியாக ஷ்யாமள், விடுதிப் பணியாளராக அப்புக்குட்டி என அனைவரும் தங்கள் பாத்திரங்களில் அற்புதமாக பொருந்தி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எல்.டி.யின் கேமரா வனப்பகுதியை அழகுற காட்சிப்படுத்தி இருக்கிறது.
இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் இசையில் பாடலும், பின்னணி இசையும் ஓகே.
காதல் பின்னணியில் ஒரு கதையை எடுத்துக் கொண்டு, வித்தியாசமான சைக்கோ திரில்லர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் என்.கோபி. 2024 பிற்பாதியில் தொடங்கும் கதை, 2026 ஆம் ஆண்டுக்கு வரும்போது அடுத்த முதல்வர் யாராக இருக்க வேண்டும் என்ற தனது ஆசையையும் சொல்லி விடுகிறார். படத்தைப் பொறுத்தவரை இது திணிப்பாகவே தெரிகிறது.
மொத்தத்தில், ‘யாதும் அறியான்’ திரில்லர் அறிவான். மற்றதை வரப்போகும் படங்களில் அறிவான்.
