”கடவுள் இல்லை என்று சொல்தையும், கேலி செய்வதையும் புரட்சி என்ற போலியான பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்” – ‘கலன்’ பட விழாவில் அர்ஜுன் சம்பத் காட்டம்
ராமலெட்சுமி புரொடக்ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கலன்’. ‘ கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அப்புகுட்டி, தீபா , யாசர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சம்பத் ராம், சேரன் ராஜ், மணிமாறன், ராஜேஷ், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஜெர்சன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜெயக்குமார் மற்றும் ஜேகே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன் பாடல்கள் எழுதியுள்ளனர். திலகராஜன் அம்பேத் கலை இயக்குநராக பணியாற்ற, வெரைட்டி பாலா நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். விக்னேஷ் வர்ணம் மற்றும் விநாயகம் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். சவுண்ட் எஞ்சினியராக சந்தோஷ் பணியாற்ற, துணை இணை இயக்குநராக ஜெகன் ஆல்பர்ட். துணை இயக்குநராக பாலாஜி சாமிநாதன்,மகேஷ் மற்றும் பலர் பணியாற்றி உள்ளனர். பி.ஆர்.ஓவாக கார்த்திக் பணியாற்றுகிறார்.
‘கலன்’ படத்தின் பாடல்கல் மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி அக்டோபர் 19 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில், இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத், இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, தயாரிப்பாளர்கல் சங்க செயற்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி, பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அந்தோணிதாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
இயக்குநர் வீரமுருகன் விருந்தினர்களை வரவேற்று பேசுகையில், “ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இந்த படத்தை விளம்பரப்படுத்தி மக்களுக்கு தெரிகிறது என்றால் அது உங்களால் தான். அர்ஜுன் சம்பத் அண்ணனை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. கிடுகு படம் வெளியான போது என்னை அழைத்து பணம் கொடுத்தவர், துத்துக்குடியில் தியேட்டர் கிடைக்காமல் போன போது கல்யாண மண்டபம் ஒன்றை வாடகை எடுத்து அதில் என் படத்தை மக்களுக்கு இலவசமாக போட்டு காண்பித்தார், அவருக்கு நன்றி. அண்ணன் பேரரசு அவர்களுக்கு நன்றி, நித்யானந்தாவுடன் காண்பிரன்ஸ் வீடியோவில் இருந்தோம், அவருக்கும் எனக்கும் தேசிய விருது கொடுத்தார்கள். அப்போது நித்யானந்தாவின் கதையை படமாக எடுக்குமாறு கேட்டார்கள், அவர் ஓகே சொல்வார் என்று நினைத்தேன் சொல்லவில்லை, அவருக்கு நன்றி. விஜயமுரளி சாருக்கு நன்றி. ஆர்.வி.உதயகுமார் சார் அவர்களுக்கு நன்றி.
கிடுகு படம் முடிந்ததும், நாதேராம் கோட்ஸே என்ற படத்தை தொடங்கினேன், ஆனால் அந்த படத்திற்கு பெரிய எதிர்ப்பு வந்தது. அதனால் இந்த படத்தை உடனே தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தேன், இதற்கும் பல எதிர்ப்பு வந்தது. அப்போது குருமூர்த்தி அண்ணன் நான் உடன் இருக்கிறேன் உடனே தொடங்குங்கள், என்று கூறி படம் முடியும் வரை என்னுடன் இருந்தார். அவர் ராணுவத்தில் பணியாற்றுகிறார். பணிக்கு விடுமுறை போட்டுவிட்டு என் உடன் தான் பயணித்து வருகிறார் அவருக்கு நன்றி. ஜெ.கே அண்ணன் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் முதலில் பரணியை தான் நடிக்க வைப்பதாக இருந்தத். ஆனால், அவர் வேண்டாம் அப்புக்குட்டியை நடிக்க வைக்கலாம் நன்றாக இருக்கும் என்று கூறியவர் மணிமாறன் அண்ணன் தான். அதுமட்டும் அல்ல, படப்பிடிப்பில் மணிமாறன் அண்ணனின் விரல் துண்டாகி விட்டது. ஆனால், அவர் அதை பொருட்படுத்தாமல் நடித்துக் கொண்டே இருந்தார். பிறகு தீபா அக்கா அழுதுக்கொண்டே இருந்தார், அப்போது தான் எங்களுக்கு தெரிந்தது. அப்போது கூட மருத்துவமனைக்கு போகாமல் முடித்துவிட்டு போகிறேன், என்று சொன்னார், அவருக்கு நன்றி. தீபா அக்காவை நடிக்க வைக்க முடிவு செய்த போது அவர் லாரன்ஸ் சார் படத்தில் ஒப்பந்தம் ஆனார். அதனால் அவர் வருவரா? என்று யோசித்தோம். ஆனால், அவர் உடனே வருகிறேன் என்று சொல்லி வந்து நடித்துக் கொடுத்தார், அவருக்கு நன்றி. இசையமைப்பாளர் ஜெர்சன், கிடுகு படத்திற்கு பலர் இசையமைக்க மறுத்த போது, தைரியமாக என்னுடன் பயணித்தார். அதுமட்டும் அல்ல, எத்தனை முறை, எத்தனை பாடல்கள் கேட்டாலும் சலிக்காமல் போட்டுக் கொடுப்பார். எதாவது ஒரு பாடல் சரியில்லை என்று சொன்னால், அனைத்தையும் உடனே அழித்துவிட்டு முதலில் இருந்து போடுவார், அந்த அளவுக்கு கடினமாக உழைத்துக் கொடுத்தார், அவருக்கு நன்றி. இந்த படத்தின் இணை இயக்குநராக, உதவி இயக்குநராக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.
