திரை விமர்சனம்

தண்டுபாளையம் திரை விமர்சனம்

உண்மை சம்பவத்தை திரையில் பார்த்தாலே மனம் கதையோடு இன்னும் நெருக்கமாகி விடும். இதுவோ கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று வீடு புகுந்து நடத்தும் வன்முறைக் கதை. அதை திரைப்படுத்திய விதத்தில் மனதுக்குள் திகில், அதேநேரம் விழிப்புணர்வுக்கான எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஆணியடித்து சொல்லியிருக்கிறார்கள்.


பெங்களூர் மற்றும் சுற்றுப்பகுதியில் வீடு புகுந்து கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவத்தை ஈவிரக்கமே இ்ல்லாமல் தண்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு கூட்டம் நடத்துகிறது. அந்த கூட்டத்தை போலீஸ் அதிகாரி கோர்ட்டில் நிறுத்தி தூக்கு தண்டனை பெற்று தருகிறார்.

மக்களை பயமுறுத்திய கூட்டம் ஒழிந்தது என்று போலீசார் எண்ணும் நிலையில் அதேபோல் இன்னொரு கூட்டம் புறப்பட்டு அட்டூழியம் செய்கிறது. அந்த கூட்டத்தை பிடிக்க புதிய போலீஸ் அதிகாரி களம் இறங்குகிறார் அவரால் அந்த கூட்டத்தின்ஆணிவேரை அறுக்க முடிந்ததா என்பது ரத்தம் தெறிக்கும் திகுதிகு பரபர திரைக்கதை.

கர்நாடக பகுதியில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இக்கதை உருவாகி இருக்கிறது. ஏற்கனவே கன்னடத்தில் படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் திரைக்கு வந்திருக்கிறது.தமிழில் போனசாக சோனியா அகர்வால், வனிதா ஆகியோர் இப்படத்தில் இணைந்திருக்கின்றனர். இவர்கள் நடித்த காட்சிகளை புதிதாக படமாக்கி தண்டுபாளையம் படக் கதையோடு இணைத்ததில் கூடுதல் திகிலும் விறுவிறுப்புமாய் பறக்கிறது படம்.

1996 முதல் 2001 வரை இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக சுமார் நாற்பது பேர் அடங்கிய குழு கர்நாடகத்தில் செய்த கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவங்கள், கேட்டாலே எவ்வளவு தைரிய மனதையும் நடுங்க வைப்பவை .

சோனியா அகர்வாலும் வனிதாவும் பெண் ரவுடிகள் கெட்டப்பில் வந்து திகிலூட்டுகின்றனர். கொலை செய்து விட்டு சாவகாசமாக இவர்கள் சுருட்டு புகைக்கும் காட்சியில் குலை நடுங்கி விடும். மேலதிகாரி வீட்டில் பாதுகாப்பு பணியில் இருக்கும் ராயல் பிரபாகரை வனிதா கழுத்தறுக்கும் அந்த தொடக்கமே தண்டுவடம் வரை பயத்தில் ஜில்லிட வைத்து விடுகிறது.

கூட்டத்தோடு வீட்டுக்குள் நுழையும் சுமா, பூஜா இருவரும் அங்கு இருக்கும் நகைகளையும் பொருட்களையும் கொள்ளை அடிப்பது அதேசமயம் உடன்வரும் ஆட்கள் அங்கிருக்கும் பெண்களை கற்பழித்து கொலை செய்வது என்று சகட்டுமேனிக்கு ரத்தக்களரி காட்சிகள் திரை தாண்டி தெறிக்கின்றன.

சுமா ரங்கநாத் பூஜா காந்தி இருவரும் தம் அடித்தபடி ரவுடித்தனத்தை அரங்கேற்றும் இடங்கள் வன்முறையின் உச்சம். இவர்களுடன் வரும் அடயாட்கள் பலாத்காரத்தை பலகாரம் போல் அணுகும் இடங்கள் நெஞ்சுக்குள் குபீர் தீப்பந்து.
போலீஸ் அதிகாரியாக வரும் டைகர் வெங்கட் புது ஸ்டைலில் அதிரடி காட்டுகிறார். சுமா ரங்கநாத்தின் ரவுடி கூட்டத்தை துரத்தி சென்று அவர்களை என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளும் இடத்தில், இவரின் அந்த ஆக்ரோஷ ஆவேசத்துக்கு எழுந்து தைதட்ட வைக்கிறது.

சீனுக்கு சீன் ரவுடியிசம் பலாத்காரம், கொலை, கொள்ளை என்று காட்சிகள் ராவாக நகர்கின்றன. அடிக்கடி வரும் பலாத்கார காட்சிகள் ஓவர்டோஸ். முமைத்கான் ஒரு கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார்.  டைகர் வெங்கட் தயாரிக்க அவருடன் இணைந்து கே டி நாயக் படத்தை இயக்கியிருக்கிறார். கொலை கொள்ளை மயமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அது மக்களுக்கு விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது.

அறிமுகம் இல்லாதவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அது தங்கள் உயிருக்கு ஆபத்தாக நேரும் என்பதை மறைமுகமாக கதை உணர்த்துகிறது.

ஜித்தன் கே ரோஷன் இசையமைத்திருக்கிறார். பி இளங்கோவன் ஒளிப்பதிவில் திகில் கொட்டிக் கிடக்கிறது.
தண்டுபாளையம், நெஞ்சுக்குள் திகில் விதைத்தாலும் அப்பாவி மக்களை உஷார்படுத்தியதில் காலத்துக்கேற்ற வரவு தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *