திரை விமர்சனம்

சச்சின் – திரை விமர்சனம்

கண்டதும் காதல் என்பதில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாத நாயகி ஜெனிலியா. அவ்வப்போது அவரை அன்பால் ஆகர்ஷித்து காதலை அவர் வாயாலே சொல்ல வைக்க முயல்பவர் நாயகன் விஜய்.கல்லூரியில் படிக்கும் இந்த இருவருக்குள்ளும் காதல் அவ்வப்போது கண்ணாமூச்சி காட்டிக் கொண்டே இருக்க… கடைசியோ கடைசியாக இன்னும் ஒரு மாதத்துக்குள் நீயாக என்னிடம் காதல் சொல்ல வேண்டும். அப்படி சொல்லவில்லை என்றால் அதன் பின் நீ யாரோ நான் யாரோ… என்கிறார் விஜய்.

30 நாட்களில் ஜெனிலியா விஜய் யிடம் காதலை சொன்னாரா என்பது சொட்ட சொட்ட இதயம் நனைக்கும் காதல் கதை.2005 ஆம் ஆண்டு வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடிய இப்படத்தில் விஜய்யை ஸ்டைலிஷாக ரசிக்க முடிகிறது. படம் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் துறுதுறு விஜய் ரொம்பவே ரசிக்க வைக்கிறார்.

ஜெனிலியா மட்டுமென்ன… அவர் சிரித்தாலும் அழகு கோபத்தில் உம் மென்றிருந்தாலும் அழகு.சந்தானம், வடிவேலு, பாலாஜி, மயில்சாமி, சாம்ஸ் வகையறாக்கள் காமெடி இப்போதும் வயிற்றை புண்ணாக்கி விடுகின்றன.

ஓரிரு காட்சிகளில் வந்தாலும் நெஞ்சில் அனல் மூட்டிப் போகிறார் பிபாஷா பாசு.
விஜய்யின் அப்பாவாக ஒரு காட்சியில் வந்தாலும் ரகுவரன், நிஜமாகவே இன்ப அதிர்ச்சி.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் இளமையின்
வார்ப்பாய் ரசிக்க வைக்கின்றன.

ஒளிப்பதிவாளர் ஜீவாவின் கேமரா விஜய், ஜெனிலியா இருவரையும் இன்னும் அழகாக்கி தருகிறது.எழுதி இயக்கியிருக்கும் ஜான் மகேந்திரன், படம் முழுக்க சொல்லி இருப்பது இளமைத் துடிப்புடன் கூடிய ஒரு அழகான காதலை. அதனாலேயே 19 வருடத்திற்கு முன்பு வந்த இந்த படம்ரீரிலிசிலும் 19 ஆகவே இளமை சொட்டுகிறது.

இந்த சச்சின் அப்போது அடித்ததும் சிக்ஸர். இப்போது அடிப்பதும் சிக்ஸர்.