திரை விமர்சனம்

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் – திரை விமர்சனம்

பிரபல எஸ்டேட் தொழிலதிபரின் மேலாளராக இருப்பவர் ஸ்ரீகாந்த். அதோடு அந்த தொழிலதிபரின் குதிரை பண்ணையில் குதிரைகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு பணக்கார பெண்ணை மணமுடித்து செட்டில் ஆவது லட்சியம்.
கோடீஸ்வரர் சச்சு வீட்டில் அவரை பராமரிக்கும் பணிப்பெண்ணாக இருப்பவர் நாயகி பூஜிதா. இவருக்கும் நாயகன் போலவே கோடீஸ்வரன் ஒருவனை கரம் பிடித்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்பது லட்சியம்.
இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் சந்தித்துக் கொள்ளும் போது வசதி படைத்தவர்களாக தங்களை காட்டிக் கொள்கிறார்கள். தொழிலதிபரிடம் உதவியாளராக இருக்கும் ஸ்ரீகாந்த், தன்னை அந்த தொழிலதிபராகவே காட்டிக் கொள்கிறார். வீட்டு வேலை பார்க்கும் பூஜிதா தன்னை அந்த பங்களாவின் உரிமையாளர் என்கிறார்.

இருவருமே கோடீஸ்வரர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட உடனே அவர்கள் காதலாகிறார்கள். இந்த காதல், திருமணம் வரை வருவதற்குள் அவர்கள் குட்டு உடைந்து போகிறது. அப்படியே காதலும் உடைந்து நொறுங்குகிறது.
ஒரு கோடீஸ்வரனை காதலித்து மணந்து பணக்காரியாக உன் முன் வருவேன் என்று பூஜிதாவும், ‘நான் மட்டுமென்ன… கோடீஸ்வர பெண்ணை கரெக்ட் பண்ணி கோடீஸ்வரனாக உன் முன் வலம் வருவேன்’ என்று ஸ்ரீகாந்த்தும் சவால் விட…
அடுத்து நடப்பதெல்லாம் அதிசயம். விளம்பர நிறுவனத்தில் வேலைக்கு போன பூஜிதாவை ‘என் மனைவியாகி விடு’ என்கிறார், கோடீஸ்வர தொழிலதிபர்.

நடிக்க வாய்ப்பு கேட்டு போய் ஹீரோவாக தேர்வான ஸ்ரீகாந்தை அந்த பட முதலாளியின் மகள் நிராகரிக்கிறார். அதிர்ந்து போன ஸ்ரீகாந்த்திடம், ‘இனி நீங்கள் என் ஹீரோ’ என்கிறாள் அந்த பெண்.
இந்த இரண்டு பெரிய நிறுவனங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. அதனால் முன்னாள் காதலர்கள் தங்கள் ஜோடியுடன் அடிக்கடி சந்திக்க வேண்டியதாகிறது.

இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் அவர்களின் சுய கௌரவத்தை சீண்டி பார்க்க, முன்னாள் காதலர்கள் இப்போது என்ன முடிவெடுத்தார்கள் என்பது கிளைமாக்ஸ்.

பணக்கார வாழ்க்கைக்கு ஏங்கும் இளைஞனாக ஸ்ரீகாந்த் போகப்போக அந்த கேரக்டரில் அப்படியே ஒன்றிப் போகிறார். பணம் மட்டுமே லட்சியம் என்றிருந்தவர், அடுத்தடுத்த மேல் தட்டு அவமானங்களை சந்திக்க நேர்கையில் உள்ளுக்குள் நொறுங்கும் இடங்களில் அவரது ரியாக்ஷன் சீனியர் நடிப்பின் அடையாளம்.

நாயகி பூஜிதா ஸ்ரீகாந்த் உடனான ஆரம்ப கால முட்டல் மோதல்களில் ரசிக்க வைக்கிறார். வாழ்க்கையின் அடுத்த கட்டம் பற்றி யோசிக்கும் கிளைமாக்ஸில் நடிப்பிலும் டிஸ்டிங்ஷன் வாங்குகிறார்.இரண்டாவது ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ள பரதன் மற்றும் நிமி இமானுவேல் பிற்பகுதி கதைக்கு உதவுகின்றார்கள். இவர்களோடு பார்கவ் , நம்பிராஜன், நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன் என நட்சத்திரக் கூட்டம் அதிகம். இவர்களில் பணக்கார வீடு தந்த அவமானத்தில் மகன் ஸ்ரீகாந்த் இடம் போனில் பேசும் அப்பா ரமேஷ் கண்ணா குணசித்திரத்திலும், அனுமோகன் காமெடியிலும் தனித்து தெரிகிறார்கள் பழம்பெரும் நடிகர்களான கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு தங்கள் அனுபவ நடிப்பில் மிளிர்கிறார்கள்.

நம்பிராஜனின் உதவியாளராக வரும் அந்த மீசை பெரியவரும் தன் பங்குக்கு காமெடியில் கலக்கி இருக்கிறார்.
ஆர்.கே.சுந்தர் இசையில் பாடல்கள் அத்தனையும் பரம சுகம். நீண்ட இடைவெளிக்கு பிறகு கே. ரங்கராஜ் இயக்கி இருக்கிறார். முதல் பாதியை கலகலப்பாக எடுத்து செல்பவர், மறு பாதியில் காதலை இடம் மாற்றி அழகு பார்க்கிறார். எப்படியும் ஒரிஜினல் காதல் ஜோடி இணையப் போகிறார்கள் என்று தெரிய வந்தாலும், அதற்கு இயக்குனர் சொல்லும் காரணம் தான் காமெடியாகி விடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *