திரை விமர்சனம்

லைன் மேன் – திரை விமர்சனம்

சாதனை படைக்கத் துடிக்கும் ஒரு விஞ்ஞானி சாதாரணனாக இருந்து விட்டால்… அவன் கனவு கடைசி வரை கனவு தானா… அல்லது நனவாகுமா? தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் உள்ள உப்பள மின் மையத்தில் லயன்மேனாக இருக்கிறார் சார்லி. மின் பொறியியல் பட்டதாரியான அவரது மகன் ஜெகன் பாலாஜி இளம் விஞ்ஞானி. தனது கண்டுபிடிப்புகள் மூலம் மக்களுக்கு உதவ எண்ணுகிறார். மின்விளக்குகளை கண்ட்ரோல் செய்ய தானியங்கி கருவி ஒன்றை கண்டு பிடிப்பவர், அதற்கு அரசு அங்கீகாரம் கிடைக்க பகீரத பிரயத்தனம் செய்கிறார். ஆனால் அவரது அத்தனை முயற்சியும் பணால் ஆக, துவண்டு போகிறார். அவரது கண்டுபிடிப்புக்கு எதிராக சில சதி வேலைகள் நடக்க, சதிகளை தகர்த்து அவரால் தனது படைப்பை அரசு அங்கீகாரத்துடன்மக்களிடம் கொண்டு சேர்க்க முடிந்ததா என்பது எதிர் பார்ப்புக்குரிய கதைக் களம்.

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் என்பது இந்த படத்தை மனதோடு நெருக்கம் ஆக்கி விடுகிறது.கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஜெகன் பாலாஜி நடிப்புக்கு புதியவர் என்றாலும் அந்த கேரக்டரில் தன்னை வெகுவாக நிலை நிறுத்திக் கொண்டு விடுகிறார். சென்னை போய் முதலமைச்சரை பார்க்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒரு கட்டத்தில் அவருக்கு குற்றவாளி முத்திரை குத்த, அந்தப் பதட்டமும் பரிதவிப்பும் ஜெகன் கண்களில் வெளிப்படுவது தேர்ந்த நடிப்பின் அடையாளம்.

ஜெகன் பாலாஜியின் அப்பாவாக சார்லி. படத்தின் லைன் மேன் இவர்தான். ஊருக்கு நல்லவராக மகனின் திறமை திறந்து அவனை மிச்சம் பாசத் தந்தையாக படம் முழுக்க அவருடைய நடிப்பு ராஜ்யம் விரவிக் கிடக்கிறது.

கலெக்டராக கொஞ்ச நேரமே வந்தாலும் அதிதி பாலன் தன் இருப்பை அட்டகாசமாய் பதிவு செய்துவிடுகிறார். நாயகியாக வரும் சரண்யா ரவிச்சந்திரன் உப்பள தொழிலாளர்களின் வலியை, எளிய காதலை மனதுக்குள் கடத்தி விடுகிறார்.

ஏழ்மையுடன் போராடும் ஒரு இளம் விஞ்ஞானியின் கனவு எதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்ட தில் இயக்கிய எம் உதயகுமார் பளிச்சென்று தெரிகிறார்.
மொத்தத்தில் லைன் மேன் உப்பளத்தில் கண்டெடுக்கப்பட்ட வைரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *