பேமிலி படம் – திரை விமர்சனம்
திரைப்படம் இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபடும் நாயகன் உதய் கார்த்திக், பல தேடல்களுக்கு பிறகு தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்கிறார். இவர் சொன்ன கதை பிடித்து போக, படத்தை தயாரிக்க முன்வருகிறார் அந்த தயாரிப்பாளர். ஆனால் படத்தில் இன்றைய முன்னணி நடிகரான தன் தம்பி தான் நாயகன் என்கிறார். ஆனால் கதைபிடித்த தயாரிப்பாளரின் தம்பியோ புது இயக்குனருக்கு சரி வர இயக்க தெரியுமோ என்னவோ… அதனால் கதையை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று தன் அண்ணனிடம் சொல்லி விட, சிதைந்து போகிறது உதய் கார்த்திக்கின் இயக்குனர் கனவு.
மூத்தஅண்ணன் வழக்கறிஞர். அடுத்த அண்ணன் ஐ டி துறையில் என குடும்பத்தில் சம்பாதிப்பவர்களாக இருக்க, கடைசி தம்பி மட்டும் இயக்குனர் கனவில் ஏக்கத்துடன் கனவுகளை சுமந்து
திரிய…
இந்நிலையில் தான் திடீர் திருப்பம். உதய் கார்த்திக் இயக்கும் படத்தை தயாரிக்க அவரின் மொத்த குடும்பமும் முன்வருகிறது. படம் தயாரித்தார்களா… உதய்யின் இயக்குனர் கனவு நனவானதா என்பது எதிர்பார்ப்புடன் கூடிய கிளைமாக்ஸ்.
நாயகனாக உதய் கார்த்திக். இயக்குனர் கனவுடன் வாய்ப்புக்காக அலையும் இடங்களில் அந்த தவிப்பும் துடிப்பும் நடிப்பில் குறிப்பிடத்தக்க இடங்கள். மொத்த குடும்பமும் தனது லட்சியத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டுமிடத்தில் அவர் நெகிழ்ந்து போகும் காட்சி கண்களை தாண்டி நெஞ்சுக்குள் பதிந்து விடுகிறது.
நாயகனின் காதலியாக சுபிக்ஷா நடிப்புக்கு நல்வரவு. திடீரென கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்கும் காதலனிடம் அவர் பதில் சொல்லும் காட்சி இவர் நடிப்புக்கான நல்ல சாட்சி.இரண்டாவது அண்ணன் கார்த்திக் குமாரின் ஜோடியாக வரும் ஜனனி தனது நடிப்பால் அந்த கேரக்டருக்கு அழகு சேர்க்கிறார். அம்மாவாக ஸ்ரீஜா ரவி. இரண்டு மகன்கள் நல்ல நிலையில் இருக்க, மூன்றாவது மகன் சினிமா சினிமா என்று வீணாகி விடுவானோ என்ற கவலை சுமக்கும் இடங்கள் திரை உலகு கிடைத்த நல்ல அம்மாவாக அவரை உறுதி செய்து விடுகிறது.
நாயகனின் பெரிய அண்ணனாக விவேக் பிரசன்னா, அடுத்த அண்ணனாக பார்த்திபன் குமார் பொருத்தமான கேரக்டர்களில் நிலைத்து நிற்கிறார்கள்.
நாயகனின் நண்பனாக வந்து அவ்வப்போது காமெடிக்கு உத்திரவாதம் தரும் கேரக்டரில் வரும் சந்தோஷ் தமிழ் சினிமாவில் இனி காமெடியான கதாபாத்திரங்களில் நிச்சயம் உலா வருவார்.
சினிமாவுக்கு வர துடிக்கும் இளைஞர்களின் கதை இதுபோல் பல வந்திருந்தாலும், ஒரு குடும்பமே தங்கள் வீட்டு வாரிசுக்கு உதவ முன் வரும் இடம் நெகிழ்ச்சியானது. அதை சரியான விகிதத்தில் கலந்து எதிர்பார்ப்புக்குரிய காட்சிகளில் ரசிகர்களை இணைத்து இயக்கிய விதத்தில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் செல்வகுமார் திருமாறன்.
இந்த பேமிலி படம் ஒவ்வொரு பேமிலிக்கான படமும் கூட.