கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே நடந்த ’CorporArt’24’ !!
பிரபல கலை இயக்குநர் உமேஷ் ஜே. குமார் மற்றும் இன்னோவேட்டிவ் கிரியேட்டிவ் இயக்குனர்/ ஈவண்ட்ஸ் ராகினி முரளிதரன் ஆகியோருக்குச் சொந்தமான, சென்னையின் முன்னணி ஈவண்ட்ஸ் மேலாண்மை நிறுவனங்களில் ஒன்று Renaissance Events. அரசு நிகழ்வுகள், கார்ப்பரேட் நிகழ்வுகள், தயாரிப்பு வெளியீடுகள், ஆடியோ வெளியீடுகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கான விழாக்களை நடத்தும் நிறுவனங்களில் Renaissance Events மிகவும் விரும்பப்படும் ஒன்றாகும். சென்னையின் மிகப்பெரிய இன்டர் கம்பெனி கல்ச்சுரல் விழாவான ‘CorporArt’-ஐ நடத்துவதில் இந்நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. இந்த நிகழ்வின் இறுதிப் போட்டி நாளை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. இதில் சென்னையின் கார்ப்பரேட் சமூகத்தைச் சேர்ந்த சிறந்த திறமையாளர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
277-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் 4000-க்கும் மேற்பட்ட பணியாளர்களின் படைப்பாற்றலை இந்த நிகழ்வு ஒன்றிணைக்கிறது. கடுமையான தேர்வுக்குப் பிறகு 4000 பணியாளர்களில் இருந்து 650 இறுதிப் போட்டியாளர்கள் நாளை இறுதிப் போட்டியில் போட்டியிட உள்ளனர். இந்தப் போட்டி காலை 8:30 மணி முதல் இரவு 11:30 மணி வரை நடைபெறும். நிகழ்ச்சியில் பாடல், நடனம், புகைப்படம் எடுத்தல், குறும்படங்கள், பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
கார்ப்பரேட் உலகில் போட்டி மற்றும் படைப்பாற்றலின் உணர்வைக் கொண்டாடும் வகையிலும், கார்ப்பரேட் ஊழியர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்வு உள்ளது.
இறுதி சுற்றில் பங்கேற்பாளர்கள் இடம்பெற ப்ரிலிம்ஸ் மற்றும் அரையிறுதி உட்பட பல சுற்றுகளை வெற்றி பெற வேண்டும். கண்கவர் செட், உலகத்தரம் வாய்ந்த ஒலி, விளக்குகள் மற்றும் ஒவ்வொரு பிரிவிற்கும் பிரபல நடுவர்கள் குழு என உலகத்தரத்திலான நிகழ்வாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கிராண்ட் ஃபைனல் அனுபவம் இந்த நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பாளர்கள் பாராட்டக்கூடிய ஒரு நட்சத்திர நாளாக மாற்றும்.
இந்த கான்செப்ட்டை 2011ஆம் ஆண்டில் இருந்து வடிவமைத்து முன்னெடுத்து, நிர்வகித்த ராகினி முரளிதரன் கூறுகையில், ”கல்லூரி நாட்களில் கலாச்சார நிகழ்வுகளில் எப்படி தங்கள் தனித்திறமையை காட்டி மகிழ்ந்தார்களோ அதுபோலவே கார்ப்பரேட் ஊழியர்கள் தங்கள் மகிழ்ச்சியை ‘CorporArt’ நிகழ்வில் மீட்டெடுக்க முடியும். பணிச்சுமைக்கு மத்தியில் மன அழுத்தத்தைத் குறைக்கவும், தங்கள் ஆர்வங்களைத் தொடரவும் ஒரு அரிய வாய்ப்பு” என்கிறார்.
நிறுவனங்களுக்கிடையிலான இந்த கலாச்சார விழா மூலம் ஊழியர்கள் தங்கள் தினசரி நெருக்கடியிலிருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்வதற்குமான வெளியாக இது அமைகிறது. நட்சத்திரங்களின் பங்கேற்பு மற்றும் சிறந்த நிகழ்ச்சிகளுடன், சென்னையின் கலாச்சார நாட்காட்டியில் ஒரு முக்கிய நிகழ்வாக ’CorporArt’ அமையும் என உறுதியளிக்கிறது.