Armour of god – திரை விமர்சனம்
அமெரிக்காவை ஒட்டியுள்ள பகுதிகளில் அகதிகளாக வாழும் கூட்டத்தில் ஒருவன் சிறுவன் ஆரி லோபஸ், கால் பந்தாட்ட கனவுகளோடு அமெரிக்க நகரத்திற்கு வரும் இந்த சிறுவன் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் கொத்தடிமையாக்கப்படுகிறார்.
அவரைப் போல் அந்த இடத்தில் பல சிறுவர்கள் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள். அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைக்கும் ஆரி லோபஸின் வலி மிகுந்த வாழ்க்கையையும், அதில் இருந்து மீள்வவதற்கான அவரது முயற்சிகளையும் யதார்த்தமாகவும் அதே சமயம் சினிமா மொழியின் மூலம் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் மையப் புள்ளியான சிறுவன் ஆரி லோபஸ், வசனமே பேசாமல் தன் கண்கள் மூலமாக பல உணர்வுகளை நம்மிடம் கடத்தி விடுகிறார். அடிமைச் சிறையில் இருந்து தப்பிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளில் அரங்கில் அப்படி ஒரு அமைதி.
அமெரிக்கா என்றால் கோடிகளில் குளிக்கும் பணக்காரர்கள், ஆடம்பர வாழ்க்கை, அதீத சந்தோஷம் மட்டுமல்ல. அங்கேயும், லஞ்ச லாவண்யம், குற்ற செயல்கள் இருக்கத்தான் செய்கிறது என்பதை தைரியமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர்.இந்த படத்தின் மூலம் அமெரிக்காவின் கறுப்பு பக்கங்களை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் தயாரிப்பாளர் ரூஃபஸ் பார்க்கரை அதற்காகவே உச்சி முகரலாம்.