திரை விமர்சனம்

கேம் சேஞ்சர் – திரை விமர்சனம்

மாநில முதல்வருக்கும் மாவட்ட கலெக்டருக்கும் இடையே ‘நீயா… நானா’ போட்டி வந்தால் அதுதான் இந்த கேம் சேஞ்சர். ஆந்திர முதல்வர் ஸ்ரீ காந்த்துக்கு ஜெயராம், எஸ் ஜே சூர்யா என இரு மகன்கள். மகன்கள் இருவருக்குமே அப்பாவின் முதல்வர் நாற்காலி மீது ஒரு கண்.

இதற்கிடையே விசாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக பதவி ஏற்கும் ராம் சரண் தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் முதலமைச்சர் கனவில் இருக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறார்.இதில் உச்சக்கட்டமாக முதல்வர் பங்கேற்கும் விழா ஒன்றின் பாதுகாப்பு பணிக்கு ராம்சரண் மீது கை நீட்டி விடுகிறார் எஸ். ஜே.சூர்யா. பதிலுக்கு ராம் சரணும் கை நீட்ட, தொடர்ந்து முதல்வர் உத்தரவின் பேரில் கலெக்டர் சஸ்பெண்ட் ஆகிறார்.எஸ்.ஜே. சூர்யாவுக்கு மந்திரி பதவி பறி போகிறது. தந்தையே தன்னை பதவி நீக்கம் செய்ததை தாங்க முடியாத எஸ் ஜே சூர்யா, மருத்துவமனையில சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தந்தையை கொன்று விடுகிறார். இப்போது தந்தை இடத்தில் அவரே முதல்வராக வரவேண்டிய சூழலில், முதல்வர் இறப்பதற்கு முன்பு ராம்சரணை தனது அரசியல் வாரிசாகவும், தனக்குப் பின் அவரே ஆந்திர முதல்வர் என்றும் அறிவித்த வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்துகிறது. முதல்வர் அறிவித்தபடி ராம்சரண் முதல்வர் ஆனாரா? முதல்வர் பதவிக்கு வெ றித்தனமாக காத்திருக்கும் எஸ்.ஜே. சூர்யா அவரை முதல்வராக பொறுப்பே ற்க விட்டாரா, தனது அரசியல் வாரிசாக ராம் சரணை முதல்வர் நியமிக்க காரணம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடையே கதைக்களம்.

அரசு அதிகாரிகளின் பலம் என்ன என்பதை இந்தப் படம் மூலம் பாடமே நடத்தி இருக்கிறார் ஷங்கர். மக்கள் பிரச்சினைக்காக போராடும் அரசியல் தலைவர், அரசு பணியில் அநீதியை அழிக்க எந்த எல்லைக்கு போக தயங்காத அதிகாரி என்ற இரு வேறு நிலைகளிலும் தனது நடிப்பில் டிஷ்டிங்ஷன் வாங்கி விடுகிறார் ராம்சரண். இருப்பினும் நேர்மையான மாவட்ட கலெக்டர் என்ற மகன் கேரக்டரை தாண்டி வானளாவ உயர்ந்து நிற்கிறது அந்த அரசியல்வாதி அப்பா கேரக்டர்.

ராம்சரண்- கியாரா அத்வானி தொடர்பான காதல் காட்சிகளில் தான் இளமை துள்ளல் மிஸ்ஸிங்.நாயகியாக வரும் கியாரா அத்வானிபாடல் காட்சிகள் மட்டும் வசீகரிக்கிறார்.அப்பா ராம்சரணுக்கு ஜோடியாக வரும் அஞ்சலி கனமான நடிப்பில் கம்பீரம் காட்டுகிறார்.

முதல்வர் நாற்காலிக்கு குறி வைக்கும் கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யா வழக்கம் போல் தனது வில்லத்தனத்தில் பாஸ் ஆகி விடுகிறார். முதல்வரின் மூத்த மகனாக வரும் ஜெயராம் தனக்கான காட்சிகளை சிரிப்பு மயமாக்கி இருக்கிறார். கலெக்டரின் உதவியாளராக வரும் சுனிலும் தன் பங்குக்கு கிச்சுகிச்சு காட்ட முயல்கிறார்.

அதிகம் பேசாமல் நடிப்பு பேச வைக்கும் கேரக்டரில் சமுத்திரகனியும் படத்தில் இருக்கிறார். ஒளிப்பதிவாளர் தி ருவின் கேமரா காட்சிகளின் பிரம்மாண்டத்தை கண்ணுக்கு நெருக்கமாக்குகிறது. தமனின் இசை வழக்கம் போல பாடல்களில் தெறிக் கிறது.

இயக்குனர் ஷங்கரின் வழக்கமான பார்முலா இதிலும் இருக்கிறது பிரம்மாண்ட பாடல் காட்சிகள் இருக்கிறது. அரசியல்வாதிகளின் முகத்திரை கிழிக்கும் காட்சிகள் இருக்கிறது. ஆனாலும் ஷங்கரிடம் இன்னும் எதிர்பார்த்த ரசிகனுக்கு அவர் போட்டிருப்பது அளவு சாப்பாடு தான. திரைக்கதைக்கான கூடுதல் மெனக்கெடல் இருந்திருந்தால் அரசியல் கதையில் இன்னொரு புதிய அத்தியாயம் கிடைத்திருக்கும். அப்பா ராம்சரண் சம்பந்தப்பட்ட அந்த பிளாஷ்பேக் காட்சிகள் மனதை நெகிழ்த்தி விடுவது நிஜம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *