திரை விமர்சனம்

புஷ்பா தி ரூல் – திரை விமர்சனம்

புஷ்பா முதல் பாகத்தில் செம்மரம் மட்டும் கூலி தொழிலாளியாக இருந்து படிப்படியாக செம்மர கடத்தல் கும்பல் தலைவனாக மாறுவார் அல்லு அர்ஜுன்.
இந்த இரண்டாம் பாகத்தில் அவரது தலைமை பொறுப்பை தட்டி பறிக்க திட்டமிடும் தொழில் எதிரிகளிடம் இருந்து எப்படி அதை மீட்டுக் கொள்கிறார் என்பதை கோடிகளை கொட்டி சொல்லி இருக்கிறார்கள்.

இந்த கதைக் களத்துக்குள் மனைவியின் புகைப்பட ஆசையை நிறைவேற்ற முதலமைச்சரையே மாற்றும் புஷ்பா, தனது குடும்ப அடையாளத் துக்காக அண்ணனிடம் அவமானப்படுவது, அதே அண்ணன் மகளுக்கு ஆபத்து என்றதும் உயிரைப் பணயம் வைத்து மீட்க புறப்படுவது போன்ற கிளை க் கதைகளும் பிரமாதம் சொல்ல வைக்கின்றன.

ஒற்றைக் காலில் கயிற்றைக் கட்டி தலைகீழாக தொங்க விடப்பட்டிருக்கும் முதல் காட்சியிலேயே தனது வீர தீர பிரதாபத்தில் புஷ்பா, ரசிகர்களை தனக்கு நெருக்கமாக்கி கொள்கிறார். பெண் வேடமிட்டு ஆடும் ஆவேச நடனம், கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் பறந்து பறந்து எதிரிகளை துவம்சம் செய்யும் அந்த கிளைமாக்ஸ், மனைவிக்கு அவ்வப்போது கொடுக்கும் அந்த பீலிங்ஸ் மரியாதை இதெல்லாம் அல்லு அர்ஜுனின் அக்மார்க் நடிப்பு முத்திரை காட்சிகள்.

தன்னுடன் போட்டோ எடுக்க மறுத்த ஆந்திர முதலமைச்சர் ஆடுகளம் நரேனை முன்னாள் முதலமைச்சராக்குகிற இடம் இன்னொரு ரசனைக் களஞ்சியம். அந்த ஜப்பான் துறைமுக சண்டைக்காட்சியை வடிவமைத்த ஸ்டண்ட் இயக்குனரோடு கை குலுக்க தோன்றுகிறது.

அல்லு அர்ஜுனின் அழகு மனைவியாக ராஷ்மிகா. கணவனை சாமி என்று இவர் அழைப்பதே தனி அழகு. கணவனுக்காக குடும்பத்தாரிடம் அவர் வெடிக்கும் காட்சியில் தேர்ந்த நடிகையாகவும் தன்னை பதிவு செய்து கொள்கிறார். கணவனை இவர் மடக்கிப் போடும் அந்த காட்சிகளில் கடைசி ரசிகன் வரை ஃபீலிங். வரிசையாக தோல்விகளை சந்திக்கும் கேரக்டர் என்றா லும் அதிலும் தன் நடிப்பு முத்திரை பதித்து விடுகிறார், எஸ். பி.பகத் பாசில்.

முதல் அமைச்சராக ஆடுகளம் நரேன், அடுத்த முதலமைச்சராக சித்தப்பா ராவ் ரமேஷ், செம்மரக் கடத்தல் கூட்டத்தின் முன்னாள் தலைவராக சுனில், அவர் மனைவியாக அனுஷ்யா, மத்திய அமைச்சராக ஜெகபதி பாபு பாத்திர தேர்வுகளில் நடிப்பில் பளபளப்பு கூட்டுகிறார்கள்.

தேவி பிரசாத் இசையில் பாடல்கள் சுமார். முதல் பாகத்தில் ரசிக்க ரசிக்க பாட்டு போட்டவர் இரண்டாம் பாகத்தில் ஏனோ தடுமாறி இருக்கிறார். ஸ்ரீ லீலா பாடும் அந்த ஒற்றை பாடலில் கூட உயிர்ப்பு தன்மை குறைந்ததற்கு இவரை நோக்கியே ரசிகனின் விரல்கள் நீளுகின்றன.

சுகுமார் இயக்கி இருக்கிறார். முதல் பாகத்தில் நம்பகத்தன்மையுடன் கதை சொன்னவர், இரண்டாம் பாகத்தில் எதைச் சொன்னாலும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்ற மனநிலையில் இருந்திருப்பார் போலும். எனவே காட்சிகளின் பிரம்மாண்டம் அளவுக்கு கதை சொல்லலில் அவரது முத்திரை பெரும்பாலும் மிஸ்ஸிங். பகத் பாசிலி டம் அல்லு அர்ஜுன் சாரி சொல்வதில் தொடங்கி அடுத்தடுத்த காட்சிகளை கெத்து குறையாமல் காட்சிப்படுத்திய விதத்தில் மட்டும் சுகுமாரின் விஸ்வரூபம் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *