அம்பேத்கராக நடிக்கிறார் ஜெ.எம்.பஷீர்!
அர்ஜுன் நடித்த ‘வாத்தியார்’, ஆர்யா நடித்த ‘ஓரம் போ’, சத்யராஜ் நடித்த ‘6.2’, மற்றும் ‘நீ வேணும்டா செல்லம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் பேனரில் தயாரித்த வி. பழனிவேல் தற்போது ‘டாக்டர் அம்பேத்கர்’ படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இப்படத்தில் விரைவில் வெளியாக உள்ள ‘தேசியத் தலைவர்’ படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக வாழ்ந்திருக்கும் ஜெ.எம்.பஷீர் அம்பேத்கராக நடிக்கிறார். வி. செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைக்கிறார்.
டாக்டர் அம்பேத்கர் பிறந்த ஊரான மத்திய பிரதேசத்தில் உள்ள மோவ், பயின்ற புனே, வாழ்ந்த மும்பை, அமைச்சராக பணியாற்றிய தில்லி, பாரிஸ்டர் பட்டம் பெற்ற லண்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் இப்படம் படமாக்கப்பட உள்ளது.
இந்திய அரசமைப்பு சட்டத்தை இயற்றியது டாக்டர் அம்பேத்கர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது சிறப்புகளை உலக மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் அவரது வரலாறு தொடர்பான புத்தகங்களை ஆய்வு செய்து, அவரை பின்தொடர்வோரிடம் தகவல்களை பெற்று இந்த திரைப்படம் உருவாகிறது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை ‘டாக்டர் அம்பேத்கர்’ படக்குழுவினர் சந்தித்தனர். அப்போது, இப்படம் மாபெரும் வெற்றி பெற்று அம்பேத்கரின் கருத்துகளை உலகமெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று திருமாவளவன் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.
அவரது அறிவுரைக்கு இணங்க, உலகளாவிய தலைவராக திகழும் டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை திரையில் வெளிப்படுத்தும் முயற்சியான ‘டாக்டர் அம்பேத்கர்’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் பான் வேர்ல்டு திரைப்படமாக உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
**