திரை விமர்சனம்

மிஸ்டர் & மிஸஸ் மஹி பட விமர்சனம்

தாழ்வு மனப்பான்மை கொண்ட நாயகன் ராஜ்குமார் ராவுக்கும், மருத்துவரான நாயகி ஜான்வி கபூருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் கிரிக்கெட் விளையாட்டு மீது ஆர்வம் இருப்பது தெரிய வர, அந்த விளையாட்டு அவர்களை சந்தோஷமாய் இணைக்கிறது.

எப்படியாவது, எதிலாவது சாதித்து வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட விட வேண்டும் என்று துடிக்கும் நாயகன் ராஜ்குமார் ராவ், இப்போது கிரிக்கெட்டை தன் முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறார். தன்னால் கிரிக்கெட் விளையாட்டு வீரராக முடியவில்லை என்றாலும், கிரிக்கெட்டில் ஆர்வமும், நன்றாக விளையாடவும் செய்யும் தனது மனைவிக்கு முறையான பயிற்சியளித்து அவரை சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக்கி, அதன் மூலம் சிறந்த பயிற்சியாளர் என்று தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார். அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது கதைக்களம்.

தாழ்வு மனப்பான்மையுடன், விரக்தியாக வாழ்ந்து வரும் மனிதர்களை நடிப்பில் அற்புதமாக பிரதிபலித்திருக்கிறார், ராஜ்குமார். சோகம், மகிழ்ச்சி, ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளும் முகத்தில்அளவாக, அழகாக வந்து போகிறது.
மஹிமா குப்தா என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஜான்வி கபூர், படத்தில் கேரக்டராகவே மாறிப்போகிறார். கவர்ச்சியான கதாபாத்திரங்கள் மட்டும் இன்றி, நடிக்கக் கூடிய கதாபாத்திரங்களையும் தன்னால் நேர்த்தியாக செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். கணவர் செய்யும் அனைத்தும் தனக்காக அல்ல, அவருக்காக என்று தெரிய வரும் இடத்தில் அம்மணி நடிப்பில் பொன்மணியாக பிரகாசிக்கிறார்.
நாயகனின் அம்மாவாக ஷரினா வஹாப். உண்மையான மகிழ்ச்சி என்றால் என்ன என்பதை மகனுக்கு விளக்கும் அந்த ஒரு காட்சியே போதும் இவருக்கு.

ஒளிப்பதிவாளர் அனய் ஓ கோஸ்வாமியின் கேமரா கிரிக்கெட் விளையாட்டின் போது மாயாஜாலம் புரிகிறது.
படத்தின் பாடல்கள் கதையோட்டத்துடன் இணைந்து ரசிக்க வைக்கிறது.

உண்மையான மகிழ்ச்சி என்றால் என்ன?, அது எதில் கிடைக்கும்? என்ற ஒரு வரி லைனை வைத்துக்கொண்டு எல்லா மொழிக்கும் பொருந்தும் கதையை இயக்கிய விதத்தில் ரசிகனையும் அந்த மகிழ்ச்சிக்குள் இணைத்துக் கொண்டு விடுகிறார், இயக்குனர் சரண் சர்மா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *