மார்கன் – திரை விமர்சனம்
க்ரைம் ஃபார்முலா கதைகள் எப்போதுமே சரியான விதத்தில் சொல்லப்பட்டால் வெற்றி நிச்சயம். ஒரு ஊசி போட்டால் உடல் கறுப்பாகி இறக்கும் வேதியியல் ஃபார்முலாவை கண்டு பிடித்த வில்லன், அதை பழி வாங்க பயன்படுத்துகிறார். இந்த விஷ ஊசியால் உயிர் இழக்கும் ரம்யாவின் கொலையில் இருந்து படம் தொடங்குகிறது. தனது மகள் கொல்லப்பட்ட சாயலிலேயே கொல்லப்பட்டிருக்கும் ரம்யாவின் கொலை வழக்கைத் தனிப்பட்ட முறையில் விசாரிக்க மும்பையில் இருந்து சென்னை வருகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி விஜய் ஆண்டனி. அவரால் கொலையாளியை நெருங்க முடிந்ததா? . அந்த கொடூர கொலையாளி யார்? என்பதை புதிய கோணத்தில் சொல்லி இருக்கிறார்கள்.
கொலைகாரனால் துரத்தப்படுவதாகக் காட்டப்படும் வெண்ணிலா பாத்திரத்தில் கனிமொழி நடிப்பு மிகவும் சிறப்பு. விசாரணைக்கு உதவும் காவல்துறை அதிகாரிகளாக மகாநதி சங்கர், பிரிகிடா, SDAT ஊழியராக வரும் அம்ஜத் கான் பொருத்தமான பாத்திரத்தேர்வில் தங்கள் காட்சிகளை உயிரோட்டமாக்குகிறார்கள்.
ஓரிரு காட்சிகளே என்றாலும் சீனியர் போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி நடிப்பில் காக்கிக்கே உரிய கம்பீரம் தெறி க்கிறது.
தண்ணீருக்குள் மூழ்கினால் இன்னொரு உலகம் போய்வரும் சித்தர் பிரதிநிதியாக அஜய் தீஷன் அறிமுக படத்திலேயே கவனிக்க வைக்கும் நடிப்பை தந்து இருக்கிறார். சிறுவயதிலேயே கஞ்சம்பட்டியில் சித்தர் அருள் பெற்றவராகக் காட்டப்படும் தமிழறிவு எனும் கதாபாத்திரம் இவரது நடிப்பில் சிறப்பு பெறுகிறது.
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வந்தாலும், விஜய் ஆண்டனி அடக்கியே வாசித்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் இன்னொரு பெரும் பலம். ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவின் கேமரா திரில்லர் கதைக்கு ஏற்ப பணித்திருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் லியோ ஜான் பால், சித்தர்கள் பின்னணியில் ஒரு கிரைம் கதையை சித்தர் மசாலாவில் தோய்த்து சுவாரசியமாக சொல்ல முயன்று இருக்கிறார். பிற்பகுதியில் சிற்சில இடங்களில் தொய்வுகள் இருந்தாலும் கதை சொன்ன விதத்துக்காக வரவேற்கலாம்.
