பெருசு – திரை விமர்சனம்
கிராமங்களில் பெரியவர்களை பெருசு என்றும் அழைப்பதுண்டு அப்படி அழைக்கப்படும் ஒரு பெரியவர் ஒருநாள் காலைப் பொழுதில் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது உயிர் போய்விடுகிறது. அவரது மகன்கள் சுனில், வைபவ். தந்தையின் எதிர்பாராத மரணத்தில் அதிர்ச்சி அடைந்தாலும் அடுத்து ஆக வேண்டிய காரியங்களைபார்க்க முடிவு செய்கிறார்கள். அப்போது தான் மரணம் அடைந்த பெரியவரின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். அது வெளியே பகிர்ந்து கொள்ள முடியாத அதிர்ச்சி.
இதனால், அவரது உடலை மற்றவர்களுக்கு காட்ட முடியாத சிக்கல் ஏற்படுகிறது.
இந்நிலையில் மரண சம்பவம் தெரிந்து பெரியவரின் தம்பி முனீஷ்காந்த் பதறி அடித்து ஓடி வருகிறார். ஒரு சண்டையில் இரண்டு குடும்பத்துக்கும் ஆகாமல் பேச்சுவார்த்தை நின்று போய் வருடக் கணக்கான நிலையில் இப்போது அண்ணன் மரணச் செய்தி கேட்ட மாத்திரத்தில் பகை மறந்து ஓடோடி வந்திருக்கிறார். வந்ததிலிருந்து தன் அண்ணன் மகன்கள் தன்னிடம் ஏதோ மறைக்க முயல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் அவர், பிணத்தை அருகில் நின்று பார்க்க நெருங்குகிறார். ஆனால் ஏதாவது காரணம் சொல்லி அவரை பிணத்தை பார்க்க விடாமல் தடுத்து விடுகிறார்கள்.
இந்நிலையில் விஷயம் தெரிந்து பக்கத்து ஊரிலிருந்து வந்த பெண் ஒருத்தி அந்த வீட்டுக்குள் நுழைந்து பெரியவருக்கு கடைசி மரியாதை செய்ய முயல்கிறாள்.
பெரியவரை பார்க்க அவளுக்கும் தடை போட, அப்போது அந்தப் பெண் தன் தந்தையின் சின்ன வீடு என்பது தெரிய வர, அதிர்ந்து போகிறார்கள்.
அண்ணன் தம்பிகள். அதே சமயம் பெரியவரின் உடல் சிக்கலை மறைக்கவும் முடியாமல் திணறும் குடும்பத்தார், எப்படி பிரச்சனையை சமாளித்து இறுதிச் சடங்கு செய்கிறார்கள் என்பது கதை. இதை சிரிக்க சிரிக்க சொல்லி இருக்கிறார்கள் என்பது சிறப்பு.
அண்ணன் தம்பியாக சுனில்-வைபவ் நடித்திருக்கிறார்கள். நிஜமாகவே இருவரும் அண்ணன் தம்பி என்பதால் கதைக்குள் அழகாக இணைந்து போகிறார்கள்.
எப்போதும் மது போதையில் இருக்கும் கதாபாத்திரத்தில் வைபவ் தன் பங்குக்கு காமெடி கவுண்டர்களை அள்ளி வீசி சிரிக்க வைக்கிறார்.
அவரது அண்ணனாக வரும் சுனில் அளந்து பேசும் வார்த்தைகளில் கூட காமெடி கொட்டுகிறது.பிணமான தந்தையை பார்க்க வரும் ஒவ்வொருவரிடமும் அவர் சொல்லும் புதுப் புது கதைகள் நகைச்சுவைக்கு கியாரண்டி.
சுனிலின் மனைவியாக சாந்தினி, வைபவ்வின் மனைவியாக நிகாரிகா, அம்மாவாக தனம், சித்தியாக தீபா சங்கர் பொருத்தமான பாத்திரங்களில் பளபளக்கிறார்கள். குறிப்பாக துக்க வீட்டிற்கு வந்த சக்களத்தியை பார்த்ததும் பெரியவரின் மனைவி தனத்துக்குள் வரும் அந்த ஆவேசம் அதை தொடர்ந்து நடக்கும் அதிரடி சம்பவங்கள் நகைச்சுவையின் உச்சம்.நாயகன் நண்பராக வரும் பாலசரவணனுக்கு முனீஷ்காந்த்தை சமாளிப்பதே பெரிய வேலை ஆகிப் போய் அதுவே இயல்பான காமெடியும் ஆகிவிடுகிறது.ரெடிங் கிங்ஸ்லி, வி.டி.வி. கணேஷ், கஜராஜ், சுவாமிநாதன் வரும் கொஞ்ச நேரத்திலும் சிரிப்பை சில்லரையாய் சிதற விட்டு போகிறார்கள். ஒரு காட்சியில் வந்தாலும் கருணாகரன் தனது இருப்பை அழுத்தமாக நிரூபிக்கிறார்.
அருண் ராஜின் இசையில் பாடல்கள்ரசிக்கலாம்.ஒரே வீட்டில் அதுவும் துக்க வீட்டில் நடக்கும் கதை என்றாலும், தனது வித்தியாசமான கேமரா கோணங்கள் மூலம் படத்துக்குள் நம்மை இழுத்துக் கொண்டு விடுகிறது ஒளிப்பதிவாளர் சத்யா திலகத்தின் கேமரா.பாலாஜியின் வசனங்கள் பல இடங்களில் கிரேசி மோகனை நினைவூட்டுகிறது.எழுதி இயக்கியிருக்கும் இளங்கோ ராம், பெரியவரின்பிணத்தை வைத்துக் கொண்டு காமெடி தோரணம் கட்டி இருக்கிறார். முடிவுவரை எந்த இடத்திலும் நெருடல் இல்லாமல் படத்தை கொண்டு போன விதத்தில் சேர்ந்த இயக்குனராக வும் முத்திரை பதிக்கிறார். பெரியவர் எப்படிப்பட்டவர் என்பதை சொல்லும் அந்த கிளைமாக்ஸ் அக் மார்க் குறும்பு ரகம்.
மொத்தத்தில், இந்த பெருசு கலகல காமெடி கொண்டாட்டம்.