ஜோரா கைய தட்டுங்க – திரைவிமர்சனம்
யோகி பாபு படம் என்றால் காமெடிக்கு உத்தரவாதம் இருக்கும். சில படங்களில் குணச்சித்திரவேடங்களிலும் கலக்குவார். இந்த இரு வேறு நிலைகளையும் தவிர்த்து இந்த படத்தில் யோகி பாபு ஏற்று இருப்பது பழிவாங்கும் கேரக்டர் என்பது தான் படத்தின் ஸ்பெஷல். கதை இதுதான். தான் உண்டு தன் மேஜிக் உண்டு என்று வாழ்ந்து வருபவர் யோகி பாபு. மேஜிக் மேன் என்பதால் ஆங்காங்கே இருந்து வரும் சில அழைப்புகளை ஏற்று அதில் வரும் வருமானம் மூலம் ஜீவனம் நடத்துபவர்.
ஆனால் அவர் மீதும் போட்டி பொறாமை கொண்ட ஆட்கள் ஏதேனும் காரணம் சொல்லி அவர் நிகழ்ச்சியில் குழப்பம் விளைவித்து வந்தார்கள். ஒருமுறை யோகி பாபுவின் மேஜிக்கால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி சீரியஸ் நிலைமைக்கு போக, நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அடித்து துவைத்தது போக, காவல் நிலையத்திலும் தொடர்ச்சியாக அடி உதை. ஆனால் அந்த சிறுமி பிழைத்துக் கொண்டதால் கேசில் இருந்து இவர் தப்புகிறார்.
ஆனாலும் பொறாமைக்காரர்கள் இவரை விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் உள்ளூர் ரவுடிகள் இவரை தாக்கியதில் ஒரு கை பலமாக பாதிக்கப்பட, மேஜிக் செய்வதால் ஏற்படும் வருமானம் நின்று போகிறது.இந்த நேரத்தில் அந்த ஊர் சிறுமி ஒருத்தி வன் புணர்வுக்கு ஆளாகி கொல்லப்பட்ட நிலையில் மேஜிக் மேனும் தலைமறைவாகி விடுகிறார். இந்த நேரத்தில் அவர் ஏன் தலைமறைவானார்?ஆனால் இதற்குப் பிறகு அவருக்கு ஏற்கனவே தொல்லை கொடுத்த இரண்டு ரவுடிகள் எந்தவித தடயமும் இன்றி அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள்.
இதனால் தலையைப் பிய் த்துக் கொள்ளும் போலீஸ் மேஜிக் மேனை தேடி பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.மேஜிக் மேன் கிடைத்தாரா? என்பது கிளைமாக்ஸ்.
மேஜிக் மேன் ஆக வரும் யோகி பாபுவுக்கு டைரக்டர் சொன்னதை செய்ய வேண்டிய கட்டாயமோ என்னவோ, அவரது ஸ்டைல் நடிப்பு படத்தில் எங்குமே காணப்படவில்லை. அதாகப்பட்டது அந்த கேரக்டராகவே அவரை வாழ வைத்திருக்கிறார் இயக்குனர் என்று நம்புவோமாக.
ரவுடிகள் வீசிய பாட்டில் தலையில் பட்டு ரத்தம் சொட்டிய நிலையில் நடந்து போகும் யோகி பாபு நடிப்பு இதுவரை பார்த்திராத புதிய கோணம்.யோகிபாபுவை உள்ளூர விரும்பும் கேரக்டரில் சாந்தி ராவ் வருகிறார். யோகி பாவை தேடி அடிக்கடி அவரது வீட்டுக்கு ஸ்கூட்டரில் வருகிறார். போகிறார். மறுபடியும் வருகிறார் போகிறார். அவரை விரும்புகிறாயா என்று தோழி கேட்டால் சிரிக்கிறார். உன் காதலை அவர் ஏற்றுக் கொண்டாரா என்று தோழி கேட்டால் தெரியாது என்று சொல்லியபடி அதற்கும் சிரிக்கிறார்.
உயர் போலீஸ் அதிகாரியாக ஹரிஷ் பெராடி கம்பீரம். வில்லன்களில் அந்த சீனியர் ரவுடி மட்டும் கவனிக்க வைக்கிறார்.ஒளிப்பதிவு உயர்தரம் அந்த மலைப்பிரதேசம் மது அம்பாட்டின் கேமராவில் இன்னும் அழகுற ஜொலிக்கிறது.
வினிஷ் மில்லேனியம் இயக்கியிருக்கிறார். இயல்பாக கதை சொல்கிறேன் என்ற பெயரில் படத்தை தேர் போல நகர்த்தி இருக்கிறார். யோகி பாபு தனது மேஜிக் உபகரணங்கள் மூலம் கொலைகளை நிகழ்த்துகிற இடம் மட்டும் புத்திசாலித்தனமாக இருக்கிறது. முடிவில் காதலிக்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் இடமும் ரசிக்கலாம். ஒருவேளை இரண்டாம் பாகத்தில் யோகி பாபுவின் அதிரடி ஆட்டங்கள் ஆரம்பமாகலாம். தலைப்புக்காக ஒரு முறை கை தட்டலாம்.