இத்தனை பேருக்கு நான் நன்றி சொல்ல காரணம், யாருமே பணத்திற்காக பணியாற்றவில்லை. நான் கதை எழுதும் போது கூட, இது சாதாரண படமாக இருக்காது, அப்படி நீங்கள் எடுக்க மாட்டீர்கள், இருந்தாலும் உங்களுடன் பணியாற்றுகிறோம், என்று கூறி இரண்டு வருடங்களாக என்னுடன் பயணிக்கிறார்கள். அதனால், இவர்களுக்கு நன்றி சொல்வது என் கடமையாக கருதுகிறேன். கேமரா மேன், கலை இயக்குநர் என அனைவருக்கும் நன்றி. காயத்ரி ஜி அனைத்து காட்சிகளையும் ஒரே டேக்கில் முடித்தார். அவரும், தீபா அக்காவும் இணைந்து நடித்த காட்சிகள் சிறப்பாக இருக்கும், அவருக்கு நன்றி. சம்பத் ராம் அண்ணனுக்கு நன்றி, யாசர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறி, அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.” என்றார்.
இசையமைப்பாளர் ஜெர்சன் பேசுகையில், “கலன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். இது எனக்கு இரண்டாவது படம், முதல் படம் கிடுகு. அந்த படத்திற்கு வாய்ப்பளித்த வீரமுருகன் அண்ணனுக்கு நன்றி. சினிமாவில் என்னை தூக்கி நிறுத்தி பயணிக்க வைத்திருக்கும் அந்தோணிதாஸ் அண்ணனுக்கு நன்றி. என்னுடைய சகோதரர் எடிட்டர் ரூபன் அவரும் எனக்கு சினிமாவில் துணையாக இருக்கிறார், அவருக்கு நன்றி. என் அப்பா, அம்மா ஆகியோரும் எனக்கு துணையாக இருக்கிறார்கள். குறிப்பாக என் மனைவி என் இசைப் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார், அவருக்கு நன்றி. முக்கியமாக இயக்குநர் வீரமுருகன் அண்ணனுக்கு நன்றி. கலன் படம் சிறப்பாக வந்திருக்கிறது, நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும், நன்றி.” என்றார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “கலன் சிறு திரைப்படமாக இருக்கலாம், அனைவரும் புதியவர்களாக இருக்கலாம், ஆனால் சிறப்பான படமாக இருக்கும் என்பது பாடல்கள் மற்றும் டிரைலரை பார்த்த போதே தெரிகிறது. இயக்குநர் சங்கத்தில் வீரமுருகன் உறுப்பினர் இல்லை என்று சொல்கிறார். நீங்கள் விரைவில் உறுப்பினராக வேண்டும். அப்போது தான் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். இந்த படத்தை வாழ்த்த வந்தது பெருமையாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போது, சாமி படமாக மட்டும் இன்றி சமூக படமாகவும் இருக்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள். அதை மையப்படுத்திய இந்த படம் நிச்சயம் நன்றாக வந்திருக்கும் என்று நம்புகிறேன்.
நாம் எந்த துறையில் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் இறை நம்பிக்கை மிக முக்கியம் என்று நினைக்கிறேன். இறைவன் இருக்கிறனா, இல்லையா என்பது தெரியாது. ஆனால், இறைவன் இருக்கிறான், தப்பு செய்தால் உங்களை இறைவன் தண்டிப்பார், என்ற நம்பிக்கையை உருவாக்கி வைத்திருக்கும் நம் முன்னோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதை விட்டு விட்டு, இறைவன் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய கூடாது. இதை தான் அமெரிக்க திரைப்படமான ‘தி கான்வேர்சேசன்’ சொல்லியிருப்பார்கள். விண்வெளியில் பல கண்டங்களை தாண்டி ஏதோ ஒரு சத்தம் கேட்பதாக விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடிப்பார், அது என்ன என்பதை கண்டறிய அவர் அங்கு செல்ல முயற்சித்து, அதில் வெற்றியும் பெறுவார். ஆனால், அவர் அங்கு சென்றாரா? இல்லையா? என்பது குறித்து பெரிய விவாதம் நடக்கும். அப்போது, அமெரிக்க அதிபரான பிளிக் கிளிண்டனிடமே விஞ்ஞானிகள் இது குறித்து தீர்ப்பு கேட்க முடிவு செய்வார்கள். அப்போது அவர், இந்த உலகத்தில் எத்தனையோ மக்கள் இன்னமும் பெரிய கஷ்ட்டத்தில் இருக்கிறார்கள், அவர்களின் முன்னேற்றத்திற்கான ஆய்வுகளை முன் எடுப்போம், அதை விட்டு விட்டு இறைவன் எங்கிருக்கிறான், என்ற ஆய்வு நமக்கு தேவையில்லை. இறைவன் இருக்கிறானா? என்பதை ஆராய்வதை விட, இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் தான் இந்த உலக மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள், என்று அவர் சொல்வது போல் அந்த படம் முடியும். எனவே, இறை நம்பிக்கை நம் வாழ்க்கையில் மிக முக்கியம். அதை தான் அந்த ஹாலிவுட் படம் சொன்னது, இந்த படமும் சொல்கிறது. அதனால், கடவுள் இந்த வண்ணத்தில் இருப்பாரா, கடவுள் அங்கு இருப்பாரா, என்று நாம் தேட வேண்டாம். கடவுள் இருக்கிறார், என்ற நம்பிக்கையில் வாழ வேண்டும், அப்போது தான் குற்றங்கள் குறையும்.
படத்தின் பாடல்கள் மிக சிறப்பாக இருந்தது. தயாரிப்பாளரும், இணை தயாரிப்பாளரும் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள், அவர்களின் வரிகள் ஆபாசம் இல்லாமல், ஆன்மீகத்தை வெளிப்படுத்தும் விதமாக மிக சிறப்பாக இருந்தது. அதேபோல் படத்தின் இசையமைப்பாளருக்கும் பாராட்டு, இசை சிறப்பாக இருந்தது. அவர் பெயர் ஜெர்சன், அவர் ஒரு இந்து பாடலை மிக சிறப்பாக மட்டும் இன்றி உணர்ச்சிப்பூர்வமாக இசையமைத்திருக்கிறார், அது தான் இங்கு சிறப்பு. நிச்சயமாக இந்த பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும், அதை அர்ஜுன் சம்பத் மக்களிடம் கொண்டு சேர்ப்பார் என்று நம்புகிறேன். பாடல்கள் மிக சிறப்பாக இருக்கிறது, இது நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய பாடல்கள். படத்தில் நடித்தவர்களின் நடிப்பு சிறப்பாக இருந்தது. வில்லியாக நடித்திருக்கும் காயத்ரி சிறப்பாக நடித்திருக்கிறார், அவரை பார்த்து நான் பயந்துவிட்டேன். சம்பத் ராம் சிறப்பாக நடித்திருக்கிறார். மணிமாறன் விரலை இழந்து கூட நடித்தார், என்பது பெரிய விசயம். இதுபோன்ற தியாகங்கள் தான் சினிமாவில் வெற்றி பெற வைக்கும். இன்று கஷ்ட்டப்படும் நடிகர்கள் தான் பெரிய நடிகராக வந்திருக்கிறார்கள், அதற்கு நம்ம அப்புகுட்டி தான் உதாரணம். அவர் ஒரு துணை நடிகராக பயணித்தவர், பிறகு காமெடி நடிகராக உயர்ந்து பிறகு நாயகனாகி, தேசிய விருது வென்றார். நான் தேசிய விருது வழங்கும் குழுவில் இருந்தேன், அங்கு பல படங்கள் வரும், எத்தனை படங்கள், எத்தனை நடிகர்கள், அவர்களில் யாருக்கு விருது கொடுப்பது என்று முடிவு செய்வதில், தலையே சுற்றி விட்டது. அப்படி ஒரு சூழலில் ஒரு சிறிய படத்தில் நடித்து, தேசிய விருது வென்றிருக்கிறார் என்றால் அது அப்புகுட்டி தான். அப்படிப்பட்ட அப்புகுட்டி இந்த படத்தில் சிறப்பான வேடத்தில் நடித்திருக்கிறார். அவரது மறைவுக்கு பிறகான அந்த பாடல் மெய்சிலிர்க்க வைத்தது, அந்த பாடலை பாடிய தம்பியும் சிறப்பாக பாடியிருக்கிறார். அவரது குரல் வலம் சிறப்பாக இருக்கிறது. தீபா சிறந்த குணச்சித்திர நடிகை. மனோரமா ஆச்சி தான் அனைத்து வேடங்களிலும் நடிப்பார். காமெடியை கடந்து குணச்சித்திர வேடங்களிலும் அசத்துவார், அவர் இடத்தை தீபா பிடிக்க வேண்டும். அவரும் காமெடி மட்டும் இன்றி பலவிதமான குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார், அவருக்கு வாழ்த்துகள்.
தெய்வத்தின் சக்தி படத்தின் கிளைமாக்ஸில் காட்டுவார்கள் என்று நினைக்கிறேன், அந்த தெய்வ சக்தி இந்த படத்தின் வெற்றிக்கு துணையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். ’கலன்’ சிறிய படமாக இருக்கலாம், இந்த அரங்கம் சிறியதாக இருக்கலாம், இங்கிருக்கும் கூட்டம் குறைவாக இருக்கலாம், ஆனால் இதன் வெற்றி மிகப்பெரியதாக இருக்கும். ஆன்மீகம் மற்றும் சமூக அக்கறையோடு உருவாகியிருக்கும் இந்த ‘கலன்’ மிகப்பெரிய வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும், என்று கூறி படக்குழுவினரை வாழ்த்துகிறேன்.” என்றார்.
பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அந்தோணிதாஸ் பேசுகையில், “ஆயிரம் படங்களுக்கு மேல், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடியிருக்கிறேன். இது அனைத்தும் ரசிகர்கள் போட்ட பிச்சை, என்னை வளர்த்து வருபவர்கள் போட்ட பிச்சை, என்று கூறி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்ச்சியை அலங்கறித்துக் கொண்டிருக்கும் பெரியவர்களை வணங்குகிறேன். ஊடகங்களை வணங்குகிறேன். இந்த படத்தில் நான் பாடவில்லை, நடிக்கவில்லை, என்றாலும் இங்கு வந்ததற்கு காரணம் இசையமைப்பாளர் என் தம்பி ஜெர்சன் தான். அவர் இசையமைக்கும் இரண்டாவது படம் இது. அவர் பெரிய நிலைக்கு வர வேண்டும். நான் கரகாட்டக்கலை குழுவில் பாடிக் கொண்டிருந்தேன், அப்போதே எங்கள் மண்ணில் கோல்டன் இசைக்குழு என்ற மிகப்பெரிய இசைக்குழுவை நடத்திக் கொண்டிருந்தவர் தம்பிராஜன் அண்ணன், அவர் தான் இசையமைப்பாளர் ஜெர்சனின் அப்பா, எங்களுக்கு எல்லாம் இசை கடவுளாக இருந்த அண்ணனின் மகன் பெரிய இடத்துக்கு செல்ல வேண்டும். படத்தில் நடித்திருக்கும் அப்புகுட்டி, தீபா அக்கா ஆகியோரும் எனது நெருங்கிய நண்பர்கள், அவர்களுக்கும் வாழ்த்துகள். புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் வீரமுருகன் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி பேசுகையில், “கலன் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சிறப்பாக இருந்தது. குறிப்பாக டிரைலரில் கிராமத்தை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள். உதயகுமார் சார் சொன்னது போல் இறை நம்பிக்கை மக்களுக்கு அவசியமானது. நாம் ஒரு மருத்துவரிடம் சென்றால் கூட, அவர் இறுதியில் கடவுளை தான் நம்புவார். அதேபோல் பல புதிய விசயங்களை கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளும் இறுதியில் கடவுள் கையில் தான் இருக்கிறது, என்று சொல்வார்கள். நம் முன்னோர்கள் முதலில் இயற்கையை தான் வணங்கினார்கள். நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் இவற்றை தான் வணங்கினார்கள். இன்றும் நாம் இயற்கையை தான் வணங்குகிறோம், ஆனால் அது தெரியாமல் வணங்குகிறோம். அதாவது, சமீபத்தில் ஆயுத பூஜை கொண்டாடினோம். அதில், தேங்காய் மீது கற்பூரம் வைத்து சுற்றி உடைத்திருப்போம், அதுவே பஞ்சபூத வழிபாடு தான். தேங்காய் மீது கற்பூரம் வைப்பதால் நெருப்பு இருக்கிறது, தேங்காய்க்குள் தண்ணீர் இருக்கிறது. அதை சுற்றும் போது காற்று சேர்கிறது, ஆகாயத்தில் காட்டி விட்டு தரையில் உடைப்பதால் அவை இரண்டும் இணைகிறது, ஆக, பஞ்சபூதங்களின் வழிபாடாகத்தான் தேங்காய் உடைத்து வணங்குகிறோம். அதேபோல் குலதெய்வ கோவில் வழிபாடு என்பது மிக முக்கியம், அதற்கு காரணம் அப்படிப்பட்ட கோவில்கள் நம் முன்னோர்கள் கால்பட்ட இடம் அது, அவர்களுடைய மூச்சு அங்கு சுத்திட்டு இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களுக்கு அது தேவைப்படுகிறது. பூமியே அந்தரத்தில் தான் சுற்றிக்கொண்டிருக்கிறது, அதுவே கடவுள் சக்திக்கு சாட்சி. அதேபோல், பூமி சுற்றும் இடத்தில் ஓம் என்ற சத்தம் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், இவற்றை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை, என்ற குறையை இதுபோன்ற படங்கள் போக்கும் என்று நினைக்கிறேன். படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது, இசையமைப்பாளர் ஜெர்சனுக்கு பாராட்டுகள். பாடல் பாடியவர்களின் குரல் வலம் சிறப்பாக இருக்கிறது. இவர்களை எல்லாம் ஒன்றினைத்த வீரமுருகன் அவர்களுக்கு பாராட்டுகள்.
தப்பு செய்தால், தண்டனை உண்டு என்று சொல்வதற்கு இப்போது ஆள் இல்லை. இன்று சாமி படங்கள் வருவது குறைந்துவிட்டது. ஒரு காலத்தில் தேவர் பிலிம்ஸ் எடுத்தார், பிறகு இராம.நாராயணன் சார் எடுத்தார். அவர் எடுக்கும் போது கூட, சாமி படம் என்றால் கண் தெரியாவருக்கு கண் தெரியும், நடக்காதவர் நடப்பார், போன்ற விசயங்களை தான் சொல்ல முடியும், அதை தாண்டி என்ன சொல்ல முடியும் என்று சொல்வார்கள். ஆனால், அந்த விசயங்களை திரும்ப திரும்ப சொல்ல வேண்டும் என்று தான் சொல்வார்கள், அது தான் இறை நம்பிக்கை. தீய பழக்கங்களில் இருந்தும், நம் வாழ்க்கையை நல்வழி படுத்துவதும் இறை நம்பிக்கை தான், அதை சொல்வதற்கு சங்கராச்சாரியர், கிருபானந்தவாரியார் போன்றவர்கள் இருந்தார்கள், ஆனால் இப்போது திரைப்படங்கள் மூலமாகத்தான் இதுபோன்ற விசயங்களை சொல்ல வேண்டும். எனவே, இறை நம்பிக்கை மற்றும் அதன் மூலம் குற்றவாளிகளுக்கு பயத்தை கொடுக்கும் விதமாக இருக்கும் ‘கலன்’ நிச்சயம் வெற்றி பெறும், என்று கூறி வாழ்த்துகிறேன்.” என்றார்.
நடிகை தீபா பேசுகையில், “நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இங்கு பேசியவர்கள் இது சாமி படம் என்று சொன்னார்கள். ஆனால், இது அதர்மத்திற்கும் தர்மத்திற்கும் நடக்கும் பெரிய போராட்டம் தான் இந்த படம். இதுபோன்ற படங்களில் ஆண்களை தான் அதிரடி வசனங்களை பேச வைத்திருப்பார்கள். ஆனால், இந்த படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்கள் மூலம் அதிரடி வசனங்களை பேச வைத்திருக்கிறார்கள். இதில் பெண்களால் முடியாதது எதுவும் இல்லை, என்பதையும் இயக்குநர் வீரமுருகன் சொல்லியிருக்கிறார். எனக்கு இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குநருக்கு நன்றி.
இறைவன் பெண்ணை வடிவமைத்த போது, தங்கம், முத்து, மலர் என்று பலவற்றை சேர்த்த போது முழுமை பெறவில்லையாம். அப்போது பாம்பு புற்றில் கையை விட்ட போது அது கக்கிய விஷத்தை அந்த பெண் மீது செலுத்திய போது தான் அவர் முழுமை பெற்றாராம். அதனால், பெண்கள் எந்த நேரத்திலும் அமைதியாக இருக்க மாட்டார்கள், அநீதிக்கு எதிராக அவர்கள் வெகுண்டெழும் போது அவர்களிடம் இருக்கும் விஷத்தை கக்குவார்கள். பெண்ணுடைய சக்திகள் சாதாரண சக்தி கிடையாது. பெண்களை அதர்மத்திற்கு ஒரு சாட்சியாகவும், தர்மத்திற்கு ஒரு சாட்சியாகவும் நிறுத்தியிருக்கிறார்கள், இது பெருமையாக இருக்கிறது. பெண்களின் முக்கியத்துவம் நாட்டிற்கும், வீட்டிற்கும் மிக முக்கியமானது. அதனால் தான் தேசிய கொடியை பெண் கையில் கொடுத்திருக்கிறார்கள். எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போது இயற்கையே அதை அழிக்க தன்னை தயார் செய்துக்கொள்ளும் என்று சொல்வார்கள். அதனால், என்றுமே தர்மம் அழியவே அழியாது.
’கடைகுட்டி சிங்கம்’ படத்தின் மூலம் தான் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. அந்த படத்திற்குப் பிறகு நான் நடிக்கும் படங்களில் என் நடிப்பை பத்திரிகையாளர்கள் எழுதி என்னை வளர்த்து வருகிறார்கள். நான் கொஞ்சம் ஓவராக நடித்தாலும், அது நன்றாக இருக்கிறது, என்று கூட என்னை பற்றி எழுதி வளர்த்து வருகிறார்கள், அதனால் தான் இன்று நான் மைக் பிடித்து பேசுகிறேன், இந்த ஆதரவை தொடர்ந்து எனக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.
வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் பேசுகையில், “குறுகிய காலக்கட்டத்தில் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா என்பதை நிரூபித்திருக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநருக்கு பாராட்டுகள். இப்போது தான் திருவண்ணாமலையில் படத்திற்கு பூஜை போட்டது போல் இருக்கிறது, இப்போது படம் முடிந்து விட்டது என்று சொல்லி, இசை மற்றும் டிரைலரை வெளியிடுவது சிறப்பான திட்டமிடுதல். இவர்களுடைய எண்ணம் தற்போதைய சமுதயாத்தை திசைதிருப்புவது போல் இருக்கிறது. இந்த சமூகத்தில் ஒரு தராசு மட்டும் இறங்கிக் கொண்டே இருக்கிறது, ஒரு தராசு மட்டும் தூக்கி நிற்கிறது ஏன்? என்ற எண்ண குமுறல் மூலம் வந்த கலன் நிச்சயம் வெற்றி பெறும். இந்த படக்குழு இந்த சினிமா களத்தில் சாதிப்பார்கள். நீங்கள் நினைப்பது போல் அனைத்து சமுதாயமும் ஒரே கோட்டில் நிற்ககூடிய உங்கள் முயற்சி வெற்றி பெறும், என்று கூறி வாழ்த்துகிறேன்.” என்றார்.
நடிகர் அப்புக்குட்டி பேசுகையில், “கலன் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. மேடையில் இருக்கும் அனைத்து பெரியவர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் நான் நடிப்பதற்கு மிக முக்கியமான காரணம் மணிமாறன் அண்ணன் தான். ஒரு நாள் இயக்குநரை சந்திக்க அழைத்து சென்றார், அப்போது இயக்குநர் கதை சொன்ன போது 20 நாட்கள் படப்பிடிப்பு இருக்கும், பெரிய சம்பளம் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், அவர் மொத்தமே 6 நாட்கள் தான் என்று சொன்னார். ஆனால், படத்தில் நீங்க தான் முக்கியமான வேடம், நாயகனின் தாய்மாமனாக நடிக்க வேண்டும், என்று சொன்னார். சரி ஆறு நாட்களாக இருந்தாலும் பெரிய சம்பளம் கொடுப்பார்கள், என்று நினைத்து போனேன். ஆனால் ஆறு நாட்களை நான்கு நாட்களில் முடித்து விட்டார். சிறிய படம் என்று சொன்னவர், படப்பிடிப்பில் இரண்டு கேமராக்களை வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மிக வேகமாக படப்பிடிப்பு நடந்தது, பலர் வேகமாக எடுப்பார்கள் ஆனால் காட்சிகள் எதிர்பார்த்தது போல் வராது. இயக்குநர் வீரமுருகன் சார் காட்சிகளை வேகமாக படமாக்கினாலும், மிக தரமாக எடுத்தார். நான்கு நாட்கள் நான் நடித்தாலும் என்னை படம் முழுவதும் வருவது போல் காட்டியிருக்கிறார்கள், இது மிகப்பெரிய விசயம். வீரமுருகன் சாரின் வேகத்தை பார்த்து ஒரு கட்டத்தில் எனக்கு பயமே வந்துவிட்டது. அவர் மிக தைரியமான ஒரு மனிதர். தீபா எனக்கு அக்காவாக நடித்திருக்கிறார். இது வித்தியாசமான படம், இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி.” என்றார்.
இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசுகையில், “கலன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் மிகப்பெரிய இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு ஆகியோருடன் இணைந்து கலந்துக்கொள்வது பெரும் மகிழ்ச்சி. உதயகுமார் அவர்கள் பாடல் வரிகளை குறிப்பிட்டு பேசினார். அவரையே வரிகள் இன்ஸ்பிரேஷன் செய்கிறது என்றால் நிச்சயம் பாடல்கள் அனைத்து மக்களையும் சென்றடைந்து வெற்றி பெறும் என்று தெரிகிறது. இப்போது அவர் தேசிய விருது குழுவில் இருக்கிறார், அதன் மூலம் பலரை தேசிய விருதுகளுக்காக தேர்வு செய்திருக்கிறார். அவர் இன்று தனது வாழ்த்து மூலமாக கலன் படத்திற்கு தேசிய விருது கொடுத்துவிட்டார்.
