கேங்கர்ஸ் – திரை விமர்சனம்
நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சுந்தர் சி-, வடிவேலு கூட்டணி காமெடிக் கொடி பிடித்திருக்கும் படம். அரசுப் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போக, அந்தப் பள்ளி ஆசிரியை கேத்ரின் தெரேசா கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கிறார் புகாரின் பேரில் அண்டர் கவர் போலீஸ் அதிகாரி ஒருவரை காவல்துறை ஆசிரியர் என்ற போர்வையில் அந்த பள்ளிக்கு அனுப்பி வைக்கிறது. இதே சமயத்தில் சுந்தர் சி. அந்த பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியராக வருகிறார்.
உள்ளூர் அரசியல்வாதியான மைம் கோபி இந்தப் பள்ளியின் தாளாளர் என்ற முறையில் தனது தம்பி அருள்தாசுடன் சேர்ந்து பள்ளியை சமூக விரோத செயலுக்காக பயன்படுத்துகிறார். இதனால் ஆத்திரமடையும் சுந்தர். சி, அடையாளம் தெரியாதபடி தன்னை மறைத்து வேஷம் போட்டுக் கொண்டு அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். இதைப் பார்த்த கேத்ரின் தெரசா, சுந்தர் சி தான் அந்த அண்டர் கவர் போலீஸ் என நினைக்கிறார்.
இந்த நிலையில் மாணவி காணாமல் போனதற்கு மைம் கோபி அண்ணன் மகன் தான் காரணம் என தெரிந்து கொள்ளும் சுந்தர் சி, அவரை கடுமையாக தாக்க… அவர் கோமாவுக்கு போக… தகவல் தெரிந்து வரும் தந்தை ஹரீஷ் பெராடி மகனை இந்த நிலைக்கு ஆளாக்கிய சுந்தர் சி. யை வெறியுடன் தேடுகிறார்.
உண்மையில் சுந்தர் சி.க்கும், ஹரீஷ் பெராடிக்கும் என்ன தொடர்பு? இருவரும் சந்திக்கும்போது என்ன நடந்தது?
என்பது படத்தின் மீதி க் கதை.கதையைக் கேட்கும் போது அதிரடி தூள் பறக்கும் என்று எண்ணத் தோன்றும். உண்மையில் அதிரடி பொறி பறக்கிறது அதற்கு நிகராக காமெடியும் அரங்கை சிரிப்பால் நிறைக் கிறது. உடற்பயிற்சி ஆசிரியர் சுந்தர் சி. எதிரிகளை அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும் இன்னொரு உடற்பயிற்சி ஆசிரியர் வடிவேலு மீது அந்தப் பழி வந்து சேர்வதெல்லாம் படத்தின் அதிரிபுதிரி காமெடி ஆகி விடுகிறது.
சிறு இடைவெளி விட்டு மீண்டும் அதிரடியை கையில் எடுத்திருக்கிறார் நாயகன் சுந்தர் சி. சண்டைக் காட்சிகளில் நிஜமாகவே அனல் தெரிக்கிறது. மனைவி வாணி போஜனுடனான பிளாஷ் பேக்கில் பாசமிகு கணவனாக நடிப்பில் பரிமளிக்கிறார். மனைவியாக வரும் வாணி போஜன் நம்பிக்கை துரோகத்துக்கு பலியாகும் இடத்தில் கண்களை குள மாக்கி விடுகிறார்.
உடற்பயிற்சி ஆசிரியராக வரும் வடிவேலு, எதிரிகளிடம் இசகுபிசகாக சிக்கிக் கொள்ளும் இடங்களில் எல்லாம் சிரித்து சிரித்து வயிறு சுளுக்கி கொள்கிறது. தியேட்டர் சம்பந்தப்பட்ட அந்த கிளைமாக்ஸில் கிராமத்து பாட்டி கெட்டப்பில் வடிவேலு தன் மருமகளுக்கு நீதி கேட்கும் காட்சி அரங்கத்தை சிரிப்பால் நிரப்பி வைக்கிறது.
அநியாயத்தை தட்டிக் கேட்கும் பள்ளி ஆசிரியையாக கேத்ரின் தெரசா, நடிப்பில் கம்பீர நடை போடுகிறார். ஒரு பாட்டுக்கு கிளாமர் ஆட்டம் போட்டு ரசிக மகா ஜனங்களை குதூகலிக்கவும் வைக்கிறார். வில்லன்களாக மைம் கோபி, அருள்தாஸ், ஹரிஷ் பெராடி காளை தனித்து தெரிகிறார்கள். சந்தான பாரதி, டெலி போன்ராஜ், முனீஸ் காந்த், பக்ஸ், விச்சு சுந்தர் சி வடிவேலு கூட்டணியில் இணைந்து சிரிக்க வைக்கிறார்கள். சத்யாவின் இசையில் பாடல்கள் ரசனை. பின்னணி இசை ரகளை.
எழுதி இயக்கியிருக்கும் சுந்தர்.சி, தனது வழக்கமான கஅதிரடி பாணியில் காமெடி ஆட்டம் பாமை வெடிக்க விட்டிருக்கிறார்.
தியேட்டர் சம்பந்தப்பட்ட அந்த கிளைமாக்ஸ்சில் சிரிப்பில் தியேட்டர் குலுங்கிப் போகிறது.
வின்னர் கூட்டணி இப்போதும் வின்னர்ஸ்.
