செய்திகள்

சிறந்த இயக்குந’ருக்கான விருதை வென்ற ” இயக்குநர் நித்திலன் சாமிநாதன்”

மெல்போர்னில் நடந்த இந்தியன் ஃபிலிம் பெஸ்டிவலில் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் ‘சிறந்த இயக்குந’ருக்கான விருதை வென்றிருக்கிறார்!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ படத்திற்காக, மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் (Indian Film Festival) இயக்குநர் நித்திலன் சாமிநாதன், ‘சிறந்த இயக்குநர்’ விருதை வென்றுள்ளார். இந்த விஷயம், படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய திரையுலகில் மதிப்பு மிக்க இயக்குநர்களான கரண் ஜோஹர் (ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி), விது வினோத் சோப்ரா (12த் ஃபெயில்), இம்தியாஸ் அலி (அமர் சிங் சம்கிலா), கபீர் கான் (சந்து சாம்பியன்), ராஜ்குமார் ஹிரானி (டன்கி), மற்றும் ராகுல் சதாசிவன் (பிரமயுகம்) ஆகியோரின் படங்களும் இந்தப் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது குறித்து நன்றி தெரிவிக்கும் விதமாக நித்திலன் சாமிநாதன் பேசியிருப்பதாவது, “மகிழ்ச்சியில் எனக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை. எங்களின் ‘மகாராஜா’ திரைப்படம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதைப் பார்ப்பது எங்கள் படக்குழுவுக்கு நெகிழ்ச்சியான தருணம். இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய விஜய்சேதுபதி மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்த சாதனை சாத்தியமில்லை. இந்த வெற்றிக்கு அடித்தளமிட்ட குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும், திரையுலகில் உள்ள எங்கள் நண்பர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் நன்றி. இந்த அங்கீகாரத்திற்காக, மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவின் நடுவர் மன்றத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இதுபோன்ற பாராட்டுகள், எதிர்காலத்தில் மேலும் பல நல்ல படங்கள் இயக்க என்னை ஊக்குவிக்கிறது” என்றார்.

தனித்துவமான, கதை சார்ந்த, சிறிய பட்ஜெட் படங்களும் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு சான்றாக ‘மகாராஜா’ பட வெற்றி அமைந்திருக்கிறது. இது சினிமாவை நேசிக்கும் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமல்லாது பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை செய்திருக்கிறது ‘மகாராஜா’.

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படம் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படம் மற்றும் நூறு கோடி ரூபாய் வசூலித்த விஜய்சேதுபதியின் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *