ராஜபுத்திரன் – திரை விமர்சனம்
தென் தமிழ் நாட்டில் ராமநாதபுரம் வட் டாரத்தில் 90களின் காலகட்டத்தில் நடக்கும் ஒரு கிராமத்து தந்தைக்கும் மகனுக்குமான பாசக் கதை. அப்பா செல்லையா தனது மகன் பட்டா மீது உயிரையே வைத்திருக்கிறார். மகனுக்கும் அப்பா தான் சகலமும். தந்தையை பெயர் சொல்லி அழைத்து மகிழும் அளவுக்கு அப்படி ஒரு அன்பு. அப்படி ஒரு அன்யோன்யம். சரியாகப் படிக்காத பட்டா குடும்ப கடனை அடைப்பதற்காக சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்யும் லிங்கா கும்பலிடம் வேலையில் சேர்கிறான். வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பது அவன் வேலை. ஒருநாள் அவன் கொண்டு செல்லும் பணம் திருடு போய் விட, அதற்கு ஈடாக தனது வீட்டு நிலப் பத்திரத்தை செல்லையா கொடுக்கிறார்.
ஒரு கட்டத்தில் பணத்தை கொடுத்து அனுப்புகிறவர்களே ஆளை வைத்து திருடுவது தெரியவர… பட்டா எடுக்கும் அதிரடி நடவடிக்கை லிங்கா அண்ட் கோவை சூடாக்க..
பட்டாவை குடும்பத்தோடு போட்டுத்தள்ள முடிவு செய்கிறான்.
இதை அறியாத பட்டா, வெளிநாட்டு வேலைக்கு நண்பனுடன் புறப்படுகிறான். இது தெரிய வந்த லிங்கா பட்டாவை காலி செய்ய முடிவு செய்கிறான்.
முடிவு அதிர்ச்சி கிளைமாக்ஸ்.

வில்லன் கிணற்றுக்குள் நீந்தி குளிக்கும் தொடக்க காட்சியிலேயே படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். செல்லையா என்ற அந்தப் பாசமிகு கிராமத்து அப்பா கதாபாத்திரத்தில் பிரபு தனது அனுபவ நடிப்பை வழங்கி அந்த கேரக்டருக்கு சிறப்பு சேர்த்து விடுகிறார். வெள்ளந்தியான கேரக்டரில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுமையான கதாபாத்திரத்தில் பிரபுவை பார்க்க முடிகிறது. மகன் மீது பிரபு காட்டும் பாசத்தில் அன்புத் தந்தையாக நெஞ்சில் நிற்கிறார். குத்தாட்டம், சண்டைக் காட்சி என எல்லாவற்றிலும் தன்னை சுறுசுறுவென வைத்துக்கொண்டு காட்சிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்.
எட்டு தோட்டாக்கள் வெற்றியா இது… பட்டாவாக பாசமிகு மகனாக கிராமத்து மண்வாசனையுடன் கூடிய இளைஞனை நடிப்பில் பிரதிபலிக்கிறார். அவருக்கும் நாயகி கிருஷ்ண பிரியாவுக்குமான காதல் ஒரு அழகான கிராமத்து அத்தியாயம்.
கதாநாயகி கிருஷ்ண பிரியா அறிமுக நாயகி போல் இல்லாமல் நடிப்பில்அத்தனை இயல்பு.
ஆவேசம் வரும்போது வேலு நாச்சியாராக சீறும் இடத்தில் தமிழ் திரைக்கு கிடைத்த ஒரு நல்ல நடிகையாக அவரை உணர முடிகிறது. வட்டி வசூலிக்கும் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் பழைய பாட்டுகளைப் பாடி வில்லத்தனம் செய்ய, சட்ட விரோத பண பரிமாற்றம் செய்யும் லிங்காவாக கன்னட நடிகர் கோமல் குமார் வில்லத்தனத்தில் புது மேனரிசம் காட்டுகிறார். பிரபுவின் நண்பராக இமான் அண்ணாச்சி, வெற்றியின் நண்பராக தங்கதுரை அவ்வப்போது நடிப்பில் சிரிப்பை கிளப்புகிறார்கள் லிவிங்ஸ்டன் ஆர்.வி.உதயகுமார் இன்னொரு வில்ல கூட்டணி.
புது இயக்குநர் மகா கந்தன் கிராமத்து தந்தை மகன் பாசப் பின்னணியில் ஒரு நல்ல திரைக்கதையுடன் களம் இறங்கி ஜெயித்திருக்கிறார். கிளைமாக்சில் பிரபுவின் சந்தோஷம் நமக்கு வலி ஏற்படுத்துகிறதே, அதுதான் படத்தின் வெற்றி.
நௌபெல் ராஜாவின் இசையும் ஆலிவர் டெனியின் ஒளிப்பதிவும் இந்த கிராமத்து கதையின் இரு வேறு கூடுதல் பில்லர்கள்.

