திரை விமர்சனம்

தொடரும் – திரை விமர்சனம்

ஒரு அப்பாவி மனிதனை காலமும் சூழலும் அடப்பாவி ஆக்கிப் பார்க்கிற கதை.
மனைவி, மகன், மகள் என அழகான சின்ன குடும்பம் டாக்ஸி டிரைவர் சண்முகத்துக்கு. குடும்பத்தை விட அவர் அதிகமாக நேசிப்பது அவரது காரை.இது எந்த அளவுக்கு என்றால், ஒரு முறை மகனும் தோழர்களும் இவருக்கு தெரியாமல் டாக்ஸியை எடுத்துச் சென்று லேசான விபத்து ஏற்படுத்திய போது மகனையே அடிக்கும் அளவிற்கு டாக்ஸி மீது அப்படியொரு பிரியம்சினிமாவில் பைட்டராக இருந்த காலகட்டத்தில் அவரது குருநாதராக இருந்த பாரதிராஜா தான் இந்த காரை அவருக்கு அன்பளிப்பாக வழங்கியவர்.கார் மெக்கானிக் செட்டில் இருக்கும் நேரம் பார்த்து குரு இறந்து விட்டார் என்று தகவல் வர,சென்னை போகிறார்.

திரும்பி வருவதற்குள் ஒர்க்ஷாப்பில் வேலைக்காக விடப்பட்டிருந்த அவரது டாக்ஸி இப்போது போலீஸ் நிலையத்தில் இருக்கிறது. கார் மெக்கானிக் காரில் கஞ்சா கடத்தினான் என்பதாக குற்றச்சாட்டு. அந்த மெக்கானிக் தலைமறைவாகி விட்டதால் சண்முகம் காரை தர எஸ்.ஐ. பினு பப்பு மறுத்து விடுகிறார்.
தினமும் காருக்காக ஸ்டேஷன் வந்து போகும் சண்முகத்தை பார்த்த இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வர்மா மோகன்லாலிடம் அவரது டாக்ஸியை ஒப்படைக்கிறார்.
அதே சமயம் அன்றைய தினம் இரவு, தங்களது ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸ்காரர் ஒருவரின் தங்கை திருமண நிகழ்வுக்கு தங்களை அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறார். வழக்கு எதுவும் இன்றி காரை திருப்பிக் கொடுத்தவர் ஆயிற்றே என்ற நன்றி உணர்வில் அந்தப் பயணத்துக்கு உடன்படுகிறார் மோகன்லால்.
ஆனால் அந்தப் பயணம் அவரது வாழ்க்கையை எப்படி தலைகீழாக புரட்டிப் போடுகிறது என்பது சஸ்பென்ஸ் பிளஸ் திகில் திரைக்கதை.

த்ரிஷ்யம் படத்திற்குப் பிறகு, அது மாதிரியான கதைக் களத்தில் மீண்டும் மோகன்லாலை பார்க்க முடிகிறது. குடும்பத்திற்காக வாழ்வது, குடும்பத்தின் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்வது என அப்பாவியாக இருக்கும் மோகன்லால், காணாமல் போன மகனை பிணமாக பார்த்த பின்பு அது போலீஸ் செய்த திட்டமிட்ட படுகொலை என்பது தெரிய வந்ததும் அவர் எடுக்கும் விஸ்வரூபம் இருக்கிறதே, அப்பப்பா…

இன்ஸ்பெக்டர், எஸ்ஐ. இருவரிடமும் அவர் மாட்டிக்கொண்டு தவித்தபடி கார் ஓட்டும் காட்சிகளில் அவரது அந்த தவிப்பை தகிப்பாக உணர முடிகிறது. மகன் உயிரோடு இல்லை என்று தெரிய வந்ததும் ஷவர் குளியலில் அவர் கதறுவது நம் மனதை பிசைகிறது.

நீண்ட நாளைக்கு பிறகு மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஷோபனா. தன்னை சித்ரவதை செய்து கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர், தனது கணவரின் போன் உரையாடலுக்கு பிறகு அதிர்ச்சியாக, அப்போது இன்ஸ்பெக்டரை கெத்தாய் ஒரு பார்வை பார்க்கிறாரே… அது ஷோபனா.

படம் முழுவதும் வில்ல ராஜாங்கமே நடத்தி இருக்கிறார்கள் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பிரகாஷ் வர்மாவும் எஸ் ஐ யாக வரும் வினு அப்புவும். அதிலும் இன்ஸ்பெக்டராக வரும் பிரகாஷ் வர்மா புன்னகை முகமும் சைலன்ட் கில்லருமாய் வில்லத் தனத்தில் தனி ராஜாங்கமே நடத்தி இருக்கிறார்.

இயக்குனர் பாரதிராஜாவும், நடிகர் இளவரசும் வந்து போகும் சில காட்சிகள் நிஜமாகவே இன்ப அதிர்ச்சி. பாரதிராஜாவுக்கும் மோகன்லாலுக்குமான மாஸ்டர்-சிஷ்யன் உறவை சுருங்கச் சொல்லினும் அழகு. அழகு. அத்தனை அழகு.மோகன்லாலின் மகன், மகளாக நடித்திருப்பவர்கள், அவரது நண்பர்களாக வரும் மணியம் பிள்ளை ராஜு உள்ளிட்டோர் கதை மாந்தர்களாக வந்து கவனம் ஈர்க்கிறார்கள். இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை மூலம் கதையின் அழுத்தத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து விடுகிறார். அடர்ந்த காட்டுக்குள் மோகன்லால் மேற்கொள்ளும் அந்த டாக்சி பயணத்தில் நம்முள் ஏற்படும் திகிலுக்கு சொந்தக் காரர் ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார்.

படத்தின் திருப்புமுனை காட்சியான நிலச்சரிவு காட்சி தொடங்கி முடிவு வரை கொஞ்சமும் வேகம் குறையாமல் இயக்கி இருக்கிறார் தருண் மூர்த்தி. கிளைமாக்ஸ்சில் அத்தனை மர்ம முடிச்சுகளுக்கும் விடை தரும் இடம் நிஜமாகவே சூப்பர்.