ஜாலியோ ஜிம்கானா – திரை விமர்சனம் – 3.5 / 5
அபிராமியின் குடும்பத்துக்கு எம்.எல்.ஏ. மதுசூதனன் மூலமாக ஒரு பெரிய பிரச்சினை வருகிறது. அந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக பிரபல வழக்கறிஞர் பிரபுதேவாவை சந்திக்க தனது மூன்று மகள்கள் உடன் செல்கிறார்அபிராமி. ஹோட்டலில் பிரபுதேவா தங்கி இருக்கும் அறைக்கதவு திறந்து இருக்க, அபிராமி அண்ட் கோ உள்ளே சென்று பார்க்கும் போது பிணமான நிலையில் பிரபுதேவாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.
இறந்து போன பிரபுதேவாவை கடைசியாக பார்த்தவர்கள் என்ற முறையில் பழி தங்கள் மீது விழுந்து விடுமோ என்று பயப்படுகிறார் அபிராமி. அதனால் யாருக்கும் தெரியாமல் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த முடிவு செய்கிறார்.
இதற்கிடையே பிரபு தேவாவின் வங்கி கணக்கில் ஒரு பத்து கோடி இருக்கும் விவரம் அபிராமி குழுவினருக்கு தெரிய வருகிறது. இதனால் தங்கள் பிரச்சனைகளை சமாளிக்க பிரபுதேவாவை உயிருடன் இருப்பது போல் காண்பித்து அந்த 10 கோடியை கைப்பற்ற முயற்சி மேற்கொள்கிறார்கள்.
அவர்களால் அது முடிந்ததா? பிரபுதேவாவின் மரணத்தின் பின்னணி என்ன என்பதை கலகல பின்னணியில் சொல்வதே படம்.
பிரபுதேவா படம் என்றாலே ஆட்டம் பாட்டம் என்று அமர்க்களப் படும். ஆனால் சில காட்சிகள் தவிர முழுநேர பிணமாக அவர் நடித்திருப்பது கதை மீதான அவரது நம்பிக்கையையே காட்டுகிறது. பிணமாக நடித்த போதிலும் தனக்கே உரித்தான சில மேனரிச ங்களை இடம் பார்த்து அவர் கையாளுவது தனி அழகு. பாடல் காட்சியில் பிரபுதேவாவின் நடனம் இன்னொரு ஸ்பெஷலாக அமைந்து ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. இறுதிக் காட்சியில் அவர் போடும் பொம்மலாட்ட சண்டை காட்சி இதுவரை திரைப்படத்தில் நாம் பார்த்திராத புதுமை. அபிராமி மூன்று பெண்களின் தாயாக நடிப்பில் புது மேனரிசம் காட்டி சிரிக்க வைக்கிறார். அவர் பதற்றப்படும் ஒவ்வொரு இடமும் நடிப்பின் புது எல்லைக்கோடு.
மடோனா செபஸ்டியானை முதன்முதலாக காமெடி செய்ய வைத்து பரீட்சை பார்த்திருக்கிறார்கள்.
சர்ச் பாதராக யோகிபாபு வில்ல எம்எல்ஏவாக மதுசூதனன். ஹோட்டல் அதிபராக ஓய் ஜி மகேந்திரன் அவரவர் கேரக்டர்களுக்குள் நின்று நிலைக்கிறார்கள். மலையாளம் பேசும் வங்கி மேலாளராக டைரக்டர் சக்தி சிதம்பரமும் தன் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்.
படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும் பாடல் ஆசிரியருமான ஜெகன் கவிராஜ் தனது போலீஸ்காரனை கட்டிக்கிட்டா பாடல் மூலம் திரை அழுத்தம் பதிக்கிறார். இது போதாது என்று ஜாதி சங்க தலைவராக வந்து ரணகளம் பண்ணும் காட்சியிலும் நடிப்பில் அதகளம் செய்கிறார். அட ஒரு நல்ல நடிகரும் கிடைச்சுட்டாருப்பா.
அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். ஒளிப்பதிவாளர் எம் சி கணேஷ்பாபு தனது கேமரா மூலம் காட்சிகளை நம் கண் முன் நெருக்கமாக்கி விடுகிறார்.
எழுதி இயக்கி இருக்கும் சக்தி சிதம்பரம் லாஜிக் பார்க்க தேவை இல்லாத ஒரு காமெடி கதைக் களத்தை எடுத்துக்கொண்டு படம் முழுக்க சிரிக்க வைக்கிறார். ஆடத் தெரிந்த நடிக்கத் தெரிந்த பிரபுதேவாவை பிணமாக நடிக்க வைக்க முன் வந்த துணிச்சல் பாராட்டுக்குரியது. அது தொடர்பான காட்சிகளை சுவாரசியம் குன்றாமல் தந்திருப்பது கூடுதல் சிறப்பு.
மொத்தத்தில் ஜாலியோ ஜிம்கானா படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் ஜாலி மேளா.