இயக்குநர் வீரமுருகன் கிடுகு போன்ற படங்களை எடுத்து தனது வீரத்தை நிரூபித்தார். கிடுகு படத்தினால் அவர் பல பிரச்சனைகளை எதிர்கொண்டார். சிறைக்கு செல்ல வேண்டிய சூழல் கூட ஏற்பட்டது. ஆனால், அந்த படம் திரையரங்குகளில் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மற்றவர்கள் மிக சாதாரணமாக பயணிக்க கூடிய தமிழ் சினிமாவில் வீரமுருகன் காலை கட்டிக்கொண்டு ஓடக்கூடிய நிலையில் இருக்கிறார். காரணம், அவரது நோக்கம் அப்படிப்பட்டது, அவர் எடுக்கும் படங்கள் அப்படிப்பட்டது. நம் திரைப்படங்களில் தேசியப்பற்று பற்றி பேசினார்கள், பிறகு திராவிட இயக்கங்கள் வந்த பிறகு கடவுளுக்கு எதிரான படங்கள் எடுக்கப்பட்டது. பிறகு ஏபி நாகராஜன் சாமி படங்கள் எடுத்தார். நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் திருப்பதி சென்று வந்ததால் அவரை திராவிட கழகத்தில் இருந்து நீக்கினார்கள். அது நல்லது தான் அதனால் தான் அவர் பல ஆன்மீக படங்களில் நடித்தார். இப்படி திரைப்படங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு மாற்றங்களை சந்தித்து வருகிறது. தற்போது சாதியை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு தத்துவம், அந்த கருத்தில் நம்பிக்கையாக இருக்கிறார்கள். அதுபோல் இயக்குநர் வீரமுருகன், குருமூர்த்தி உள்ளிட்டவர்கள் எல்லாம் ஒரு குழுவாக இருக்கிறார்கள், அவர்கள் சேர்ந்து தான் கிடுகு படத்தை எடுத்தார்கள். அவர்களை நாம் ஆதிரிக்க வேண்டும். இப்போது பலர் தங்களை தானே விளம்பரப்படுத்தி கொள்கிறார்கள். ஒரு சாதி வளையத்தையும், ஊடக வளையத்தையும் அவர்களே உருவாக்கி அதன் மூலம் விளம்பரப்படுத்தி கொள்கிறார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில், இவர்களை யார் விளம்பரப்படுத்த வேண்டும், நாம் தான் செய்ய வேண்டும். அதனால், தான் நான் இங்கே வந்திருக்கிறேன், இவர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன்.
இப்போது கடவுள் இல்லை என்று சொன்னால் புரட்சி, கடவுளை கிண்டல், கேலி செய்தால் புரட்சி. அதுபோன்ற சூழலை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால், இந்த படத்தில் இடம்பெற்ற பக்தி பாடல் மிக சிறப்பாக இருந்தது. அதேபோல், படத்தில் பேசப்பட்ட வசனங்கள் மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக, “எங்களுக்கு மருது சகோதர்களை தெரியும், பெருந்தலைவர் காமராஜரை தெரியும், வீரன் அழகு முத்துக்கோளை தெரியும்” என்று சொல்லும் வசனம் மிக சிறப்பு. இவர்களை எல்லாம் தமிழ்நாடு தெரிந்துக் கொள்ள வேண்டும். இவர்கள் சாதி தலைவர்கள் அல்ல, சாதித்த தலைவர்கள். முத்துராமலிங்க தேவர் ஒரு குறிப்பிட்ட சாதி தலைவர் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை, அவர் நேதாஜியின் சீடர், தென்னக போஸ் என்று சொல்லக்கூடியவர். காமராஜர் தேசிய தலைவர், தியாக சுடர் ஆனால் அவரை சாதி தலைவராக பார்க்கிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழ்நாடு தலைவர்கள் இல்லை என்றால், வேறு யார்? வேறு ஒருவரை சொல்கிறார்கள், அவர் தமிழரே இல்லை. அம்பேத்கர் சாதி தலைவராக சுறுக்குகிறார்கள், ஆனால் அவர் தேசிய தலைவர், இந்த நாட்டுக்கு தலைவர், என்ற கருத்து கொண்டவர்கள் வீரமுருகன். அதுவும் தமிழ்நாட்டில் கடவுளை யார் வேண்டுமானாலும் கேலி செய்யலாம், அதுவும் இந்து கடவுள் என்றால் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கேலி செய்யலாம், என்ற சூழல் இருக்கிறது. அப்படிப்பட்ட சூழல்களை மாற்றியமைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் வீரமுருகன், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு என் வாழ்த்துகள். இந்த படம் மக்களிடம் சேர வேண்டும், மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும், நீங்கள் திரையுலகிற்கு வலு சேர்ப்பீர்கள், உங்களுக்கும் பேர் புகழ் கிடைக்க வேண்டும், என்று அண்ணாமலையாரை வழிபட்டு வணங்கிக் கொள்கிறேன், நன்றி.” என்றார்.
நடிகர் சம்பத்ராம் பேசுகையில், “கலன் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. நான் இந்த படத்தில் நடிக்க முக்கிய காரணம் என் நண்பர் நடிகர் மணிமாறன் தான். அவர் நடிக்கும் படங்களில் எனக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்து வருகிறார், அதற்கு நண்பர் மணிமாறனுக்கு நன்றி. விரைவில் அவர் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார், அவர் இயக்குநராக வெற்றி பெற வேண்டும். இந்த படத்தில் என் காட்சிகளை ஒரே நாளில் படமாக்கினார்கள். இதுபோன்ற இயக்குநர் சினிமாவுக்கு தேவை. படம் தொடங்கி மூன்று மாதங்களில் வெளியீட்டுக்கு தயராகி விட்டது. இது தற்போதைய சூழலில் பெரிய விசயம். அப்புகுட்டி உடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றி.” என்றார்.
இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் பேரரசு பேசுகையில், “இயக்குநர் வீரமுருகன் பேசும் போது நித்தியானந்தாவுடன் நான் பேசியதாக சொன்னார். நேரில் பேசவில்லை ஆன்லைனில் பேசினேன் என்பதை இங்கு தெளிவுப்படுத்தி விடுகிறேன், இல்லை என்றால் அவருக்கும் எனக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது, என்று கூறி என் மீது விசாரணை கமிஷன் வைத்துவிட போகிறார்கள். அதேபோல், தீபா பேசும் போது பெண்களை படைத்த பிரம்மன், அதில் விஷயத்தை கலந்ததாக சொன்னார், அவர் சொன்னதில் ஒரு உண்மை இருக்கிறது. பாம்பு தனது வாழ்நாளில் விஷத்தை கக்கவில்லை என்றால், அதை தான் மாணிக்கமாக கக்கும். அப்படி தான் பெண்களிடம் இருக்கும் விஷமும் சக்தி வாய்ந்தது. மகாபாரதத்தில் பாஞ்சாலி தன் சேலையை உருவிய போது தான் விஷத்தை கக்கினார், அதனால் தான் பாஞ்சாலி சபதம் உருவானது. அதேபோல், கணவருக்கு கட்டுப்பட்டிருந்த கண்ணகி, தன் கணவருக்கு எதிராக நடந்த அநீதிக்கு எதிராக விஷத்தை கக்கினார், அதனால் மதுரை அழிந்தது. எனவே, பெண்கள் விஷத்தை தினமும் கக்க கூடாது, அப்படி செய்தால் அந்த விஷத்திற்கு மதிப்பில்லாமல் போய்விடும். ஆக மொத்தம் பெண்களிடம் விஷம் இருக்கிறது, அது தான் அவர்களின் பலம் என்பதை தீபா இங்கே பதிவு செய்திருக்கிறார்.
முருகன் என்றால் அழகு மட்டும் அல்ல வீரம் தான் முருகன். அழகு என்பது வள்ளிக்கும் தெய்வானிக்கும் பிடிக்கும், மக்களுக்கு பிடித்தது வீரம் தான். அதனால் தான் வீரமுருகன் கிடுகு படம் எடுத்திருக்கிறார். கோட்ஸே படம் எடுத்திருக்கிறார். ஆனால், அவருக்கு இருக்கும் வீரம் அரசுக்கு இல்லை, அதனால் தான் அந்த படத்தை வெளியிடவில்லை. ஒருவருடைய கருத்தை பார்த்து பயப்பட கூடாது, எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களின் கருத்துக்கு ஆளும் கட்சி மதிப்பளிக்க வேண்டும். என் குருநாதர் இராம நாராயணன் சார் திமுகவில் எம்.எல்.ஏ-வாக இருந்த போது, ஆடி வெள்ளி, துர்கா, தைப்பூசம் உள்ளிட்ட பல பக்தி படங்களை எடுத்தார். அப்போது கலைஞர் அவருக்கு சுதந்திரம் கொடுத்தார். அவர் கட்சியில் இருந்தாலும், அவருடைய தொழில், அவருடைய கருத்து என்று அவருக்கு சுதந்திரம் கொடுத்தார். அதுபோல், இவரையும் விட்டுவிட வேண்டும், அப்போது தான் இவரது கருத்துகள் மக்களிடம் சென்றடையும். இங்கு போடப்பட்ட வேட்டையாட வந்துட்டாள் வெற்றுடையாள் என்ற பாடல் உணர்வுப்பூர்வமாக இருந்ததோடு, நமக்கே ஏதோ செய்வது போல் இருந்தது. முன்பு எல்லாம் சாமி படங்களின் போது தியேட்டரில் சாமி வந்து ஆடுவார்கள், அப்போது அதை நான் நம்பாமல், நானே தியேட்டருக்கு சென்று பார்த்தேன். அப்போது புதுமண தம்பதி ஒருவர் ஆடி வெள்ளி படத்திற்கு வந்தார்கள், அவர்களை நான் கவணித்துக் கொண்டிருந்த போது, பாடல் வந்ததும் அந்த பெண் ஆடினார், அதை பார்த்த பிறகு தான் அதை உண்மை என்று நம்பினேன். அப்படி ஒரு பாடல் தான் இந்த பாடல். பாடலில் அம்மன் வேடத்தில் நடித்தவர் மிக சரியான தோற்றம். கே.ஆர்.விஜயா அவர்களுக்கு பிறகு அம்மன் வேடம் வர்ஷா என்ற அவருக்கு மிக சரியாக பொருந்தியிருக்கிறது. அப்புகுட்டி வளர்ச்சி மிக சிறப்பானது. தேசிய விருது பெற்ற அனைத்து நடிகர்களுக்கும் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ளுகிறேன். நம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய குறை என்னவென்றால், இந்திய அளவில் சிறந்தவர் சிவாஜி கணேசன், ஆனால் அவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. அதை கிடைக்கவில்லை என்று சொல்ல கூடாது, கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால், இனி யார் தேசிய விருது வாங்கினாலும் சரி அது சிவாஜி சாருக்கு சமர்ப்பணம் தான். கலன் படம் குறுகிய நாட்களில் சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். அது இயக்குநரால் மட்டுமே சாத்தியமாகும், அந்த வகையில் இயக்குநர் வீரமுருகனுக்கு பாராட்டுகள்.
