வேம்பு – திரை விமர்சனம்
சோதனைகளை சாதனையாக மாற்றும் பெண்ணே இந்த வேம்பு.
பள்ளிப் பருவம் தொட்டே சிலம்பம் கற்று வரும் வேம்புவுக்கு மாநில அளவில் ஸ்டேட் லெவல் சாம்பியன் ஆக வேண்டும்…அதன் மூலம் அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்பது லட்சியம். அதற்காக பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் சிலம்பம் தான் அவள் உயிர் மூச்சாக இருக்கிறது.
சிலம்பத்தில் சாதித்து அதன் பிறகு தன் மீது அன்பு பாராட்டும் மாமன் மகனை கரம் பற்றுவது என்பது அவள் திட்டம்.
ஆனால் பெண்கள் விஷயத்தில் ஊரில் நடக்கும் சில அசம்பாவிதங்கள் அவள் பெற்றோரை பயமுறுத்த, அவள் விரும்பிய அதே மாமன் மகனுக்கு உடனடியாக மணமுடித்து வைக்கின்றனர். திடீர் திருமணம் தனது சிலம்ப லட்சியத்துக்கு இடையூறாக வந்து விடுமோ என்று பயப்படும் வேம்பு தன் கணவனிடம் இது பற்றி பேசுகிறாள். அவனும் சிலம்பத்தில் சாதிக்கும் உன் லட்சியத்துக்கு நம் இல்லற வாழ்க்கை ஒருபோதும் தடையாக இருக்காது என்று உறுதி கூறுகிறான்.
ஆனால் சோதனையாக திருமணமான அன்றே விபத்தில் சிக்கி கண் பார்வையை இழக்கிறான் கணவன்.
கணவன் வைத்திருந்த போட்டோ ஸ்டூடியோவுக்கு பொறுப்பேற்பவள், குடும்ப செலவை அதன் மூலம் சமாளிக்கிறாள். இது போக கிடைக்கும் நேரத்தில் ஊரில் உள்ள பெண்களுக்கு சிலம்பமும் கற்றுத் தருகிறாள்.
குடும்ப சூழலை எதிர்கொண்டு சிலம்பத்தில் தனது லட்சியத்தை அடைந்தாளா? கணவனின் கண் பார்வை மீண்டும் கிடைத்ததா? என்பது கிளைமாக்ஸ்.
வேம்பு ஆக ஷீலா ராஜ்குமார். திருமணத்துக்கு பிறகு தனது சிலம்பக் கனவு ஏக்கம், பார்வையற்ற கணவனிடம் பரிவு என ஒவ்வொரு ஏரியாவிலும் நடிப்பில் பிரித்து மேய்ந்து இருக்கிறார். தந்தைக்கும் மகளுக்குமான அந்த அன்னியோன்ய அன்பு நிஜமாகவே மகத்தானது. சிலம்பம் அவர் கையில் சுற்றும் அழகு காணக் கண் கோடி வேண்டும். காதல் கணவராக ஹரிகிருஷ்ணன். கிராமத்து எதார்த்த மனிதனாக வாழ்ந்திருக்கிறார். பார்வையற்ற நிலையிலும் மனைவிக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் புருஷனாக நடிப்பில் வாழ்ந்திருக்கிறார்.
நாயகியின் தந்தையாக வரும் கர்ணன், மகள் மீதான பாசப்பெருக்கில் ஒரு இயல்பான கிராமத்து தந்தையை நடிப்பில் வார்த்து இருக்கிறார். நாயகி அம்மாவாக ஜானகி, எம்.எல்.ஏ.வாக மாரிமுத்து மனதில் நிற்கிறார்கள்.
ஏ.குமரனின் ஒளிப்பதிவும் மணிகண்டன் முரளியின் இசையும் ஜஸ்டின் பிரபுவின் இயக்கமும் இந்த வேம்புவை வேர்களாக தாங்கி நிற்கின்றன.
பெண்கள் தற்காப்பு கலை கற்றுக் கொள்வது தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள உதவும் என்ற கருத்தையும் கதைப் போக்கில் சொன்ன இயக்குனரை ரெட் கார்ப்பெட் விரித்து வரவேற்கலாம்.
இந்த வேம்பு பெண்களின் தன்னம்பிக்கையை உயர்த்திப் பிடித்த விதத்தில் கரும்பு.
