திரை விமர்சனம்

இந்தியன் 2 விமர்சனம்.. லட்சியவாதி

சித்தார்த், பிரியா பவானிசங்கர், ஜெகன் மற்றும் ரிஷிகாந்த் ஆகிய நால்வரும் நண்பர்கள்.. இவர்கள் பார்க்கிங் டாக்ஸ் என்ற பெயரில் யூடியூப் நடத்தி வருகின்றனர்.. இதன் மூலம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை வீடியோ பதிவிட்டு குற்றங்களை மக்களுக்கு சொல்கின்றனர்..

என்னதான் குற்றவாளிகளை போலீஸ் பிடித்தாலும் ஒரு சில தினங்களில் அவர்கள் ஜாமினில் வெளியே வந்து மீண்டும் குற்றங்கள் நடக்கிறது.. இதை தடுக்க யாருமே இல்லையா.? என்ற போது தான் இந்தியன் தாத்தா என்ற ஒருவர் இருந்தார் அவரை மீண்டும் அழைக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கம்பேக் இந்தியன் என்று அழைக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்தியன் தாத்தா கமல் மீண்டும் இந்தியாவுக்கு வருகிறார்.. அவர் மீண்டும் இந்தியாவுக்கு வந்து லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை களை எடுக்கிறார்.. இதன் பிறகாவது இந்தியா சுத்தமானதா? என்ற நிலையில் ஒரு கட்டத்தில் கோ பேக் இந்தியன் என ஒரே கமலுக்கு எதிராக ஊரே திரள்கிறது.. அப்படி என்னதான் நடந்தது? என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.

கமல் படத்தில் எத்தனை நடிகர்கள் இருந்தாலும் கமலை மிஞ்சிட முடியாது.. இந்தியன் தாத்தாவாக கெத்து காட்டி இருக்கிறார்.. இந்தியன் பட முதல் பாகத்தில் ஒரே கெட்ப்பில் வந்து சென்றவர் இந்த மொபைல் உலகத்தில் அவரால் எளிதாக அடையாளம் கண்டுவிட முடியும் என்பதால் பல்வேறு கெட்டப்புகளில் வந்து லஞ்ச அதிகாரிகளை களை எடுக்கும் சகலகலா வல்லவனாக ஜொலிக்கிறார் கமல்..

சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், பாபி சிம்ஹா பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் இருந்தாலும் கதை ஓட்டத்திற்கு மட்டுமே உதவி இருக்கின்றனர்.

சமுத்திரக்கணி, விவேக், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், ரேணுகா, மனோபாலா, எஸ்.ஜே.சூர்யா, தம்பி ராமையா, காளிதாஸ் ஜெயராம், இமான் அண்ணாச்சி, வினோத் சாகர், மாரிமுத்து உண்டு என சொல்லிக் கொள்ளலாம்..

வில்லன்களில் குல்ஷன் குரோவரும், ஜாகிர் ஹுசைனும் மிரட்டல்.. ஜாகிர் ஹுசைன் ஓட்டும் அந்தக் குதிரை ஓட்டம் செம..

இந்தியன் 2 என்று நினைத்தாலே நிச்சயம் இந்தியன் படத்தின் முதல் பாகம் நினைவுக்கு வரும்.. எனவே நிறைய ஒப்பீடுகளை நம்மால் பார்க்க தோன்றுகிறது.. முக்கியமாக ரகுமான் அனிருத் பாடல் ஒப்பீடு.. ரகுமான் அளவுக்கு அனிருத் தேர்ச்சி பெறவில்லை..

பின்னணி இசையில் கவனம் எடுத்து இருக்கிறார்.. மேலும் முக்கியமாக கம் பேக் இந்தியன் என்ற பாடலும் தாத்தா வராரு கதற விட போறாரு என்ற பாடல் நிச்சயம் தாளம் போடவும் ஆட்டம் போடவும் வைக்கிறது..

சங்கர் படங்கள் என்றால் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது.. அவருக்கு உற்ற துணையாக இருந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்..

இந்தியன் தாத்தாவுக்கான ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவு, அனல் அரசு, பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா உள்ளிட்ட பல பைட் மாஸ்டர்கள் செய்திருக்கின்றனர்.. எனவே ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்..

ஸ்ரீதர் பிரசாத் எடிட்டிங் செய்திருக்கிறார்.. இவர் மட்டும் தன் வேலையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு காட்சிகளை ட்ரீம் செய்திருந்தால் படத்தில் விறுவிறுப்பு கூடியிருக்கும்..

முத்துராஜ் கலைவண்ணம் படத்தின் பிரம்மாண்டத்திற்கு மெருகூட்டி இருக்கிறது.. ஜாகிர் ஹுசைனின் தங்க மாளிகை ஜொலிப்பில் நம்மை வியக்க வைக்கிறது..

ஷங்கரின் ஆரம்ப கால படங்களில் சுஜாதா வசனங்களை எழுதி இருப்பார்.. அவர் தற்போது மறைந்துவிட்டார்.. ஷங்கருக்கு சுஜாதா போல வசனங்கள் இந்தப் படத்தில் போதவில்லை என்றே தோன்றுகிறது..

ஆனால் தன் மீதும் தன் திரைக்கையின் மீதும் முழு நம்பிக்கை வைத்து படத்தை பிரம்மாண்டத்தின் உச்சமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சங்கர்.. அவருக்கு உற்ற துணையாக லைக்கா சுபாஷ்கரனும் இணைந்திருக்கிறார்..

சமூகத்தில் ஒரு தற்கொலை என்ற போது கம் பேக் இந்தியன் என்று சொன்ன வார்த்தையை தன் வீட்டில் ஒரு தற்கொலை என்ற போது கோ பேக் இந்தியன் என்று வரும் காட்சிகளை நம்ப முடியவில்லை.. ஏற்கவும் முடியவில்லை..

நாம் எப்போதும் அரசியல்வாதிகளையும் அரசு அதிகாரிகளை மட்டுமே குறை சொல்லிக் கொண்டிருக்காமல் நம் வீட்டிலும் அரசு ஊழியர்கள் இருந்தால் லஞ்சம் கொடுப்பதையும் லஞ்சம் வாங்குவதையும் நிறுத்த வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

முதலில் நம் வீட்டை சுத்தம் செய்வோம்.. அதன் பிறகு நாட்டை சுத்தம் செய்வோம் என்ற ஒரு களப்பணியை இந்த படத்தில் எடுத்து இருப்பது பாராட்டுக்குரியது..

ஆக இந்தியன் 2.. லட்சியவாதி