சமீபகாலமாக பல படங்கள் வெற்றி பெறுகிறது, தோல்வியடைகிறது. ஆனால், இன்று ஒரு படத்தின் தோல்வியை கொண்டாடும் போக்கு அதிகரித்திருக்கிறது. நன்றாக இருக்கும் படத்தை நன்றாக இல்லை என்று சொல்கிறார்கள். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு புளூ சட்டை மாறன் இருந்தார், ஆனால் இன்று பல நூறு புளூ சட்டை மாறன்கள் வந்துவிட்டார்கள். விமர்சனம் என்ற பெயரில் படங்களை மட்டமாக பேசுகிறார்கள். இன்று அதிகமான யூடியுப் சேனல்கள் வந்துவிட்டது, அவர்கள் யார், என்று கூட தெரிவதில்லை. இஷ்ட்டத்திற்கு ஒரு படத்தை பற்றி பேசுகிறார்கள். விமர்சனத்திற்கு உட்பட்டது தான் சினிமா, ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும். ஒரு படத்தை பார்க்க நினைப்பவரை கூட பார்க்கவிடாமல் தடுக்கிறார்கள். ஒரு நடிகர் படத்தை மற்ற நடிகரின் ரசிகர்கள் கேவலப்படுத்துவது, என்பது எல்லாம் மோசமான செயல். ஒரு படத்தை எடுத்து முடிப்பது எவ்வளவு பெரிய கஷ்ட்டமோ அதைவிட கஷ்ட்டம் அந்த படத்தை வெளியீட்டுக்கு கொண்டு வருவது. அப்படி ஒரு கஷ்ட்டமான செயலை, தங்களது பொருளாதாரத்தை இழந்து செய்யும் போது விமர்சனம் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல் முறையற்றதாக இருக்கிறது. எனவே இதுபோன்ற விசயங்களை இனி செய்யாதீர்கள்.
கலன் படத்தில் ஒரு நல்ல விசயத்தை சொல்லியிருக்கிறார்கள். இதை சாமி படம் என்ற முத்திரை குத்தாதீர்கள். இது சமூகத்திற்கான படம். இன்று நாடே போதையிலும், கஞ்சா பழக்கத்திற்கும் மூழ்கியிருக்கிறது, அதற்கு எதிரான படம். அதில் பக்தியை கலந்திருக்கிறார்கள். பக்தி என்பது நம் வாழ்க்கையில் மிக முக்கியமானது. இன்றும் தேர்வு எழுதும் போது பிள்ளையார் சுழி போடுகிறோம், அது நம்பிக்கை. அந்த நம்பிக்கையை தடுக்க வேண்டாம். நல்ல விசயம் நடக்கும் என்று தான் நம்புவோம். அதுபோல் தான் பக்தி. ஆன்மீக பற்று கொண்டவர்கள் ஆன்மீகவாதிகள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நாந்திகர்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள், நம்பிக்கை உள்ளவர்கள் வணங்குகிறார்கள். இது சரி, ஆனால் நம்பிக்கை இருப்பவர்களை கேலி, கிண்டல் செய்வது போன்ற செயல்களை செய்பவர்கள் மனிதர்களே இல்லை. இங்கு இந்து மக்கள் கட்சி தலைவர் வந்திருக்கிறார். இப்படி ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்றால் இங்கு இந்து மதம் நசுக்கப்படுகிறது, அதை காக்க வேண்டும் என்பதால் தானே. மூட நம்பிக்கையிலேயே மிகப்பெரிய மூட நம்பிக்கை கடவுள் இல்லை என்று சொன்னால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்கள்,என்று நினைப்பது தான். மக்கள் வேடிக்கை பார்ப்பார்கள், ஆனால் ஓட்டு போட மாட்டார்கள். இன்று ஆட்டம் ஆடலாம். ஆனால் அந்த ஆட்டத்தை மக்கள் நசுக்கி விடுவார்கள். இந்த இளையதலைமுறை போதைக்கு அடிமையாகி எப்படி சீரழிகிறார்கள் என்பதை இந்த படம் சொல்வதோடு, அத்தகைய செயலுக்கு காரணமானவர்களுக்கு எதிரான படம், இளைஞர்களை நல்வழி படுத்துவதற்கான படம், போதைக்கு எதிரான படம் மொத்தத்தில் முழுக்க முழுக்க நாட்டுக்கு தேவையான படம். படத்தில் ஒரு வசனம் வருகிறது, “தர்மம் எங்கிருக்கிறதோ, நீதி எங்கிருக்கிறதோ, அரம் எங்கிருக்கிறதோ, யாருக்குள் இருக்கிறதோ அவர்கள் தான் பெரியார், முத்துராமலிங்க தேவர்” என்று பலர் பெயர்களை சொல்கிறார்கள். பெயர்களே தேவையில்லை, யாரிடம் நீதி, தர்மம், நியாயம் இருக்கிறதோ, ஒட்டு மொத்த மக்களை யார் நேசிக்கிறாரோ அவர் தான் பெரியார், என்று கூறி படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் இணை தயாரிப்பாளர் நன்றி கூறி பேசுகையில், “கலன் திரைப்பட பாடல்கள் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்து எங்களை வாழ்த்திய ஜாம்பவான்களுக்கு நன்றி. என் நண்பர்களுக்கு நன்றி. இந்த மேடையில் நிற்க கூடிய வாய்ப்பை கொடுத்த வீரமுருகன் அண்ணனுக்கு நன்றி. ஊடகங்கள் குப்பையை வைரம் என்று சொன்னாலும், வைரத்தை குப்பை என்று சொன்னாலும் மக்கள் நம்புவார்கள். நீங்கள் வைரத்தை வைரமாகவே காண்பிக்க வேண்டும். இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க கூடிய பொறுப்பு உங்களிடம் தான் இருக்கிறது. அனைவருக்கும் நன்றி வணக்கம்.” என்றார்கள்.