திரை விமர்சனம்

கண்ணப்பா – திரை விமர்சனம்

சிறு வயது முதலே தெய்வ நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார் வேடுவ குலத்தில் பிறந்த திண்ணன். அவர் வசிக்கும் உடுமூரில் (இன்றைய காளஹஸ்தி) ஐந்து ஆதிக்குடிகள் வசிக்கின்றனர். அங்குள்ள மலையில் இருக்கும் வாயு லிங்கத்தை கவர்ந்து செல்ல, காளமுகி என்கிற இனக்குழுவின் தலைவன் உடுமூர் மீது படையெடுத்து வருகிறான். இந்த நேரத்தில் திண்ணனின் காதல் பிரச்சனையில் ஏற்பட்ட சிக்கலில் திண்ணனை ஊரை விட்டுத் தள்ளி வைக்கிறார், தலைவரும் அவனது தந்தையுமான நாகநாதன்.திண்ணன் பட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நேரத்தில் காளமுகி தலைவன் வாயு லிங்கத்தை கைப்பற்ற பெரும்படையுடன் வருகிறான். இந்த வீர தீர போரில் நாகநாதன் வீர மரணம் அடைகிறார்.இதன் பிறகு தந்தையை கொன்ற காள முகியை திண்ணன் எப்படி அழித்தார்? நாத்திகராக இருந்த அவர், எப்படி சிவபக்தராக மாறினார் என்பது பரபரப்புக்கு குறைவில்லாத கதைக்களம்.

63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கைக் கதையை, பிரம்மாண்ட பின்னணியில் திரைப்படுத்தி இருக்கிறார்கள்.திண்ணனாக நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சு, அந்த கேரக்டருக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து இருக்கிறார். கடவுளே இல்லை என்று வாதம் செய்யும் திண்ணன் நடிப்பில் ஒரு ரகம். காட்டில் ப்ரீத்தி முகுந்தனை கண்ட மாத்திரத்தில் காதலில் பொங்கி வழியும் திண்ணன் இன்னொரு ரகம். தந்தையை கொன்றவனை கொன்ற பிறகே தந்தையின் இறுதிச்சடங்கு என்று சொல்லி ஆவேசத்துடன் போர்க்களம் புகும் திண்ணன் இன்னொரு ரகம். தனக்குள் மாற்றம் நேர்ந்த பிறகு சிவய் யா சிவய்யா உருகும் வெளிக்காட்டும் திண்ணன் முழுமையான பக்திப் பழம்.

வாயு லிங்கத்துக்கு பூஜை செய்யும் மகாதேவ சாஸ்திரி யாக மோகன் பாபு, ருத்ரனாக வந்து சிவசக்தியை உணர வைக்கும் பிரபாஸ், அர்ஜுனனுடன் மோதி பாடம் புகட்டும் கிராதாவாக மோகன்லால், திண்ணனின் காதலியாக ப்ரீத்தி முகுந்தன், பரமசிவன் பார்வதியாக அக்ஷய்குமார்- காஜல் அகர்வால், பட்டிகளின் தலைவர்களாக மதுபாலா, சம்பத் என எல்லாருமே பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.

ஆதிக் குடிகள் வாழும் உடுமூராக சுவிட்சர்லாந்தின் நிலப்பரப்புகளை பிரம்மாண்டமாக கொண்டு வந்துள்ள ஷெல்டன்ஷாவின் கேமராவுக்கு ஸ்பெஷல் பாராட்டு. ஸ்டீபன் தேவசியின் இசை நெஞ்சுக்குள் சுகராகம்.கண்ணப்பர் என்ற சிவபக்தரின் பக்தியின் ஆழத்தை வெளிக்காட்டும் படமாக இருந்தாலும், பக்தி என்ற பெயரில் நரபலி உள்ளிட்ட மூடப்பழக்கங்களில் சிக்கி யிருப்பவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் காட்சிகளையும் வைத்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறார், இயக்குனர் முகேஷ் குமார் சிங்.
– கண்ணப்பா படத்துக்கு படம். பக்திக்கு பக்தி.