கோழிப்பண்ணை – செல்லத்துரை விமர்சனம்
கதை…
ஐஸ்வர்யா தத்தாவின் கணவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். கணவர் ஊரில் இல்லாததால் இவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்..
இதனை அறிந்து கொண்ட கணவர் இவர்களை தீர்த்து கட்ட முயற்சிக்கிறார்.. எனவே குழந்தைகளையும் கணவனையும் தவிக்க விட்டு கள்ளக்காதனுடன் ஓடி விடுகிறார் ஐஸ்வர்யா தத்தா..
அம்மாவும் ஓடி விட்ட நிலையில் அப்பாவும் இவர்களை துரத்தி விடுகின்ற சூழ்நிலையில் நாயகன் ஏகன் மற்றும் அவரது தங்கை சத்யதேவி இருவரும் இவர்களின் பெரியப்பா யோகி பாபு வளர்ப்பில் வளர்கின்றனர்.
அதன் பிறகு இவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்ன? தந்தை தாய் இல்லாத இந்த குழந்தைகள் என்னென்ன போராட்டங்களை சந்தித்தனர் என்பதை வலிகளுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி..
நடிகர்கள்…
நாயகன் ஏகன்… முதல் படம் என்பது தெரியாத அளவிற்கு தன் நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.. தங்கைக்காக தன் காதலைக் கூட உதறித் தள்ளி விட்டு உழைப்பு உழைப்பு என ஓடும் செல்லத்துரை இளைஞராக ஜொலிக்கிறார்.
அண்ணனுக்கு போட்டியாக சத்தியதேவியும் நடிப்பில் நல்ல மதிப்பெண் பெறுகிறார்.. அம்மா அப்பா இல்லாத தனக்கு எல்லாமே அண்ணன் தான் என்ற சூழ்நிலையில் வளரும் இவர் காதலைக் கூட உதறிவிட்டு அண்ணனுக்காக வாழும் பாசமலர் தங்கையாக சவால் விடுத்துள்ளார் சத்யதேவி..
இதுவரை ஏற்காத கேரக்டரில் யோகி பாபு.. எந்த இடத்திலும் காமெடி செய்து விடக்கூடாது என்ற சூழ்நிலையில் அடக்கி வாசித்திருக்கிறார்.. இரண்டு அடி உயரம் உள்ள குட்டி புலி என்ற நபரும் சிரிப்புக்கு நான் கேரண்டி என வெளுத்துக்கட்டி இருக்கிறார்..
நாயகி பிரியடா இரவின் நிழல் படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஒரு அருமையான கேரக்டரை செய்து இருக்கிறார்..
தன் தங்கையை பாசமாக தாங்கும் இது போன்ற ஒரு நபர் கணவனாக கிடைத்தால் தன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என எண்ணி அவருக்காக வழிந்து சென்று பேசும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.. அது போல திருமணம் செய்து கொள்ளும் முன்னரே அந்த குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணும் இவரது எண்ணங்கள் காட்சிகள் சிறப்பு..
சத்தியதேவியின் காதலனாக வரும் லியோ சிவகுமாரும் தன் கேரக்டரில் பளிச்சிடுக்கிறார்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
பாடல்கள் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலத்தை கொடுத்துள்ளது.. பாடல்களை வைரமுத்து கங்கை அமரன் விஜய் ஏகாதேசி உள்ளிட்ட பலர் எழுதி இருக்கின்றனர்.. கையேந்தும் கடவுள் என்ற பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்.. வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதமான இசையை கொடுத்திருக்கிறார் ரகு நந்தன்..
தேனி மாவட்ட ஒட்டு மொத்த அழகையும் கேமராவில் படம் பிடித்து கண்களுக்கு விருந்தளித்து உள்ளார் ஒளிப்பதிவாளர் அசோக்ராஜ்..
கஞ்சா போதை வன்முறை நிறைந்த தமிழ் சினிமாவில் அதுபோன்ற எந்த ஒரு காட்சியும் வைக்காமல் முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்க வைக்கும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி..
பெற்றோர் புறக்கணிப்பு.. அண்ணன் தங்கை பாசம்.. உறவினரின் உதவி கண்ணியமான காதலன்.. இப்படியாக ஒவ்வொரு கேரக்டர்களையும் சிறப்பாக தேர்ந்தெடுத்து கோழி பண்ணை செல்லதுரையை ஒரு நல்ல படிப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி..